கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதன் காரணமாக கரும்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. கடும் வறட்சி. உற்பதிச் செலவினம் அதிகரிப்பு, கட்டுபடியான கொள்முதல் விலை இல்லாத துயரம் போன்றவற்றால் நாட்டில் கரும்பு உற்பத்திப் பரப்பும் குறைந்துகொண்டே வருவது கவலை அளிக்கிறது.
இதனால் தேசிய அளவில் சர்க்கரை உற்பத்தி பெருமளவில் சரிந்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டில் 331.61 இலட்சம் டன் சர்க்கரை உற்பத்தி ஆன நிலையில், 2019 இல் 268 இலட்சம் டன் மட்டுமே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. சுமார் 40 விழுக்காடு சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2011-12 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 23 இலட்சம் டன்னாக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 8.50 இலட்சம் டன்னாக குறைந்துவிட்டது.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 1500 கோடி ரூபாயை வழங்காமல் கடந்த 4 ஆண்டுகளாக அலைக்கழிப்பதால் கரும்பு சாகுபடி செய்யும் எண்ணத்தையே விவசாயிகள் இழந்து வருகின்றனர்.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தற்போது அளிக்கும் வேளாண் கடன் போதுமானது அல்ல.
ஏனெனில் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. 10 ஏக்கர் சாகுபடி செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் கடன் வழங்கினால்தான் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் வட்டி மானியம் கிடைக்கும். ஆனால் கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கரும்பு சாகுபடிக்கு அதிகபட்சக் கடன் தொகை ரூ 3 இலட்சம் மட்டுமே வழங்குகின்றன.
அதே போன்று நெற்பயிர் சாகுபடிக்கும் ஏக்கர் ஒன்றிற்கு 29,800 என்றும், அதிகபட்ச கடன் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி வேளாண் கடன் அளவு அதிகபட்சமாக 3 இலட்சம் வரைதான் அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளதால், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் 2 விழுக்காடு வட்டி மானியத்தை விவசாயிகள் பெற முடியவில்லை.
எனவே கரும்பு மற்றும் நெற் பயிருக்கு கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் வேளாண் கடன் தொகையை 3 இலட்சத்திலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 14-03-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment