Wednesday, April 26, 2023

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பர்காஷ்சிங் பாதல் மறைவு - வைகோ MP இரங்கல்!

இந்தியாவின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரும், சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவருமான பர்காஷ்சிங் பாதல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத துக்கமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

முப்பது ஆண்டுகளாக அவரோடு நான் பழகியிருக்கிறேன். பஞ்சாபிலேயே அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் பாதல் அவர்கள்தான். ஒன்றரை ஆண்டுகள் கோயம்புத்தூர் சிறையில் இருந்தார்.

அவர் முதலமைச்சராக இருந்தபோது, 1998 இல் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தாள் விழாவினை சென்னை கடற்கரையில் மாநாடாக மதிமுக நடத்தியபோது, அதில் பங்கேற்றுச் சிறப்புச் செய்தார். என் இளைய மகள் கண்ணகியின் திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்றார்.

நான் பஞ்சாப் சென்றிருந்தபோது, பகத்சிங் பிறந்த ஊருக்கு என்னை அழைத்துச் சென்று அடிக்கல் நாட்டு விழாவில் என்னை கலந்துகொள்ள வைத்தார்.

வாகா எல்லையில் உள்ள பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவிடத்திற்கு அழைத்துச் சென்று இலட்சக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் என்னைப் பாராட்டி உரையாற்ற வைத்தார்.

நட்புக்கு இலக்கணமான அவரது மறைவு பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொதுவாழ்வுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் பஞ்சாப் மக்களுக்கும், அகாலிதள தலைவர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.04.2023

No comments:

Post a Comment