உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு (Gross Domestice Product-GDP) கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பது குறித்து, வைகோ எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, எழுத்து மூலம் அமைச்சர் விளக்கம் அளித்து இருந்தார். அது தொடர்பாக,12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில், கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக்கேள்விகள் எழுப்பினார்: முழு விவரம் வருமாறு:
கேள்வி எண்: 257
கீழ்காணும் கேள்விகளுக்கு, புள்ளி விவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த ஓராண்டாக, இந்தியாவின் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு, நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைவாக, ஐந்து விழுக்காடு என்ற நிலைக்கு வந்து இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) அதை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட/மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.
(ஈ) இந்த நிலைமை எப்போது மேம்படும்? பொருள் ஆக்கத்தின் மதிப்பு எப்போது உயரும்?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துறை அமைச்சர் இராவ் இந்தர்ஜித்சிங், எழுத்து மூலம் அளித்த விளக்கம்:
(அ மற்றும் (ஆ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்.
உள்நாட்டுப் பொருள் ஆக்கம் குறித்த அட்டவணை:
ஆண்டு முதல் கால் ஆண்டு 2 3 4
2014-15 8.0 8.7 5.9 7.2
2015-16 7.6 8.0 7.2 9.1
2016-17 9.4 8.9 7.5 7.0
2017-18 6.0 6.8 7.7 8.1
2018-19 8.0 7.0 6.6 5.8
2019-20 5.0 4.5 - -
கேள்வி (இ) க்கான விளக்கம்:
உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் வளர்ச்சிக்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2016 ஆம் ஆண்டு, நலிவுற்ற, கடன் தீர்க்க வகை அற்ற நிறுவனங்கள் ஒழுங்குமுறை (Insolvency and Bankruptcy Code IBC) விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட வரிச் சீர்திருத்தங்கள், எளிதாக்கப்பட்ட நடைமுறைகள், வணிக நடவடிக்கைகளை எளிமை ஆக்கி இருக்கின்றன. தாராளமயக் கொள்கையின் விளைவாக, அயல்நாடுகளில் இருந்து நேரடி முதலீடுகள் பெருமளவில் வந்துகொண்டு இருக்கின்றன. மேலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, அண்மையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை (Corporate Tax) 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அரசு குறைத்து இருக்கின்றது. உள்நாட்டில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி, 15 விழுக்காடு ஆக்கப்பட்டு இருக்கின்றது.
இது, இந்த வகையில், உலகிலேயே மிகக்குறைந்த வரி விகிதங்களுள் ஒன்று ஆகும்.
2019 ஆம் ஆண்டு, கருவூல வங்கி (Reserve Bank), ரெப்போ வட்டியை, 135 புள்ளிகள் குறைத்து இருக்கின்றது. அத்துடன், முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற வகையில், அவர்கள் போட வேண்டிய முதலீடுகளைக் குறைப்பதற்காக, வங்கிகள் கடன் வட்டியைக் குறைத்து இருக்கின்றன.
கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தைப் போக்குவதற்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைத் தொடர்வதற்காக, ரூ 25000 கோடி முதல், அரசு வழங்கி இருக்கின்றது.
கிராமப்புறங்களில் நுகர்வைக் கூட்டுவதற்காக, பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டங்களில், அனைத்து வகையான விவசாயிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அயல்நாடுகளுக்கான ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பெருநிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகின்றது. (Merchandise Exports from India Scheme -MEIS). உற்பத்தியாளர் கட்டுகின்ற மறைமுக வரியை, விற்பனையாளர் தனது ஜிஎஸ்டி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்; இதனால், ஒவ்வொரு நிலையிலும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகின்றது; அந்த வரிகள், இறுதியாக நுகர்வோரிடம் இருந்து திரட்டப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரிக்கணக்குகள் முழுமையும், கணினிகளின் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. வரிப்பிடித்தங்களைத் திரும்பத் தருவதும் கணினி வழியாகவே நடைபெறுகின்றது.
2019-20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக, 100 இலட்சம் கோடி நிதி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன.
பாரம்பரியத் தொழில்களை மீள் உருவாக்கம் செய்வதற்கும் தரம் உயர்த்துவதற்குமான நிதித் திட்டம் (Scheme of Fund fo Upgradation and Regeneration of Tradional industries) வெற்றிகரமாக, இலாபகரமாக இயங்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கின்றது.
(ஈ) மற்றும் (உ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
2011-12 நிதி ஆண்டு முதல், கடந்த ஏழு ஆண்டுகளில் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம்:
2012-13 5.5
2013-14 6.4
2014-15 7.4
2015-16 8.0
2016-17 8.2
2017-18 7.2
2018-19 6.8
எனவே, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, அரசு எத்தனையோ திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் (Internationa Monetary Fund-IMF), இந்தியப் பொருளாதாரம் குறித்து நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றது. இதன் விளைவுகள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பை உயர்த்தும்.
இவ்வாறு அமைச்சர் எழுத்துமூலம் விளக்கம் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக, 12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில்,
கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக் கேள்விகள் எழுப்பினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:
வைகோ: அவைத் துணைத்தலைவர் அவர்களே,
நீங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கின்ற வேளையில், இந்தக் கேள்வி நேரத்தில், அமைச்சரிடம் நேரடியாக விளக்கம் கேட்கக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இம்முறை உறுப்பினர் ஆனபிறகு, கேள்வி நேரத்தில் இது எனக்கு முதல் வாய்ப்பு.
எழுத்து மூலமாக அமைச்சர் அளித்து இருக்கின்ற புள்ளி விவரங்களின்படி, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு ஆகக் குறைவாக, 4.5 புள்ளிக்கு வீழ்ச்சி அடைந்து இருப்பதை ஒப்புக்கொண்டு இருக்கின்றார். இந்தச் சரிவில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, அரசு வகுத்து இருக்கின்ற குறுகிய காலத் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் யாவை? அடித்தட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துணை இணை அமைச்சர் ராவ் இந்தர் ஜித் சிங்:
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக் கட்டத்தில், இந்திய உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு 4.5 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைந்த அளவு இதுதான் என்பதும் உண்மை. அதற்காக அச்சம் கொள்ளத் தேவை இல்லை. காரணம், இதற்கு முன்பு, இதேபோல, 4.5 விழுக்காட்டுக்கும் குறைவாகக் கூட வீழ்ச்சி அடைந்து மீண்டு இருக்கின்றது.
எடுத்துக்காட்டாக, 2012-13 முதல் கால் ஆண்டுகளில் இது 4 விழுக்காடாகத்தான் இருந்தது. 2013-14 இல் 4.2 விழுக்காடு ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த காலகட்டங்களில் 6 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது.
இரண்டாவதாக, 2008-09 ஆம் ஆண்டுகளின் மூன்றாவது கால் ஆண்டுக் காலகட்டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடுதான். நான்காவது கால் ஆண்டில், அது வெறும் 0.2 விழுக்காடு மட்டும்தான்.
2008-09 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 3.9 விழுக்காடு அளவில் இருந்து, 2009-10 இல், 8.9 என்கின்ற அளவிற்கு உயர்ந்தது. எனவே, இந்தியப் பொருளாதாரம் என்பது எத்தகைய அதிர்ச்சிக்கும் ஈடு கொடுக்கத் தக்கது. அதுகுறித்து, இந்த அவையின் உறுப்பினர்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. மேலும், அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது என உறுப்பினர் கேட்டார்.
அவைத் துணைத் தலைவர் (பொறுப்பு) : உங்களுடைய விளக்க உரையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் இராவ் இந்தர்ஜித் சிங்: இந்தியப் பொருளாதாரச் சரிவை மீட்க, அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது? என உறுப்பினர் கேட்டார். அது இந்த அவையில் நான் எழுத்து மூலமாக அளித்து இருக்கின்ற அறிக்கையில் இருக்கின்றது. இருப்பினும், அதை நான் மீண்டும் வாசிக்கின்றேன்.
அவைத்துணைத்தலைவர்: ஆம். அது ஏற்கனவே அறிக்கையில் இருக்கின்றது. எனவே, உறுப்பினர் அடுத்த துணைக்கேள்வியைக் கேட்கலாம்.
வைகோ: ஐயா, அரசு இந்தியாவில் ஆக்குவோம் (Make in India), வணிக நடைமுறைகளை எளிது ஆக்குதல் (Ease of Doing Business) பிரதமரின் விவசாய நலத்திட்டங்கள் எனப் பல திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. ஆனால், அவை எல்லாம் எழுத்துகளில்தான் இருக்கின்றதே தவிர, நடைமுறையில் இல்லை. உண்மையில், முன்னேற்றத்திற்கான எந்தவிதமான அறிகுறிகளும், கண்ணுக்குத் தெரியவில்லை; அரசுத் திட்டங்கள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
விசைப்பொறிகளால் இயங்குகின்ற ஊர்திகள், கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா? அந்தத் துறைகளை, வீழ்ச்சியில் இருந்து மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: தேவைக்கு ஏற்ற வழங்கல் (Demand and Supply system) போதுமானதாக இல்லை. குறிப்பாக, விவசாயப் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. ஆனால், பன்னாட்டு நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட பலதரப்பட்ட அமைப்புகள், இந்தியப் பொருளாதாரம் குறித்து, நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றன. அரசுத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுமானால், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட துறைகள் படிப்படியாக வளர்ச்சி பெறும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.