Wednesday, February 11, 2015

பிப்ரவரி 24 இல் நாடாளுமன்றம் முற்றுகை - மேதா பட்கர் வைகோ பங்கேற்பு!

விவசாய நிலம் பறிக்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பிப்ரவரி 24 இல் நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டத்திற்கு மேதா பட்கர் அழைக்கிறார் - வைகோ அறிக்கை!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மட்டுமல்ல, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் கூட எந்த அரசும் செய்யத் துணியாத அக்கிரமத்தை அவசர சட்டத்தின் மூலமாக புகுந்து நாடாளுமன்றத்திலும் சட்டமாக்க நாசகார நரேந்திர மோடி அரசு முனைந்துவிட்டது.
தலைமுறை தலைமுறையாக உழுது பயிரிட்டு, உணவு தானியங்களையும், விளை பொருட்களையும் தங்களுக்கு வழங்கிய நிலம் என்னும் பூமித்தாயை, தங்களை வாழவைக்கும் தெய்வமாகவே விவசாயிகள் நெஞ்சால் போற்றி வாழ்ந்து வருகிறார்கள்.
பன்னாட்டு பகாசூர கம்பெனிகளுக்கும், உள்நாட்டு கொள்ளைக்கார கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கைக்கூலி வேலை செய்கிற புரோக்கராக மாறிவிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013 ஆகÞடு 29 இல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்களை கையகப்படுத்தும் இந்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகளின் எதிர்ப்பு கொந்தளிப்பாக எழுந்தது. அதனால் முன்னைய மத்திய அரசு அச்சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்துவதாக இருந்தால் மொத்த நிலத்தில் 80 விழுக்காடு நிலம் உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்தால்தான் நிலத்தை கையகப்படுத்த முடியும் என்று அச்சட்டம் நிபந்தனை விதித்தது. அதற்கு ஈடாக நிலத்தின் சந்தை விலையை போல் கிராமப்புறங்களில் 4 மடங்கும், நகர்ப்புறங்களில் 2 மடங்கும் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டது.
மேலும் நிலம் கையகப்படுத்தபடுவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கவும், நிலங்களை இழப்போருக்கு மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டன. நிலத்தை வழங்குவோர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதால் சமூக மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் மதிப்பீட்டு அறிக்கை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் நரேந்திர மோடி அரசு பிறப்பித்துள்ள நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம், 2014 இல் ஏற்கனவே இருந்த சட்டத்தில் கூறப்பட்ட விவசாயிகளை பாதுகாக்கும் அம்சங்கள் அடியோடு நீக்கப்பட்டுவிட்டன. இந்த அவசர சட்டத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் 10 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.
நிலம் உரிமையாளர்களின் 80 விழுக்காடு ஒப்புதலை பெற வேண்டும் என்ற நிபந்தனையை இந்த புதிய 10 ஏ பிரிவு நீக்குகிறது. மேலும் 2013 ஆம் ஆண்டு சட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் என்ற வரையறுப்பில் இடம்பெறவில்லை. ஆனால் மோடி அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளும், தனியார் கல்வி நிறுவனங்களும் நிலங்களை கையகப்படுத்திக் கொள்ளலாம்.
ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ரௌலட் சட்டத்தை விட மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டம் கொடுமையானது. விவசாய நிலங்களையும், தனியார் நிலங்களையும் பறித்து பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கும் ஒப்படைக்கவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.
வழிப்பறி கொள்ளைக்காரனைப்போல மோடி அரசு இந்த அநீதியைச் செய்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தின் மூலம் இந்த அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க மோடி அரசு கச்சை கட்டுகிறது.
விவசாய பெருமக்களே, ஒரு அடி நிலத்தை உறவினர்களோ, ஏன்! உடன்பிறந்தவரோ கூட அநியாயமாக எடுத்துக் கொண்டால் அதை சகிக்க மாட்டீர்கள். ஏன்! கிராமப்புறங்களில் இதனால் மோதல் ஏற்பட்டு உயிர் சேதம் கூட நிகழ்கிறது. நமது பூமியை, நமது நிலத்தை அரசு பறித்து கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது. விவசாய மக்களைக் காக்கவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தையும், பெருமுதலாளிகளையும் எதிர்த்து வாழ்நாளெல்லாம் தியாகமும், உறுதியும் நிறைந்த அறப்போராட்டங்களில் தன்னையே வருத்திக் கொண்டு நடத்திவரும் வீராங்கனையான மேதா பட்கர் அம்மையார் தான் தலைமைத் தாங்கும் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிப்ரவரி 24 ஆம் தேதி நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி இந்திய நாடாளுமன்ற முற்றுகை அறப்போர் அறிவித்திருக்கிறார்.
நான் மேதா பட்கர் அம்மையாரை சந்தித்தபோது, பாராளுமன்ற முற்றுகைப்போர் குறித்து விளக்கியதோடு, அதில் பங்கேற்குமாறு என்னையும், எமது இயக்கத்தையும் அழைத்தார். உறுதியாக பங்கேற்போம் என்று கூறினேன்.
எனவே பிப்ரவரி 24 இல் புதுதில்லியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற முற்றுகை அறப்போரில் மறுமலர்ச்சி திமுகவின் விவசாய அணி எனது தலைமையில் விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் முன்னிலையில் பங்கேற்கும்.
கட்சி எல்லைகளை கடந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பும், வசதியும் உள்ள விவசாயிகளை அன்போடு அழைக்கிறேன்.
உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகார பாவி கோட்சேவுக்கு சிலை வைக்க முற்பட்ட இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்கு புதுடெல்லி வாக்காளர்கள் விளக்குமாற்றுப் பூசை கொடுத்து அடித்துவிரட்டிவிட்டார்கள். இந்தியா முழுவதும் மோடி அரசு எதிர்ப்பு அலை வீசுகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சரித்திரத் திருப்பம். இந்த சரியான சந்தர்ப்பத்தில் வீறுகொண்டு எழும் விவசாயிகளின் மூலபலத்தை மோடி சர்க்காருக்கு எச்சரிக்க டெல்லிக்கு புறப்படுங்கள்.
அதிகாரத் திமிரில் அநீதி செய்ய முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு விவசாயிகளின் வலிமை எத்தகையது என்பதை உணர்த்துவோம். அராஜக சட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய அரசு மக்கள் சக்திக்கு தலை வணங்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்துவோம்.
உழைக்கும் விவசாயிகளே, புறப்படுங்கள் டெல்லி போராட்டத்திற்கு. 

No comments:

Post a Comment