Wednesday, August 31, 2016

அண்ணா பிறந்த நாள் மாநாட்டு திடலை பார்வையிட்டார் வைகோ!

நேற்று 30-08-2016 அன்று நடந்த மாணவர்களுக்கான அன்பளிப்பு விழாவில் கலிங்கப்பட்டி பள்ளியில் கலந்துகொண்டு உணர்ச்சி உரையாற்றிவிட்டு இரவே திருச்சி வந்து சேர்ந்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள்.

இன்று 31-08-2016 காலையில் வருகிற செப்டம்பர் 15 ஆம் நாள் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற இருக்கிற 108 ஆவது அண்ணாவின் பிறந்த நாள் விழாவிற்கான நடக்க இருக்கிற மாநாட்டு பணிகளை கழக முன்னணி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, August 30, 2016

தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வைகோ கோரிக்கை!

இந்தியாவின் புகழ் வாய்ந்த மருத்துவ நிறுவனங்களுள் ஒன்றான எய்ம்ஸ் மருத்துவமனை, (All India Institute of Medical Sciences) தமிழகத்திலும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தத் திட்டத்திற்கான தமிழக அரசின் வரைவு அறிக்கை, 2015 மே மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முதல் கட்டமாக 1500 முதல் 1800 கோடி வரையிலும் நிதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகின்றது. இந்த மருத்துவமனையால் தமிழக மக்கள் பயன் அடைவர். எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி, தமிழக முதல் அமைச்சர் மத்திய அரசுக்குக் கடிதமும் எழுதினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைய உள்ளன. அவற்றை அமைப்பதற்கான வேலைகள் அம்மாநிலங்களுள் விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமெனத் தமிழக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்துகின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தோழர் திருவுடையான் மறைவுக்கு வைகோ இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான தோழர் திருவுடையான் அவர்கள் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மிக எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து தொழிலாளியாக இருந்தபோதே இசை ஆர்வம் கொண்டு, பாடும் பயிற்சியைத் தாமாகவே வளர்த்துக் கொண்டார். தபேலாவையும் இசைத்துக்கொண்டே பாடுவது இவரது தனித்திறமை. இத்தகைய கலைஞர்கள் வெகு சிலரே. முற்போக்குக் கலை இலக்கிய மேடைகளில் தமிழகம் முழுவதும் இவரது குரல் ஒலித்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.கழக வேட்பாளருக்காகத் திருவுடையான் அரும்பாடுபட்டு உழைத்தார். கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்து என்னைச் சந்தித்து இருக்கின்றார். சிறந்த ஓவியரான திருவுடையான் வரைகின்ற விளம்பரத் தட்டிகள் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக ஒரு செய்தியைத் தாங்கி நிற்கும். அதைப் பலமுறை கவனித்து இருக்கின்றேன்.

சங்கரன்கோவில் நகரில் தொழிலாளர்களுக்காக அவரது குரல் ஒலித்து வந்தது. இன்னும் எத்தனையோ கhலம் தொண்டு ஆற்ற வேண்டிய திருவுடையானை, எதிர்பாராத விதமாக இயற்கை பறித்துக் கொண்டது. இன்றைய அரசியல் சூழ்நிலையில், தன்னலம் சிறிதும் இன்றி பொதுவாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்த திருவுடையானைப் போல ஒருவரைக் காண்பது அரிது. இத்தகைய தொண்டர்கள் உருவாவது கடினம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கhன இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, இவரது இல்லம் அமைந்து இருக்கின்ற தெருவில் நான் வாக்குக் கேட்டுச் சென்றபோது, குடும்பத்தோடு திரண்டு நின்று வரவேற்றனர். இவரது தந்தையார் எனக்குக் கைத்தறி ஆடை அணிவித்து அன்போடு வாழ்த்தியது பசுமையாக நினைவில் இருக்கின்றது.

திருவுடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்ற திருவுடையானின் தம்பி தண்டபாணியும் நான் உரை ஆற்றிய மேடையில் பாடி இருக்கின்றார். அவரும், ஓட்டுநர் தம்பி தங்கப்பாண்டியனும் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்ப விழைகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கலிங்கப்பட்டியில் தான் படித்த பள்ளிக்கு அன்பளித்த வைகோ!

அரசு மேனிலைப் பள்ளி கலிங்கப்பட்டியில் 30.08.2016 இன்று மாலை 4.00 மணிக்கு மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடந்தது.

இதில் பள்ளியின் முன்னாள் மாணவராக கலந்து கொண்ட தமிழின முதல்வர் வைகோ அவர்கள் அப்பள்ளிக்கு நூறு புத்தகங்கள் மற்றும் பிரிண்டர் இயந்திரத்தை வழங்கினார். மேலும் மாணவர்களை அரவணைத்து அன்பு பாராட்டி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தா. தொடர்ந்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, August 29, 2016

மனித உரிமைகள் காவலர் ஹென்றி திபேன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குக்கு வைகோ கண்டனம்!

தமிழகத்தில் மட்டும் அன்றி, இந்தியா முழுமையும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, மனித உரிமைகள் போராளியாக, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், வழக்கறிஞர் ஹென்றி திபேன், கட்சி, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகத்தான தொண்டு ஆற்றி வருகின்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 22 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பல இலட்சம் மாணவர்களிடம் மனித உரிமைக் கல்வியைக் கொண்டு சேர்த்து வருகின்றார். இந்தப் பணிகளுக்காக, சர்வதேச பொது மன்னிப்புச் சபை எனப்படும் அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், இந்த ஆண்டு சிறந்த மனித உரிமைக் காவலர் என்ற உயர்ந்த விருதினை ஜெர்மனி நாட்டு அதிபரைக் கொண்டு பெர்லின் நகரில் வழங்கியது. இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியர் ஹென்றி திபேன் அவர்கள்தான்.

மதுரை மாவட்டம் மொட்டமலை பகுதியில் வசிக்கும் அலைகுடி (இந்து குறவர்) சமூகத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்கின்ற ஆண்களும், பெண்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2016 ஏப்ரல் 28 ஆம் தேதியன்று, காவல்துறையினரால் பொய்வழக்குப் போடப்பட்டு மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். ஏழைப்பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தந்த தகவலின் பேரில், மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வுக் குழு, தக்கலை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த செய்திகளை அறிந்து, நீதி கேட்டு அறிக்கைகள் வெளியிட்டது.

இந்தச் சித்திரவதைகளில் ஈடுபட்ட சிறப்புக் காவல்படையின் துணை ஆய்வாளர் விஜயன், தலைமைக் காவலர் மோகன், காவலர் பிரதீப் உள்ளிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 16 ஆம் தேதி தக்கலையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே பிரச்சினைக்காக, ஜூலை 25 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரு ஹென்றி திபேன் அவர்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்துப் பேசியதற்காக அவர் மீது மதுரை மாநகரக் காவல்துறை பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டுள்ளது. காவல்துறையின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழக அரசாலும் அனைத்து அமைப்புகளாலும் பாராட்டப்பட வேண்டிய மனித உரிமைகள் காப்பாளர் ஹென்றி திபேன் அவர்கள் நீதி கேட்டதற்காகப் பொய்வழக்குப் போட்ட செயல் அரசுக்கும் காவல்துறைக்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பொய் வழக்கை, உடனடியாகக் காவல்துறை திரும்பப் பெற வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து, 2016 செப்டெம்பர் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற தொடர் முழக்க அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் புதூர் பூமிநாதன் தலைமையில் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, August 28, 2016

இலங்கையில் காணாமல் போன தமிழர்கள் பற்றி ஐ.நா. மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! வைகோ அறிக்கை!

உலகின் பல நாடுகளில் பேரினவாத அரசுகளாலும், அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் படுகொலைகள் நடைபெற்ற காலங்களில் காணாமல் போனவர்கள் கதி என்ன? ரகசிய சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகின்றார்களா? அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் உற்றார் உறவினர்களும், பாதிக்கப்பட்ட இன மக்களும் எழுப்பிய ஓலக்குரல் மனித உரிமை ஆர்வலர்களின் மனசாட்சியைத் தட்டியதால், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசு சாரா அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதுதான் ஆகஸ்ட் 30 ‘காணாமல் போனோர் நாள்’.

இனப்படுகொலைக்கும், இன அழிப்புக் கொடுமைக்கும் உள்ளாகிய பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரின் பொறுப்பு ஆகும்.

அதுபோலவே செஞ்சிலுவைச் சங்கமும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 189 நாடுகளில் இயங்குகின்ற அவர்கள்தான், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு உள்ளேயும் சென்று தகவல்களைச் சேகரித்துத் தருகின்றார்கள். அதற்கு உரிய அனுமதியை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வழங்கி இருக்கின்றது.

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே போர் மூண்டது. இதில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

1992 டிசம்பர் 18 ஆம் நாள் ஐ.நா. மன்றத்தின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 47/133 இன்படி, காணாமல் போனவர்கள் குறித்து உண்மையைக் கண்டறியவும், அவர்களைப் பாதுகாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மனித உரிமைகளை அழித்து, சிறைச்சாலைகளில் ரகசியமாக அடைத்து வைக்கின்ற கொடுமை 30 நாடுகளில் நடைபெற்று வருவதாக, ஐ.நா. மன்றம் தகவல் சேகரித்து உள்ளது.

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் அன்று, பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசாங்கத்தின் உளவுத்துறை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்து நீதி கேட்டுப் போராட்டம் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, காணாமல் போனோருக்கான அனைத்துலகக் கூட்டு அமைப்பு நீதிகேட்டுப் போராடியது.

2009 ஏப்ரல் மே திங்களில் சிங்கள இனவாத அரசு நடத்திய தமிழ் இன அழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழர்கள், தாய்மார்கள், முதியோர்கள், குழந்தைகள் உட்பட ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையை, ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, ஆதார சாட்சியங்களோடு அறிக்கையாகத் தந்தது.

கவிஞர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காணவில்லை. அவர்கள் கொல்லப்பட்டார்களா? வதை முகhம்களில் சித்திரவதைக்கு ஆளாகி உள்ளனரா? உண்மை வெளிவர வேண்டும்; ரகசியச் சிறைகளில் இருப்போர் விடுதலையாக வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் இனக் கொலைக்கு நீதி கேட்கும் நாம் கோரி வருகின்றோம்.

தமிழ் ஈழ செய்தித் தொடர்பாளர் இசைக்கலைஞர் எனச் செயல்பட்ட தமிழ் நங்கை இசைப்பிரியா கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு 2009 இல் செய்தி வெளியிட்டது. ஆனால் அவர் கொடூரமான பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட படங்கள், சேனல் 4 தொலைக்காட்சியின் மூலம் உலகுக்குத் தெரிய வந்தது. அவர் ஆடை எதுவும் இன்றித் துடிக்கும் காட்சிக்கு அருகிலேயே நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்களும் ஒரு குளக்கரையில் அம்மணமாக உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியும் வெளியானது.

இறுதிப் போரின் போதுகாணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்ட போராளி இயக்கத்தின் முக்கியத் தலைவர் பாலகுமார், நலிந்த நிலையில் தன் மகனுடன் ஒரு மரக்கட்டையில் இராணுவம் சூழ அமர்ந்து இருக்கும் காட்சியும் படங்களாக வந்தன. கவிஞர் புதுவை இரத்தினதுரை, விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களான யோகி, பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், அரசியல் செயல்பாட்டாளர் எழிலன் ஆகியோர் மக்கள் முன்னிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். ஏழு ஆண்டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. மக்கள் முன்னிலையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயல்பாட்டாளர் சசிதரனின் துணைவியார் வடக்கு மாகாணக் கவுன்சில் உறுப்பினர் ஆனந்தி அவர்கள், தன் கண் முன்னாலேயே நடந்த கொடுமையைச் சுட்டிக்காட்டி ஏழு ஆண்டுக்காலமாக நீதி கேட்டுப் போராடுகிறார்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, மைத்திரிபால சிறிசேனா, சந்திரிகா, ரணில் மூவர் சதிக்குழு காணாமல் போனோர் குறித்து அவ்வப்போது பொய் அறிக்கைகளைத் தந்து வருகின்றது. காணாமல் போனோர் குறித்து முன்பு ராஜபக்சே ஒரு ஆணையத்தை அறிவித்தது போலவே, இப்போதைய அரசும் ஏமாற்றி வருகின்றது.

பல இடங்களில் ரகசியமாக சிறை வைக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு, ஊசி மருந்துகள் மூலமும், உணவுகளிலும் சிறிது சிறிதாகக் கொல்லும் நஞ்சு ஊட்டப்பட்டு, இதுவரை 107 பேர் உயிர் இழந்திருக்கின்றார்கள். பல இடங்களில் வெளியே தெரியாமல் வதை முகாம்களில் வைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்ற செய்தியும் வெளியாகி இருக்கின்றது.

உலகில் நாதியற்ற இனம் ஈழத்தமிழ் இனம்தான். 18 கல் தொலைவில் உள்ள தாய்த் தமிழகத்தில் கோடானுகோடித் தமிழர்கள் வாழ்ந்தும், 18 தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும்கூட, 2008-2009 ஆம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க.வின் நயவஞ்சகமான ஒத்துழைப்புடன் ஈழத்தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.

நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட 107 விடுதலைப்புலிகள் குறித்தும், அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கி இருக்கின்ற போராளிகள் குறித்தும், காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா. மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் கவுன்சிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசின் வெளியுறவுத் துறை மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் கொழும்புக்குச் செல்கிறார். முன்னர் இவர் அங்கே சென்றபோது என்ன ஏமாற்று வேலைகளைச் செய்தார்களோ, அதைத்தான் இப்போதும் செய்யப் போகின்றார்கள்.

சிங்கள அரசின் மோசடி நாடகத்திற்குத் துணைபோகாமல், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடைபெறுவதற்கும், காணாமல் போனவர்கள் குறித்துத்தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்ற வகையில் பான் கி மூன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, August 27, 2016

சிறை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம்தான்; பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வைகோ அறிக்கை!

சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த சம்பவங்களால், கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்ற கைதிகள் அனைவரும் திருந்தாத குற்றவாளிகள் அல்ல. அவர்களில் பலர் சிறைச்சாலையில் திருந்தியவர்களாக மாறி, புதிய வாழ்க்கை வாழத் துடிக்கின்றார்கள்.

அண்மைக்காலமாக கோரமான படுகொலைகளைச் செய்கின்ற கூலிப்படையினர் பெரும்பாலும் சட்டத்தின் பிடியில் சிக்குவது இல்லை.அப்படியே கூண்டில் நிறுத்தப்பட்டாலும் அச்சத்தின் காரணமாக எவரும் சாட்சியம் அளிப்பது இல்லை. அத்தகைய கொடியவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்; மேலும் மேலும் குற்றங்களைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால், ஆயுள் தண்டனை பெற்றோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற கhரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். அவர்களுள் பலர் இருபது ஆண்டுகள் கடந்தும் சிறையில் அல்லல்படுகின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகின்றன. அதனால், மரணத்தை விடக் கொடுமையான மனத்துன்பங்களுக்குச் சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர்.

இந்தியக் குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, இரு அவைகளிலும் எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், நான் ஒருவன் மட்டுமே அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசி என் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கின்றேன்.

மேலும், சிறைவாசிகளைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகின்றது.

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் கூட, இந்தியத் தண்டனைச் சட்டம்224 பிரிவுகளின் கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பதும், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக்கணக்கில் நீடித்துக் கொண்டே போகும்.

சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன.

எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 108 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து, இன்று 27.08.2016 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை - மத்திய சுங்கத்துறை அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார். மாணவர் அணி மாநிலச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் பால.சசிகுமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், கே.கழககுமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, டி.சி.இராஜேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி, மா.வை. மகேந்திரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை மு.பாபு, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத்புகாரி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை து.கந்தன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் காரை செல்வராஜ், சொற்பொழிவாளர் ஆலந்தூர் எஸ்.டி.செல்வராஜ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சு.நவநீதகிருஷ்ணன், பகுதிச் செயலாளர்கள் துறைமுகம் நாசர், தென்றல் நிசார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் சென்னை மண்டலம் வி.சேஷன், காஞ்சி மண்டலம் துரை.மணிவண்ணன், வேலூர் மண்டலம் பாசறை பாபு, திருப்பூர் மண்டலம் சு.கோவிந்தராசு, திருச்சி மண்டலம் க.மணிவண்ணன், தஞ்சை மண்டலம் ப.த.ஆசைத்தம்பி, விழுப்புரம் மண்டலம் இராச.எழிலன், கௌ.மகேஷ்சங்கர், இரா.சத்தியகுமாரன், முகவை இரா.சங்கர், மாவட்ட அமைப்பாளர்கள் மு.மாயன், ச.ராஜசோழன், அருணாசலம், ஈகை ஜி.சிவா, விருதுநகர் மதியழகன், தேனி கமலக்கண்ணன், மதுரை மாநகர் புகழ்முருகன், எஸ்.தாணு, மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் தமிழ்அருண், சிலம்பரசன், பவுன்ராஜ், பிரசாந்த், திலீபன், சுமங்கலி நந்தா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

செய்தி: மணவை தமிழ் மாணிக்கம்

ஓமன் மதிமுக இணையதள அணி