1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.
1877இல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.
சிகாகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிகாகோ திகழ்ந்தது.
மே முதல் நாள் சிகாகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது…
1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயத்தை உருவாக்கியது.
1886,மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் (ஹே மார்க்கெட் திடல்) ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. காவல்துறையினர் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க, கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவரைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த மோதலில் நான்கு தொழிலாளர்களும், ஏழு காவலர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ரத்த ஆறு ஓடியது.
இதனால் போர்க்குணமிக்க சிகாகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியது சிகாகோ முதலாளி வர்க்கம்.
1889-ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு “எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும்” தீர்மானம் நிறைவேற்றியது.
1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு, “இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.” என பிரகடனம் செய்தது .
இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.
அதன் பின்னர்தான் உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
1923-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் ஆவார். முதல் மே தினம் கொண்டாடி நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
தோழர் சிங்காரவேலனார் 1923-ம் ஆண்டு மே தின விழாவை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில், வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் சிங்காரவேலுவும், தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும் பங்கேற்று பேசினர்.
தென்சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, எம்.பி.எஸ்.வேலாயுதம், சங்கர்லால் ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
“மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்று சிந்தனை சிற்பி சிங்காரவேலனார் ,1923, மே 1 பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.
தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
30.04.2023