Tuesday, March 7, 2017

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுடன் வைகோ சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (7.3.2017) பிற்பகல் 4.00 மணி அளவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை, திருவனந்தபுரத்தில், கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

அப்போது, இரண்டு கோரிக்கை விண்ணப்பங்களை முதல்வரிடம் வைகோ அளித்தார்.

‘திருநெல்வேலி மாவட்டத்தின் சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் இராசபாளையம் வட்டார விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான செண்பகவல்லி அணை பழுதுபார்ப்புப் பணிகளை முன்பே ஒப்புக்கொண்டபடி, கேரள அரசு தாமதம் இன்றிச் செய்து தர வேண்டும்’ என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

அதற்கு முதல்வர், ‘இந்தப் பிரச்சினையில் கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்கிறேன்’ என்று உறுதி அளித்தார்.

இரண்டாவதாக, தேனி மாவட்டம் பொட்டிப்புரம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையைக் குடைந்து அமைக்கப்பட இருக்கின்ற நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால், தமிழகத்திற்கு மட்டும் அன்றி, கேரள மாநிலத்தின் இடுக்கி அணைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் வைகோ எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாம் வழக்குத் தொடர்ந்து இடைக்கhலத் தடை ஆணை பெற்றுள்ள விவரங்களைக் கூறி, ‘அடுத்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, கேரள அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞரை அனுப்பி, இந்த வழக்கில் கேரள மாநிலத்தையும் இணைத்துக் கொண்டு வாதிட வேண்டும்; தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்’ என வைகோ கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக, கேரள முன்னாள் முதல்வர்கள் திரு உம்மண் சாண்டி, திரு சி. அச்சுதானந்தன் ஆகியோரை முன்பு தான் சந்தித்த விவரங்களை வைகோ எடுத்துக்கூறியபோது, ‘ஆமாம்; இந்தப் பிரச்சினையில் அச்சுதானந்தன் உங்களை ஆதரிக்கின்றார்’ என்று முதல்வர் பினராயி விஜயன் சொன்னார். அத்துடன், இந்தத் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆய்வாளர்கள் அளித்த விரிவான அறிக்கைகள் இருந்தால், அதை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். விரைவில் அனுப்பி வைப்பதாக வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் வைகோ அளித்த கோரிக்கை விண்ணப்பங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment