Saturday, April 22, 2023

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி, ஒரு நாள் ஓய்வு என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது.


ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.


தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கம் பொருத்தமற்றது.


8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும்.


தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை (குடநஒibடைவைல) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.


மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது ஆகும்.


இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.


தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருக்கிறது.


மேலும், தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது.


தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது.


பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது.


எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

22.04.2023

No comments:

Post a Comment