Friday, August 19, 2016

11000 விடுதலைப்புலிகளை நஞ்சூட்டிக் கொல்ல முயலும் சிங்கள இனவெறி அரசுக்கு வைகோ கண்டனம்!

கண்ணீராலும் செங்குருதியாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாற்றில், 60 ஆண்டு காலம் சிங்கள இனவாத அரசுகள், ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கப் பல்வேறு கொடுமைகளைச் செய்தது.

தங்கள் இனத்தைக் காத்து, தாயகத்தை விடுவிக்க, ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரையிலேயே அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்தனர்.

சமர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள முடியாத சிங்கள அரசுக்கு, 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முப்படைத் தளவாடங்களையும் கொடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தானே இயக்கியது. உலகம் தடை செய்த குண்டுகளை சிங்கள இராணுவம் பயன்படுத்த இந்திய அரசு பக்கபலமாக நின்றது.

அப்போரில் போராளிகள் உட்பட ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் மிகக் கொடூரமாகப் பாலியல் வன்முறைக்குப் பலியாகி மடிந்தனர்.


மனித குல மனசாட்சியைப் பதற வைத்த இசைப்பிரியாவின் படுகொலை அதற்கு ஒரு சாட்சியம் ஆகும்.

2009 மே மாதம் மூன்றாம் வாரம் சரண் அடைந்த விடுதலைப்புலிகளில் பலர் வதை முகாம்களில் கொல்லப்பட்டனர். கொடியவன் ஹிட்லரின் நாஜிப் படைகள் செய்த அக்கிரமத்தை சிங்கள அரசு கையாண்டு, சரண் அடைந்த போராளிகளை உணவிலும் மருந்திலும் விஷம் வைத்து மெல்ல மெல்லச் சாகடிக்கும் கொடுமை வெளிச்சத்திற்கு வந்து விட்டது.

காரைத் தீவு முகாமில் மறுவாழ்வு அளிப்பதாகக் கூறி போராளிகளின் உடலில் நஞ்சைச் செலுத்தி உள்ளனர். அதனால், மரணத்தோடு போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகப் போராளிகள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் போராளி பெரியதம்பி வசந்தகுமார் ஊடகத்திற்குத் தந்துள்ள செய்தியில், ‘2009 இல் வன்னியில் குடும்பத்தோடு இராணுவத்திடம் சரண் அடைந்தோம்; 2010 வரை பூசா முகாமில் வைக்கப்பட்டு இருந்தோம்; பின்னர் வெலிக்கடைச் சிறையில் கொண்டு போய் அடைத்தார்கள். அதன்பின்னர் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டோம்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டுக்கு வந்தோம். இப்போது எங்கள் உடலில் விவரிக்க முடியாத நோய் தாக்கி உள்ளது. கண்பார்வை மங்குகிறது. கைகளை அசைக்க முடியவில்லை. உடல் நடுங்குகிறது.

நான் கராத்தே வீரனாக இருந்தேன். ஒரு சிப்பாயை 27 அடி தூரத்திற்குத் தூக்கி வீச முடியும். இன்று ஒரு குழந்தை கூட என்னைக் கீழே தள்ளலாம். என் உடம்பில் விஷம் கலந்து இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

அதேபோல, போராளி செல்வி தவமணி தெரிவிக்கையில், ‘பூசா முகாமிலும் வவுனியா முகாமிலும் எங்களுக்குத் தடுப்பு ஊசி போட்டார்கள். இப்போது கண் பார்வை மங்குகிறது. என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவில் நஞ்சு கலந்தனர் என்பது இப்போது தெரிய வருகிறது. இதுவரை 107 போராளிகள் இறந்து விட்டார்கள். சரண் அடைந்த 11000 பேர்களது உயிரும் இப்படியே முடிக்கப்பட்டு விடும் என அஞ்சுகின்றோம்.

எங்களைக் காப்பாற்ற வழியே இல்லையா’ எனக் கதறுகிறார்கள்.

வட மாகாணத்தின் முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் இதுகுறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் கவுன்சிலும் இதில் உடனடியாகத் தலையிட்டு, சிங்கள அரசால் சிறுகக்சிறுகச் சாகடிக்கப்படும் ஈழப்போராளிகளை மனித உரிமை சாசனத்தின் அடிப்படையில் காப்பாற்ற முன்வர வேண்டும். சிங்களக் கொலை பாதக அரசுக்கு மிக நெருக்கமாகச் செயல்பட்டு வரும் இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, முன்னைய அரசு செய்த துரோகத்தைத் தொடராமல் நீதியின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment