Monday, March 20, 2017

சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பை விரைவுபடுத்த வேண்டும்-மதுரை உயர்நீதிமன்ற விசாரணையில் வைகோ!

தமிழ்நாடு முழுமையும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ தொடுத்த ரிட் மனுவை விசாரித்த நீதியரசர் செல்வம். நீதியரசர் கலையரசன் ஆகியோர், சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்றிட மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கடந்த அமர்வுகளில் ஆணை பிறப்பித்து இருந்தனர்.

அந்த வழக்கு தொடர்பான இன்றைய (20.3.2017) அமர்வில், வைகோ கூறியதாவது:

இந்த நீதிமன்றம் கடந்த அமர்வில் பிறப்பித்த ஆணையின்படி, நானே பல கிராமங்களுக்குச் சென்று, மக்களைத் திரட்டி, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைச் செய்தேன். சங்கரன்கோவில் தாலுகாவில், ஐம்பது விழுக்காடு அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. பொதுப்பணித்துறைக் கண்மாய்களில் இந்தப் பணியைச் செய்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்புத் தரவில்லை என்று, பல மாவட்டங்களில் ஆய்வுக்குச் சென்ற வழக்குரைஞர்கள் கூறுகின்றார்கள்.

நீதிபதி செல்வம்: உங்கள் கட்சிக்காரர்கள் இந்தப் பணியில் இன்னும் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதானே தமிழ்நாட்டுக்கு மறுமலர்ச்சி வரும்.

வைகோ: கட்சிக் கொடிகள், கட்சி அடையாளங்கள் இல்லாமல், மக்களை ஒருங்கிணைத்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று நான் எங்கள் கட்சிக்காரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அவ்வாறு எங்கள் கட்சிக்காரர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தற்போது தேர்வுகள் நடப்பதால், மாணவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. தேர்வு முடிந்தபின்பு, மாணவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டு இருக்கின்றேன்.

நீதிபதி செல்வம்: தமிழகத்தில் இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நச்சு மரங்களை முற்றாக அகற்றினால்தான் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியும்.

வைகோ: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியைத் தாராளமாக வழங்க வேண்டும் என்றும், கடந்த அமர்வில் தாங்கள் பிறப்பித்த ஆணையில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.

ஆனால், இன்றுவரை தமிழக அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான சட்டம் இயற்றிட எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 
செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடக நண்பர்களை நான் சந்தித்தபோது, நீதிபதி அவர்கள் கூறிய கருத்தை வலியுறுத்தி ‘தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.


கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காய்ந்து கிடந்த சீமைக்கருவேல மரங்களில் சில விஷமிகள் தீ வைத்ததால் சில குடிசைகள் தீப்பற்றிக் கொண்டன. அதில் சிக்கி, 40 வயதான பிரேமா என்ற பெண்மணி இறந்து போனார். அவரது பத்து வயது மகன் பரமேஷ் அநாதை ஆகி விட்டார். அந்தக் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தேன். ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனுவோடு அதை இணைத்துள்ளேன்’ என்று வைகோ கூறினார்.

நீதிபதி செல்வம் அவர்கள், ‘அதற்குத் தனியாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறினார்.

வழக்கு விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வைகோவுடன், வழக்கறிஞர் கதிரேசன், வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதிமுக சட்டத்துறைச் செயலாளர் அமல்ராஜ், வழக்கறிஞர் சுப்பாராஜ், வழக்கறிஞர் மனோகரன், வழக்கறிஞர் குமரதேசிகன், வழக்கறிஞர் சீமைராஜ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment