Monday, March 20, 2017

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக! வைகோ அறிக்கை!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.

உரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்வரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்றைய 20-03-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment