Saturday, March 25, 2017

டெல்லியில் போராடும் தமிழக வசாயிகள்! அலட்சியப்படுத்தும் மத்திய அரசு! வைகோ கண்டனம்!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில், தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில், கடந்த பத்து நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்ச் 14 ஆம் தேதி டெல்லி சென்ற அவர்கள், கழுத்தில் மனித மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டும், கைகளில் மண் சட்டிகளை ஏந்தியும் அரை நிர்வாணக் கோலத்துடன் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்நாட்டில் விவசாயிகளின் துயர வாழ்வினைப் பிரதிபலித்துக்கொண்டு இருக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்;

காவிரியின் குறுக்கே மேகதாட்டு, ராசி மணல் போன்ற இடங்களில் கர்நாடக மாநிலம் தடுப்பு அணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும்;

வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் விவசாயிகளின் கடன் சுமையை அறவே நீக்கும், வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்;

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு 40ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடி வருகின்றார்கள்.

பிரதமர் இல்லம் முற்றுகை, உண்ணாநிலை அறப்போர், தொடர் முழக்கப் போராட்டம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, “காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக இந்த சமயத்தில் 29 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயப் பணிகள் துவக்கப்பட்டு இருக்கும். ஆனால், கடுமையான வறட்சியால் இந்த ஆண்டு இதுவரையில் ஒரு ஏக்கர் நிலத்தில்கூட பயிர் சாகுபடி நடக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு, நீண்டகால நிரந்தரத் தீர்வை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்; தமிழகம் பாலைவனமாவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தமிழக விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்கும் வகையில் அனைத்து நதிகளையும் நீர்வழித் திட்டம் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உலகிற்கே உணவு அளிக்கின்ற உழவர்கள் தலைநகரில் அரை நிர்வாண பட்டினிப் போராட்டம் நடத்துவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவது தமிழக விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்தது மட்டும் காரணம் அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்காமல் பச்சைத் துரோகம் இழைத்த மத்திய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உண்டு என்று கூறிய மத்திய அரசு, இதுவரையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தமிழகத்தைப் புறக்கணிப்பது அநீதியாகும்.

காவிரியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டுவதையோ, பவானி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் தடுப்பு அணைகள் அமைப்பதையோ தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் இதுவரையில் 275 விவசாயிகள், பயிர்கள் கருகியதைக் கண்டு அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் உயிர் இழந்து விட்டனர். இதனையும் மத்திய அரசு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

வரலாறு காணாத வறட்சியைச் சமாளிக்க ரூபாய் 39,565 கோடியும், வார்தா புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 22,573 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டின் வறட்சி நிவாரணத்துக்கு ரூபாய் 1748.28 கோடியும், வார்தா புயலின் பாதிப்பிற்காக ரூபாய் 266.17 கோடியும்தான் ஒதுக்கி இருக்கின்றது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதிகளை பாலைவனம் ஆக்கும் வகையில் மித்தேன் எரிவாயு, ஷேல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மத்திய அரசு, தமிழக மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் செயல்படுத்திட முனைப்புக் காட்டுவதை அனுமதிக்க முடியாது. காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்ததால், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 2015 மார்ச் மாதம் தற்காலிகமாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு, பிப்ரவரி மாதம் 27, 28 தேதிகளில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி இருளில் தள்ளிவிடும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment