Friday, April 21, 2023

ரமலான் வாழ்த்து! வைகோ!

எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானார் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள்தான் இந்த நாள்.


வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், ஈதல் இசைபட வாழ்தல் என்பதையே வாழ்வின் ஊதியம் என்ற உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும்.


ரமலான் என்ற பெயருக்கு ஏற்பப் புலன்களை, இச்சைப்படி சென்ற இடத்தில் செலவிடாமல், பசித்து இருந்து, தனித்து இருந்து, இறை அச்சத்துடன் விழித்து இருந்து, மறுமையை நினைத்து இருந்து, பாவங்களை எரிக்கும் பரிபக்குவம் பேணியவர்கள், அதைக் கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு வரியாக ‘ஜக்காத்’ என்னும் நன்கொடைகளை வாரி வழங்கும்-ஈத்துவக்கும் இன்பம் துய்க்கும் இப்பொன்னாளில் கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.


இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

21.04.2023

No comments:

Post a Comment