Friday, March 10, 2017

பசுமை தீர்ப்பாயத்தில் ஹைட்ரோகார்பன், சேல் கேஸ், நியூட்ரினோவுக்காக வாதாடிய வைகோ!

பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் 3 வழக்குகள் விசாரணை வைகோ வாதம்!

ஹைட்ரோ கார்பன் வழக்கு:-

நெடுவாசல், வடகாடு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தொடுத்த வழக்கு, இன்று (10.3.2017) தென்மண்டல பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நீதியரசர் நம்பியார், சுற்றுச்சூழல் நிபுணர் ராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வைகோ பங்கேற்றார். அப்போது அவர் முன் வைத்த வாதம்:

தமிழகத்தின் நெடுவாசல், வடகாடு உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில், ஹைட்ரோ கார்பன் கேஸ் எடுப்பதற்கு, கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேப் (பி) லிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், ஓஎன்ஜிசி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், மீத்தேன் எரிவாயு, சேல் பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு என எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தனியார் கம்பெனிகள் எடுத்துக் கொள்ளும் விதத்தில் அனுமதி அளித்து இருப்பது விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் அழிக்கும் நடவடிக்கை ஆகும்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ள ஜெம் லேப் நிறுவனத்திற்கு இந்தத் துறையில் எந்த அனுபவமும் கிடையாது. அவர்கள் மூலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைய வழிவகுக்கப்பட்டு இருக்கின்றது.

உலகில் பல நாடுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்ட இடங்களில் விவசாயம் முற்றாக அழிந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதற்கான கோரிக்கையை இந்தத் தீர்ப்பு ஆயத்தில் முன்வைத்துள்ளோம்’ என வைகோ வாதிட்டார்.

இந்த வழக்கு ஏப்ரல் 17 ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.

பாறைப்படிம எரிவாயு வழக்கு:-

இதற்கு முன்னர், நீதியரசர் ஜோதிமணி, சுற்றுச்சூழல் நிபுணர் ராவ் ஆகியோர் அமர்வில் சேல் கேஸ் பாறைப்படிம எரிவாயு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதில் ஆஜரான வைகோ, ‘காவிரி டெல்டாவில் குற்றாலம் பகுதியில் பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுப்பதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு உரிமம் வழங்கியது போல், இந்தத் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு, மாநில அரசு நிபுணர் குழு அமைத்துத் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதற்கு, ‘மத்திய அரசு இத்திட்டத்தை அனுமதித்த பிறகுதான் இதுபற்றிப் பரிசீலிக்க முடியும்’ என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.
நீதியரசர் ஜோதிமணி அவர்கள்,

‘சேல் கேஸ் குறித்து நிபுணர் குழு அமைப்பது பற்றி முன்பு பரிசீலிப்பதாகக் கூறிய தமிழக அரசு தற்போது திட்டம் அறிவிக்கப்பட்டால்தான் பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அம்மாதிரி ஒரு நிலை ஏற்பட்டால் மனுதாரர் தீர்ப்பு ஆயத்தை அணுகலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

நியூட்ரினோ வழக்கு:-

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைக்கப்பட இருக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது என்று, ‘பூவுலக நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் தொடுத்த வழக்கு, நீதியரசர் ஜோதிமணி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்பொழுது, வைகோ அவர்கள் முன்வைத்த வாதம்:-

‘இந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில், நீதியரசர் தமிழ்வாணன், நீதியரசர் ரவி ஆகியோர் அமர்வு, ‘தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல், நியூட்ரினோ ஆய்வு மையத்தில் எந்த வேலையும் நடத்தக் கூடாது’ என்று, 2015 மார்ச் 6 ஆம் தேதியன்று தடை விதித்துள்ளனர்.

உலகம் முழுமையும் உள்ள அணுவிசை விஞ்ஞானிகளும், இந்திய விஞ்ஞானிகளும் நியூட்ரினோ திட்டத்தை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கின்றார்கள். அமெரிக்காவில் உள்ள அணுக்கதிர்கள் ஆய்வு மையத்திற்கு, பூமிக்கடியில், கடலுக்குஅடியில் 8000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு, நேரடியாகக் கதிர்களைச் செலுத்தக்கூடிய நியூட்ரினோ ஆய்வகம், இதுவரையில் உலகத்தில் இதுவரை உலகத்தில் அமைக்கப்படாத பெரிய ஆய்வகம் ஆகும். இதனால் பல நாடுகள் பலன் அடையலாம். இந்தியாவில் மற்ற பகுதிகள் பலன் அடையலாம். ஆனால், தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தையும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தையும் குறிப்பாக, இடுக்கி அணையையும், முல்லைப்பெரியாறு அணையையும் அழிக்கும் பேரபாயம் நம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது.

இந்த நியூட்ரினோ திட்டத்தைத் தடுப்பதற்காக, நான் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் அவர்களை மூன்று நாள்களுக்கு முன்னர் சந்தித்தேன். இதற்கு முன்னர் கேரளத்தின் முன்னாள் முதல்வர்கள், உம்மன் சாண்டி, அச்சுதானந்தன் ஆகியோரையும் சந்தித்தேன். அவர்கள் நியூட்ரினோவை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளனர்’

என்று கூறியபோது, நீதியரசர் ஜோதிமணி அவர்கள், ‘நீங்கள் கேரள முதல் அமைச்சரைச் சந்தித்த செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்தேன்; வரவேற்கத்தக்கது’ என்று கூறினார்.

இன்றைய விசாரணையில் வைகோவுடன், மதிமுக சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், வழக்குரைஞர்கள் செந்தில்செல்வன், சுப்பிரமணி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment