Friday, March 17, 2017

ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் சதித் திட்டத்தை எதிர்த்து சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக முற்றுகைப் போராட்டத்திற்கு வாரீர்! வைகோ அறிக்கை!

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தை பூண்டோடு ஒழிக்கத் திட்டமிட்டு, இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆயுத உதவியுடன் சிங்கள இனவாத அரசு கோரமான இனப்படுகொலையை நடத்தியது. பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணியான தமிழர்கள் அனைவரையும் இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. அனைத்துலக நாடுகளில், பெரும்பாலான நாடுகளின் கண்கள் குருடாகிவிட்டன; காதுகள் செவிடாகிவிட்டன; வாய்கள் ஊமையாகிவிட்டன.

ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் 34 ஆவது அமர்வு கூட்டத்தில் தமிழனுக்கான நீதியை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைக்க சிங்கள அரசு செய்யும் சதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, வடஅயர்லாந்து, மாசிடோனியா ஆகிய நாடுகள் வஞ்சகமான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

சிங்கள அரசின் சம்மதத்தோடுதான் எந்த விசாரணையும் நடைபெற வேண்டும் என்பதோடு, விசாரணைக்கு இரண்டாண்டு கால அவகாசமும் கொடுத்து நிரந்தரமாக இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க ஏற்பாடு செய்துள்ளன.

கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்பதையும், இலங்கை அரசின் சம்மதம் என்ற வாசகங்களை நீக்குவதற்கும், இந்திய அரசு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் செயல்பட வேண்டும் என்பதோடு, நயவஞ்சகத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கும் துரோகத்தைச் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், சிங்கள அரசின் கொடுமையான அராஜகப் போக்கைக் கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நாளை 18 ஆம் தேதி சனிக்கிழமை நானும் பங்கேற்கிறேன். கழகக் கண்மணிகளும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் காலை 10 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் அணி திரள அன்புடன் வேண்டுகிறேன்.

கழகத் தோழர்கள் கட்சிக்கொடிகளை ஏந்தக் கூடாது. என்னுடைய உருவப்படம் உள்ளிட்ட பிளக்ஸ்போர்டு எதுவும் வைக்கக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இன்றைய 17-03-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment