Tuesday, August 16, 2016

காவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடுக்கு கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை முற்றிலும் அழித்துவிடும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சட்டபூர்வமான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமலும் கர்நாடகம், தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் ஒரு போக சாகுபடி கூட கேள்விக்குறி ஆகிவிட்டது. காவிரி தண்ணீருக்காக தமிழகம் ஒவ்வொரு முறையும் போராடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைமைதான் இன்னும் தொடருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டவும், நீர் மின் திட்டங்களை செயல்படுத்தவும் கர்நாடகம் முயற்சிப்பதை தடை விதிக்க கேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழககுத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது, காவிரியின் குறுக்கே மேகதாட்டு, இராசிமணல் ஆகிய இடங்களில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கு கர்நாடக அரசு 5192 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார். காவிரியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பு அணைகள் மூலம 48 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி பெங்களூர், மைசூருக்கு குடிதண்ணீர் அளிக்கவும், புதிதாக பல லட்சம் ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 2500 ஏக்கர் வனப்பகுதியை இதனுடன் இணைக்கவும் முடிவு செய்துள்ளது

உச்ச நிதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பதும், கர்நாடக மாநில அரசின் சட்ட மீறலையும், அடாவடித்தனத்தையும் கண்டு கொள்ளாமல் நரேந்திர மோடி அரசு கள்ள மவுனம் சாதித்து வருவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு அமைக்காமல் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து வருகிறது. காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், காவிரியின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தின் திட்டத்தை முறியடிக்கவும், காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 2014 டிசம்பர் 12 முதல் 22 வரை நான் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மேற்கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கட்சிக் கொடிகள் கட்டாமல், அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து கhவிரியில் தண்ணீர் வரத்து நின்று போனால் அதனை நம்பி இருக்கும் 12 மாவட்டங்களில் உள்ள மூன்று கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்; ஐந்து கோடி மக்கள் குடிநீர் இன்றி அல்லல்படுவர் என்று எச்சரித்தேன்.

காவிரி பாதுகhப்பு இயக்கத்தின் சார்பில், மேகதாட்டு, இராசிமணலில் கர்நாடகம் தடுப்பு அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுக்கக் கோரியும், நாசகர மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் 2015 பிப்ரவரி 18 இல் தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். 2015 ஏப்ரல் 7ஆம் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.

காவிரியின் குறுக்கே தடுப்பு அணைகள் அமைக்கும் கர்நாடக மாநில அரசின் அக்கிரம நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போகிறது என்று அப்போது குற்றம் சாட்டியிருக்கிறேன்.

2014 டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் இல்லத்தில் புதிய அணைகள் கட்டுவதற்கhன சதி ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகத்தின் அனைத்து எம்.பி.களும் கலந்துகொண்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு வெளிப்படையாக அனுமதி கொடுப்பது இல்லை எனவும், அதே நேரத்தில் கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை தடுப்பது இல்லை எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் கண்ணசைவில்தான் கர்நாடக மாநில அரசு மேகதாட்டு, இராசிமணலில் தடுப்பு அணைகள் கட்டுவோம் என்று சட்ட விரோதமாக கூறி வருகிறது. தற்போது கர்நாடக முதல்வரும் இதனை உறுதிபடுத்தி இருக்கிறார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் நயவஞ்சகச் செயலையும், அதற்கு துணை போகின்ற மத்திய அரசையும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கர்நாடகாவின் தடுப்பு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு அமைத்திட வலியுறுத்தியும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் முழு கடையடைப்பு, சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் பங்கேற்க வேண்டும். பொதுமக்களும், வர்த்தகர்களும் போராட்டத்திற்கு தங்களது முழு ஆதரவை வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment