Wednesday, February 25, 2015

மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்துத் தில்லியில் அறப்போர்!

இந்தியாவில் உள்ள வேளாண் நிலங்களையும், மற்ற நிலங்களையும் ஏழை விவசாயிகளிடம் இருந்து அதிரடியாகப் பறித்து, பகாசூர கார்பரேட் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் குறிக்கோளுடன் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலப் பறிப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான மேதா பட்கர் அம்மையார் 2015 பிப்ரவரி 24 ஆம் அன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றத்துக்கு எதிரே ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்டமான விவசாயப் பேரணியில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழகத்தின் விவசாய அணியினரோடு பங்கேற்றார்.

மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்க்கும் முழக்கங்கள் தாங்கிய அட்டைகளோடு, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகல் 1 மணி அளவில் தலைவர்கள் இருந்த மேடைக்கு அன்னா ஹசாரே வந்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த விவசாய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
இரண்டரை மணி அளவில் வைகோ தனது உரையைத் தமிழில் 
தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் பேசினார்.

‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார் திருவள்ளுவர். உலக மக்கள் அனைவரும் விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழ்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை நரேந்திர மோடி அரசு செய்கிறது. விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு, அவர்களுடைய ஒப்புதல் தேவை இல்லை என்கின்ற அளவிற்கு ஒரு கொடூரச் சட்டத்தை இயற்றி இருக்கின்றது. இந்த அவசரச் சட்டம், ரௌலட் சட்டத்தைவிடக் கொடுமையானது. கோடான கோடி விவசாயிகளுக்கு மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் ஆபத்து இன்னமும் புரியவில்லை. 

கெட்டிÞபெர்க் போர்க்களத்தில் ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய உரையில், மக்களால் மக்களுக்காக மக்கள் உடையதுதான் அரசு என்று விளக்கம் அளித்தார். ஆனால், கார்ப்பரேட் கம்பெனிகளால், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக, கார்ப்பரேட் கம்பெனிகளுடைய அரசுதான் நரேந்திர மோடி அரசு ஆகும். அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்கிவிடும் திட்டத்தோடுதான் மத்திய அரசு செயல்படுகிறது. டில்லி வாக்காளர்கள் தேர்தலில் விளக்குமாற்றுப் பூசை கொடுத்தும் இந்த அரசுக்குப் புத்தி வரவில்லை.

விவசாயி நிலத்தைத் தாயாகப் போற்றுகிறான். தன் உயிராகக் கருதுகிறான். அவனிடம் இருந்து நிலத்தைப் பறிக்க முனைந்தால் எதிர்த்து நிற்பான்; இரத்தம் சிந்துவான்; உயிரையும் கொடுப்பான். நிலப்பறிப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்யாவிடில், நாடெங்கும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மத்திய அரசை எதிர்த்து எரிமலையாய்ச் சீருவார்கள். இந்த அரசு மக்களால் தூக்கி எறியப்படும் என எச்சரிக்கிறேன்.

நரேந்திர மோடி அரசே! பகல் கொள்ளைக்காரனைப்போல நிலங்களைப் பறிக்கும் சட்டத்தை இரத்து செய்! 

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கே வந்து இருக்கின்றோம். தொடர்ந்து போராடுவோம்! விவசாயிகளுக்கு எதிரான அரசின் திட்டங்களை முறியடிப்போம்! என்று பேசினார்.

மேதாபட்கர் அம்மையார் அவர்கள் சென்னையில் கேட்டுக்கொண்டபடி, தந்தை பெரியார் சிலையை வைகோ அவரிடம் வழங்கினார்.

அன்னா ஹசாரே பேசும்போது, ‘விவசாயிகளுக்குக் கேடு செய்யும் இத்திட்டத்தை எதிர்த்து அடுத்த ஓரிரு மாதங்களில் ராம்லீலா மைதானத்தில் இலட்சக் கணக்கானவர்களைத் திரட்டி, சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார். 

‘சிறை செல்லத் தயார்’ என கூட்டத்தினர் அனைவரும் முழங்கினார்கள். அன்னா ஹசாரேயிடம் வைகோ, ‘நான் 32 முறை சிறை சென்று இருக்கின்றேன். உங்கள் அழைப்பின் பேரில் இப்பொழுதும் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

அன்னா ஹசாரே உடன் வந்த ஒரு தலைவர், ‘வைகோவின் வாழ்க்கையே போராட்டங்களும் சிறையும்தான்’ என்றார்.

மூன்று மணி அளவில் டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தந்தார். மேடைக்கு முன்னர் தொண்டர்களோடு தரையில் அமர்ந்தார். கூட்டம் ஆரவாரம் செய்தது. 

‘கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் தனது மேடைக்கு வரக்கூடாது; தொண்டர்களோடு அமர்ந்து கொள்ளலாம்’ என்று அன்னா ஹசாரே இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறி இருந்தார்.

அன்னா ஹசாரேவுக்குப் பக்கத்தில் அமர்ந்து இருந்த வைகோ, அவரிடம் “உங்கள் ஆசீர்வாதத்தில் வளர்ந்தவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில வாக்காளர்கள் அவருக்கு முதல்வர் பதவி கிரீடம் சூட்டி இருக்கின்றார்கள். பொதுமக்களின் தீர்ப்பை எண்ணி கெஜ்ரிவாலை நீங்கள் மேடைக்கு அழையுங்கள். இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களும், உலகெங்கிலும் உள்ளோரும் இந்த நிலைமையை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவரை நீங்கள் மேடைக்கு அழைப்பதால் உங்கள் மதிப்புதான் உயரும்” என்று தொடர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வைகோ வற்புறுத்தினார். அருகில் இருந்த பல தலைவர்களும், வைகோவிடம், ‘நீங்கள்தான் ஹாசரேவை இதற்குச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்றனர்.

ஒருவழியாக அன்னா ஹாசரே வைகோவிடம் சம்மதம் தெரிவித்தார். வைகோ ஒலிபெருக்கிக்குச் சென்று, ‘அன்னா ஹாசாரே அவர்கள் சார்பில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்’ என்றார்.

அதனை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மேடைக்கு வந்து அன்னா ஹாசரே அவர்களின் பாதம் பணிந்து ஆசி பெற்றார். வைகோவின் கைகளைப் பற்றிக்கொண்டார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவாலைப் பேச வைக்க வேண்டும் என்று மேதாபட்கர் அம்மையாரிடம் வைகோ வலியுறுத்தினார். அம்மையார் அவர்களும் அதே மனநிலையில்தான் இருந்தார். ஆனால், ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். வைகோ மீண்டும் அம்மையாரிடம் வற்புறுத்தினார்.

பின்னர் அன்னா ஹாசரே அவர்களிடமும் வைகோ கூற, ‘அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவார்’ என்று ஹாசரே அவர்களே ஒலிபெருக்கியில் அறிவித்தார்.

சற்றும் அதிகார அகந்தை கொள்ளாமல், மிகுந்த அடக்கத்தோடு கெஜ்ரிவால் நடந்துகொண்டது குறித்து அவரிடம் வைகோ சிலாகித்துச் சொன்னார். கெஜ்ரிவால் அதற்கு நன்றி தெரிவித்தார்.

விவசாயிகள் பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

பின்னர் மாலை 5 மணிக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை, அவரது இல்லத்தில் வைகோ சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஒருமணி நேரம் நீடித்தது. 

பின்னர் இரவு 7 மணிக்கு ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களை, அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அ.கணேசமூர்த்தி, டாக்டர் சி. கிருஷ்ணன், விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை கந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன், தொண்டர் அணி மாநிலச் செயலாளர்ஆ.பாÞகரசேதுபதி, மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, மதுரை புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் சரவணன், திருச்சி புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் டி.டி.சி.சேரன், திருப்பூர் முத்துரத்தினம், மகளிரணி மாநிலத்துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் மற்றும் கௌசல்யா இரவி, ஆனந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment