கோவில்பட்டி நகரம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான தொழில் நகரமாகும்.இந்த நகரில் இருக்கும் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத சாமி திருக்கோவில் மிகப் பழமையானது. செண்பக மன்னனால் கட்டப்பட்டதால், இக்கோவிலின் அம்மனுக்கு செண்பகவல்லி அம்மன் என்ற பெயர் வந்திருக்கிறது.
இக்கோவிலின் முக்கிய திருவிழாவான பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி அன்று நடந்தது.
கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்வில் நான் கலந்து கொண்டு,திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து,தேரோட்ட நிகழ்வை தொடங்கி வைக்க வேண்டும் என கோவில்பட்டி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும்,நம் கழகத் தோழர்களும் வேண்டுகோள் வைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக ஏப்ரல் 13 ம் தேதி காலை கோவில்பட்டி நகருக்கு வந்தேன்.வழி நெடுக நம் கழகத் தோழர்கள் மிக உற்சாகமான வரவேற்பைத் தந்தனர்.
தேரோட்ட நிகழ்வில் நான் பங்கு கொள்ள வரும் தகவலைக் கேள்விப்பட்டு, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான நம் இயக்கத் தோழர்களும், பொது மக்களும், இளைஞர்களும் வந்திருந்தனர்.அவர்களது அன்பான வரவேற்பின் வழியாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று கோவிலை அடைந்தேன்.
செண்பகவல்லி அம்மன் சாமி தரிசனம் முடிந்து தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக,மிக நன்றாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத் தேர் இருந்த தேரடிக்குச் சென்றேன். தேரோட்டம் துவங்க சற்று தாமதம் ஆவது போல தெரிந்தது. உடனே என்னுடன் அருகிலிருந்த நம் இயக்கத் தோழர்களும், கோவில்பட்டி நகரின் முக்கிய பிரமுகர்களும், என்னிடம் வந்து,
"தேரோட்ட நிகழ்வு தொடங்க இன்னும் சற்று நேரமாகும் போல தெரிகிறது. வெயில் வேறு கடுமையாக இருக்கிறது. அதனால் நிகழ்வு தொடங்கும் வரையில், நீங்கள் கோவிலின் உள்ளே நிழலில் அமர்ந்திருக்கலாமே" என்றனர்.
அந்த வேண்டுகோளை நான் உடனே மறுத்து,
"கடவுள் முன் அனைவரும் சமம். இந்த தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக இத்தனை ஆயிரம் மக்கள், பெண்கள், குழந்தைகள் இந்த வெயிலில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நானும் ஒருவன்.அவ்வளவு தான். அதோடு இந்த வெயிலில் நின்று என்னை நானே வருத்திக் கொள்வதை இந்த செண்பகவல்லி அம்மனுக்கு தரும் காணிக்கையாக நான் கருதுகிறேன். அதனால் நிகழ்வு தொடங்கும் வரையில் நான் இப்படி வெயிலில் நிற்பதையும் பக்தியாகவே நான் உணர்கிறேன்" என்றேன்.
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தேரோட்ட நிகழ்வு தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பலத்த ஆரவாரத்துடன், பக்திப் பெருக்கில்,தேரின் வடம் பிடித்து கிட்டத்தட்ட முப்பது அடிகள் வரையில் தேரை இழுத்தேன்.
அதன் பின் அடுத்தடுத்த பணிகள் காத்திருந்ததால், அருள்மிகு செண்பகவல்லி அம்மனிடமும்,திருத் தேரோட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்த கோவில்பட்டி நகரின் முக்கிய பிரமுகர்களிடமும், நம் இயக்கத் தோழர்களிடமும், மக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
பொதுமக்களோடு மக்களாக நின்று தேரோட்ட நிகழ்வில் பங்கு கொண்டது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.
No comments:
Post a Comment