Thursday, November 30, 2017

நியூட்ரினோ திட்டம் குறித்த பிரதமரின் அறிவிப்பு, தமிழ்நாட்டிற்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்-வைகோ கண்டனம்!

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதியை தமிழக அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசின் கேபினட் செயலாளர் கண்காணித்து ஒருங்கிணைப்பார் என்றும் இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமரின் இந்தச் செயல் மாநில உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் உள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் தங்களுடைய மாநிலத்தில் அனுமதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், 26.03.2015 ஆம் தேதி தீர்ப்புக் கூறிய நீதியரசர்கள் திரு.தமிழ்வாணன் மற்றும் திரு ரவி ஆகியோர், நியூட்ரினோ திட்டத்தை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வாங்காமல் தொடரக்கூடாது என இடைக்கால தடை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக கிளை, அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது.

இந்தப் பின்னணியில் பிரதமர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவது முழுவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும். இந்தியாவின் தலைமை அமைச்சரே தமிழக அரசை நிர்பந்தித்து திட்டத்தைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் கேடாகும்.

நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யுனெஸ்கோ நிறுவனத்தால் “பல்லுயிரியம் முக்கியத்துவம் வாய்ந்துள்ள பகுதி”யாக அறிவிக்கப்பட்டுள்ளது, மாதவ் காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் “சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக” அறிவித்துள்ளன. நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள பகுதி, வைகை, வைப்பாறு, முல்லைப் பெரியாறு என முக்கியமான 12 நீர் தேக்கங்களுக்கு அருகில் உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான டன் பாறைகள் உடைபடும் போது, அதன் அதிர்வலைகள் நிச்சயமாக நீர்தேக்கங்களைப் பாதிக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவும் குறிப்பாக தமிழகம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி மீட்டெடுத்த முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழமைவாய்ந்த அணையாகும். பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படும் போது முல்லைப் பெரியாறு அணை பலமிழக்கும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.

கேரளத்தின் இடுக்கி அணைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்ட அம்பரப்பர் மலையில் செயல்படுத்த மத்திய அரசு முயல்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

தென் தமிழக மக்கள், குடிநீருக்கும் விவசாயத்திற்கும் இந்த நீர் தேக்கங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் மக்களின் வாழ்வாதாரங்களை நிச்சயமாக பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு அப் பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திவந்தனர். பிரதமரின் இந்த அறிவிப்பு அவர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களை பல்வேறு கிராமங்களுக்கு அழைத்துச் சென்று நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை நடத்தினோம். அந்த நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் இருந்த எதிர்ப்புணர்வை தெரிந்துகொள்ளமுடிந்தது.

நியூட்ரினோ திட்டம் இயற்கையாக வரக்கூடிய நியூட்ரினோ கற்றைகளை மட்டும் அல்லாமல் செயற்கையாக அமெரிக்காவின் பெர்மி லேபில் உற்பத்தி செய்யப்பட்டு, அம்பரப்பர் மலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை நோக்கி அனுப்பப்படும் என திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. செயற்கை வகை நியூட்ரினோக்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என இயற்பியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். மாறிவரும் காலநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும், உலகம் முழுவதும் சூழல் குறித்த கவலைகளை உருவாக்கி வரும் நேரத்தில், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் மிக அருகில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருப்பது நிச்சயம் சூழல் சீர்கேட்டை உருவாக்கும்.

பிரதமர் நியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 30-11-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, November 29, 2017

பிரணாப் முகர்ஜியே திரும்பிப் போ என சொன்னதற்கு வைகோ நீதிமன்றத்தில் ஆஜர் மற்றும் ஈரானில் கைது செய்யபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்திப்பு!

பிரணாப் முகர்ஜியே திரும்பிப் போ என சொன்னதற்கு வைகோ நீதிமன்றத்தில் ஆஜர் மற்றும் ஈரானில் கைது செய்யபட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்திப்பு!

ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்தபோது போர் நிறுத்தம் செய்திட உதவாத அன்றைய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியே திரும்பிப் போ என வலியுறுத்தி, கருப்புக்கொடி காட்டி, தூத்துக்குடியில் 28. 2. 2009 இல் கைதாகி பாளைச் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர் வைகோ உள்ளிட்ட 100 க்கும் மேற்ப்பட்டோர், நீதிமன்ற அழைப்பாணைக்கிணங்க, 29.11.2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

ஈரானில் கைது செய்யபட்ட நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தலைவர் அவர்களை சந்தித்து முறையிட்டனர். 

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, November 27, 2017

தாயகத்தில் மாவீரர் நாள் வீரவணக்கம்!

தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தன்னுயிர் கொடையளித்தவர்களுக்காக செலுத்தும் மரியாதையாகும்.

இந்த வீரவணக்க நிகழ்வு 27-11-2017 தமிழகத்தின் மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் நடத்தப்பட்டு, தமிழர்களின் தன்னிகரில்லா தலைவர் பிரபாகரன் அவர்களின் நாட்காட்டியை தமிழிழ்ன தலைவர்  வைகோ வெளியிட உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பெற்று கொண்டார்.

இதில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டு, சூளுரை ஏற்கப்பட்டது.


இதில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டார்கள்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, November 26, 2017

தாயகத்தில் 2017 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சி!

நவம்பர் 27 தியாகத்திருநாள்
இடம்: தாயகம்

நாள் : 27.11.2017 திங்கள் கிழமை 

மாலை 5.00 மணி
தலைமை: வைகோ
முன்னிலை: சு.ஜீவன், சைதை ப. சுப்பிரமணி, கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன், முராத் புகாரி கோ.நன்மாறன் கவிஞர் கோமகன், மா.வை. மகேந்திரன், ஆர்.இ.பார்த்திபன், இ.வளையாபதி

உரை ஆற்றுவோர்: உணர்ச்சிக்கவிஞர் காசி.ஆனந்தன், மல்லை சத்யா, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜி. தேவதாஸ், ஆ.வந்தியத்தேவன், ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், மல்லிகா தயாளன்.

நன்றி உரை: தென்றல் நிசார்

அனைவரும் கலந்துகொண்டு தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தன்னியிர் கொடையளித்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்த அன்புடன் வேண்டுகிறோம்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கோவை இளைஞர் உயிரைப் பலிவாங்கிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு! வைகோ கண்டனம்!

கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். திருமணத்திற்குப் பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ள அவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பழனி கோவிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும்போது, பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் திடீரென்று மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற கனரக வாகனம் தலைமீது ஏறி தலை நசுங்கிக் கோரமான முறையில் உயிர் இழந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


இந்த விபத்து குறித்து தகவல் வெளியானதும் கோவை மாநகராட்சி ஆணையர், உரிய அனுமதி இல்லாமல் அலங்கார வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சாலையின் நடுவே ஐம்பது அடி உயரத்தில் சவுக்குக் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு இளைஞர் ஒருவரின் உயிரைக் குடித்திருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று முதலமைச்சரும், அமைச்சர்களும் நடத்துகின்ற இந்த ஆடம்பர விழா, தமிழக மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஒரு இடத்தில்கூட இந்த நூற்றாண்டு விழா நடைபெறவில்லை. அரசு கருவூலத்தை வீணடித்து நடத்தப்படும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் அரசியல் பேசுவதும், உட்கட்சிப் பிரச்சினைகளைப் பேசுவதும்தான் வாடிக்கையாக இருக்கிறது.

இதுபோன்ற விழாக்களுக்கு ஆள் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகமும், ஆளும்கட்சியினரும் செய்கின்ற ஏற்பாடுகள் அருவருக்கத் தக்கவை. பள்ளிக் குழந்தைகளைக் கொண்டுவந்து மணிக் கணக்கில் உட்கார வைத்து சித்ரவதை செய்யும் போக்கை நீதிமன்றமே கண்டித்து இருக்கிறது.

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவில் மோதி இளைஞர் ரகுபதி உயிர்ப்பலி ஆகியிருப்பது போன்ற நிகழ்வு இனியும் தொடரக்கூடாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான காலத்திலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக கட்-அவுட் கலாச்சாரம், காலில் விழும் அநாகரிகம் தமிழக அரசியலிலிருந்து துடைத்து எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இனியாவது அண்ணா திமுக அரசு இதுபோன்ற விழாக்களை ஆடம்பரத்துடன் பொதுமக்கள் எரிச்சல் அடையும் வகையில் நடத்துவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கோவையில் உயிர் இழந்த இளைஞர் ரகுபதி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 26-11-2017 தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தாயகத்தில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடிய மதிமுகவினருடன் வைகோ!

தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவன் பிரபாகரன் அவர்களின் 63 ஆம் பிறந்தநாள் விழாவை மக்கள் தலைவர் வைகோ அவர்கள், மதிமுக நிர்வாகிகளுடன் இன்று 26-11-2017 அன்று மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, November 25, 2017

தாயகத்தில் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழினத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் நவம்பர் 26 தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பிரபாகரன் அவர்களுடன் வன்னிகாட்டில் 28 நாட்கள் தங்கி இருந்து பயிற்ச்சி பெற்ற வைகோ அவர்கள் பொதுச் செயலாளராக இருக்கின்ற மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், 26-11-2017 அன்று காலை 9:00 மணி அளவில், தமிழின தலைவர் பிறவி போராளி தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சிறப்பாக பிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடபடுகிறது.

தலைவர் வைகோ அவர்களுடன் நாமும் சேர்ந்து பிரபாகரன் புகழ் பரப்பி தமிழை உலக பறைசாற்றுவோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, November 24, 2017

குழந்தை மனமறிந்து குழந்தையாக மாறிய கொள்கை வேழம் தலைவர் வைகோ!


இன்று(24.11.2017) மாலை 6:00 மணியளவில் அண்ணாநகர் இல்லத்திற்கு சென்னையை சேர்ந்த பேராசிரியர் விஜயராகவன் ( நமது இயக்கத்தை சாராதவர்; தலைவர் மீது பற்றுக் கொண்டவர். தனது அறுபதாமாண்டு விழா அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களுக்கு வழங்க குடும்ப சகிதம் வருகைப் புரிந்தார்கள். அனைவரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தனர்.

பேராசிரியர் அவர்களுடன் தம்பி லியோன் (சற்றே மாற்று திறனாளி)அவர்களை அழைத்து வந்திருந்தார்கள். 


தலைவரைப் பற்றி பேராசிரியரிடம் கேட்கும் போதெல்லாம் கறுப்பு துண்டை நினைவு வைத்தே கேட்பாராம், லியோன்.



தம்பி லியோன் தலைவர் இல்லத்திற்கு வந்த நேரம் முதல் சற்று பரபரப்பாக காணப்பாட்டார். காரணம் தலைவரை வைகோவை நேரில் சந்திக்கப் போகும் குதூகலம் தான்.


தலைவர் வைகோ அவர்கள் அவர்கள் அனைவரையும் உள்ள அழைத்து வர விழித்ததும், உள்ளே நுழைந்த தம்பி லியோன் முகம் வெரித்து சோகம் கப்பிக் காணப்பட்டது. அவன் மனதுக்குள் நினைத்த வைகோ (கருப்பு துண்டு அணிந்த) அங்கே இல்லை. மாறாக முழுக்கைச் சட்டை; முழுக்கால் சைட்டையுடன் இருந்ததே லியோனின் சோகத்திற்கு காரணம். தலைவர் வைகோ அவர்கள் லியோனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த போதும் அவனது வருத்தம் குறையவில்லை. கருப்புத் துண்டு எங்கே என்றும் கேட்டுவிட்டான் லியோன். பேண்ட் சர்ட்டில் கருப்பு துண்டு அணிய மாட்டார் என்று பேராசிரியர் சொல்லியும் அவன் சமாதானம் ஆகவில்லை. இருக்கமாகவே இருந்தான்.

இதனை உணர்ந்த தலைவர், ஒரு நிமிடங்கள் இங்கேயே இருங்கள். சின்ன வேலை இருக்கு முடித்து வருகிறேன் என்று இரண்டாவது தளத்தில் உள்ள தனது அறைக்கு சென்று, கம்பீரத் தோற்றமான வேட்டை, சிப்பா சட்டையில் கருப்பு துண்டு அணிந்து கொண்டு சற்று நேரத்தில் தலைவர் அந்த அறையில் நுழைந்த மாத்திரத்தில் லியோன் முகம் ஆயிரம் நிலவு ஒன்று கூடியது போன்ற பிரகாசத்தில் மிளிரியது. தலைவரோடு சேர்ந்து புகைப்படம் எடுக்கும் போது எத்தனை எத்தனை ஆனந்தம் அவனது முகத்தில்.

தந்தை பெரியார் அவர்களை சந்திக்க சிறார்கள் வந்தாலும், தள்ளாத வயதிலும் எழுந்து வணக்கம் சொல்லுவார் என கேட்டும், படித்தும் அறிந்திருக்கிறோம். 


ஆம் பெரியார் இன்னும் மரணிக்கவில்லை இம்மண்ணில். தலைவர் வைகோ அவர்கள் உருவில் இருக்கிறார் நம்மோடு.



குழந்தை மனமறிந்து குழந்தையாக மாறிய கொள்கை வேழமன்றோ தலைவர் வைகோ.


தகவல்: சேது.முத்தையா மறுகால்குறிச்சி

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு! வைகோ கண்டனம்!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நாடு முழுதும்103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. வேளாண் பயிர் வாரியாக இந்த வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மத்திய பாஜக அரசுக்கு வழிகாட்டும் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அளித்துள்ள பரிந்துரையில் 103 வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் 43 ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி வாழை அராய்ச்சி நிலையம், சென்னையில் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகிய மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிட மத்திய வேளாண்துறை அமைச்சகம் முடிவெடுத்து இருக்கிறது.

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், கரும்பு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் மூன்றாயிரம் கரும்பு ரகங்கள் இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கோவை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த கோ 205 மற்றும் கோ 0419 போன்ற கரும்பு வகைகள் உலக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் டி.இராமசாமி தலைமையிலான குழு ஒரே பயிருக்காக இருவேறு இடங்களில் செயல்படும் ஆராய்ச்சி மையங்களை இணைப்பதால் செலவுகள் குறையும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை லக்னோவில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்க முடிவு எடுத்திருக்கிறது, இதைப்போலவே சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தைக் கொச்சி ஆராய்ச்சி நிலையத்துடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது,

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில்1993 இல் திருச்சி தயனூரில் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. வாழை உற்பத்தியை அதிகரிக்க, தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் பற்றிய ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய ரக வாழைகள் உருவாக்குதல், நவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பணிகள் மூலம் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு பயனுடையதாக இயங்கி வருகின்றது. நிதி ஆயோக் பரிந்துரையின்படி திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்துக்கு மூடுவிழா நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது,

விவசாயிகள் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம் என்று கூறி வரும் மத்திய பாஜக அரசு, நடைமுறையில் வேளாண்மைத் துறையின் நமது தற்சார்பை ஒழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேளாண் சந்தையைத் திறந்துவிட திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில் விவசாய ஆராய்ச்சி நிலையங்களை மூட முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய வேளாண்துறை அமைச்சகக் கூட்டத்தில், தமிழகத்தில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடும் திட்டத்தை மறுஆய்வு செய்து, அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 24-11-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, November 23, 2017

விருதுநகர் சண்முகராஜ் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

விருதுநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் அவர்களின் இல்ல திருமணம் சித்துராஜபுரத்தில் நடைபெற்றது. 

திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர், தலைவர் வைகோ அவர்கள் இன்று 23-11-2017 கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 05.12.2017 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை, தாயகத்தில் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என மதிமுக தலைமைக் கழகம் 22-11-2017 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, November 22, 2017

வைகோ வாதாடவிருந்த, சீமைக் கருவேல மர வழக்கு, டிசம்பர் மாத முதல் வாரத்துக்கு ஒத்திவைப்பு!

சீமைகருவேல மரம் அகற்றும் வழக்கில் இன்று 22-11-2017 மாலை 3 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வுக்கு வருகை தந்தார் வைகோ. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது வைகோ கூறியதாவது,

சீமை கருவேல மரங்களை அகற்ற 2014 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலே நான் தொடுத்த பொது நல வழக்கு நடைபெற்று அதற்கு பின்னர் கடந்த ஆண்டில், நீதியரசர் தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சீமை கருவேலம் மரங்களை அகற்றுவதை கண்காணிக்க அரசு அலுவலர்களும், நீதிபதிகளும் ஈடுபட்டார்கள். இதற்கிடையில் சென்னை IIT அதை எதிர்த்து தடைகேட்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்து அந்த தடை இடைக்காலத்திலும் விதிக்கப்பட்டாலும் கூட ஜூலை 28 ஆம் தேதியன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தரேசன், நீதிபதி சுந்தர் அமர்வில் ஆங்காங்கு நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு ஒரு நிபுணர் குழு வனத்துறையினுடைய தலைமை அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்டு சீமைகருவேல மரங்களால் ஏற்படுகின்ற தீய விளைவுகள், அதனால் எதாவது நன்மைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து, உயர்நீதிமன்றம் தெரிவித்த ஆணையின் படி நீர்நிலையிலுள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுகின்ற வேலைகளில் ஈடுபடவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 13 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்விலே இந்த வழக்கு வந்தது. அப்பொழுது அமைக்கப்பட்ட குழு சீமைகருவேல மரங்களால் பாதிப்பு அதிகம் இல்லை, அதனால் கிராமபுற மக்களுக்கு நன்மைதான் இருக்கிறது என்ற விதத்திலே அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை மறுத்து, பல நாடுகளிலே சீமை கருவேல மரங்களை அடியோடு நீக்குவதற்கு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை நீதிமன்றத்திலே சுட்டிகாட்டினேன். அப்போது அதை உங்கள் வாதத்திலே தெரிவித்துக்கொள்ளலாம் என்றார்கள்.

இன்றைக்கு வாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்று புதுவை மாநில நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இன்று 22-11-2017 எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

டிசம்பர் முதல் வாரத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இன்று வழக்கு நடக்கவில்லை என தெரிவித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, November 21, 2017

வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்களுக்கு வைகோ அழைப்பு!

நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நூல் "My Life Journey A to Z" வெளியீட்டு விழா டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த விழாவுக்கு வருகை தருமாறு சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து 20.11.2017 கலந்துரையாடினார் இனமான வழக்கறிஞர் தலைவர் வைகோ அவர்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

நவம்பர் 21 மீனவர் நாள்; மீனவர்களைக் கடல் பழங்குடிகளாக அறிவித்திடுக! வைகோ கோரிக்கை!

மீனவப் பெருங்குடி மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி, தங்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாவதற்கு உலக அளவில் உரிமைக்குரல் கொடுத்துப் போராடித் தீர்வு காண முடிவு எடுத்த நாளே, நவம்பர் 21, உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்தியத் துணைக்கண்டம், 6086 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. அதில் தமிழகம் 1000 கிலோமீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது.

கடலும் கடல் சார்ந்த வளங்களும், அதைச் சார்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரமே நெய்தல் நில நாகரிகம் ஆனது. கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்கக் கொந்தளிக்கும் கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்திப் போராடுவதே கடலோடிகள் அன்றாட வாழ்க்கை. கடலுக்குள் சென்றால், திரும்பி வர உயிருக்கு உறுதி இல்லை. விவசாயிகளைப் போலவே, மீனவர்களும் வாழ்நாள் முழுமையும் கடனில் வாடுகின்றார்கள்.

கடல் இயற்கையின் மூலாதாரமாக, பல்லுயிர் பெருக்கத்தின் கருவறையாக விளங்குகின்றது. எனவே, அது உலகத்தின் பொது உடைமை. ஆனால், ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்களுக்கு இடையே நாடு பிடிக்கும் பேராசையால் கடல் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், கடல் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டுதான், டச்சு நாட்டைச் சேர்ந்த சட்ட நிபுணர் பிங்கர்ஷா பதினாறாம் நூற்றாண்டில், கடல் பயன்பாட்டைக் கையாளும் நாடுகளுக்குச் சட்ட விதிகளை உருவாக்கிக் கொடுத்தார்.

அதன்படி, ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது, மூன்று கடல் மைல் (ஒரு பீரங்கி குண்டு செல்லும் தொலைவு) ஒரு கடல் மைல் தூரம் என்பது 6080 அடி. இந்தக் கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட கடல்வெளி 12 கடல் மைல் பாதுகாப்பு வளையம் என்று வரையறுக்கப்பட்டது.

இதுவே உலகத்தின் முதல் கடல் சட்டம் ஆனது.

இதற்குப் பின்னும் கடல் எல்லைப் பிரச்சனையால் போர்கள் ஏற்பட்டன. எனவே, ஐ.நா. மன்றம், உலக கடல் நாடுகளின் மாநாட்டை நியூ யார்க் நகரில் 1973 டிசம்பரில் கூட்டி, உலக பொதுக் கடல் சட்டம் இயற்ற ஒப்புதல் பெறப்பட்டு, பரிந்துரைகளையும் சட்டமுன் வரைவுகளையும் பெற்று, பரிசீலனை செய்து வைத்து இருந்த நிலையில், மூன்றாவது மாநாடு 1982 டிசம்பரில் ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவின் மோன்டிகோ பேயில் கூடி, உலக கடல் நாடுகளின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, பன்னாட்டுக் கடல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதன்படி, கடல் எல்லையைத் தாண்டி, கடல் அடிப்பகுதி அடியாழம் வரை கடல் பகுதி மனித குலத்தின் பொதுச்சொத்து எனவும், அதன் மீது எந்த அரசும் உரிமை கொண்டாடி பேரழிவு ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டது.

இந்நிலையில்தான், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையே கடல் மீன்பிடி எல்லைக்கோடு பிரச்சனை ஏற்பட்டு, 1961 இல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி எல்லைக்கோட்டைத் தாண்டி, 12 கடல் மைல் வரை இரு நாடுகளும் மீன்பிடித்துக் கொள்ளலாம், ஆனால், ஐஸ்லாந்து நாடு, கடற் பஞ்சத்தின் காரணமாக 50 கடல் மைல் கடந்து இங்கிலாந்து கடல்பரப்பில் மீன்பிடித்ததை, சர்வதேச நீதிமன்றத்திற்கு இங்கிலாந்து அரசு கொண்டு சென்றது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ‘1961 ஆம் வருட ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மதித்து நடக்க வேண்டும்; கடல் பஞ்சம் ஏற்படுகின்றபோது வாழ்வுரிமைக்காக மீன்வளம் உள்ள அண்டை நாட்டின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்க உரிமை உண்டு. இங்கிலாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடிக்கப் பொதுவான உரிமை உள்ளது என்று 1974 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவை, சட்டமன்ற, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்தது. கச்சத்தீவு இராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து 18 கி.மீ. மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு 70 கி.மீ., தலைமன்னாரில் இருந்து கச்சத்தீவு 25 கி.மீ.,

இதையும் கடந்து 1974, 76 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி நமது கடல் பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் காக்கைக் குருவிகளை சுடுவதைப் போன்று சுடுவதும், அடித்துச் சித்ரவதைச் செய்து மனிதாபிமானம் அற்ற முறையில் ஒப்பந்தத்தை மதியாமல் நடக்கும் சிங்கள அரசின் கொட்டத்தை அடக்க வேண்டிய மத்திய அரசு, மௌனப் பார்வையாளனாக இருந்து கடந்த வாரம் (13.11.2017) இந்தியக் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களைச் சுட்டுத் தாக்கியுள்ளது கண்டனத்திற்கு உரியது.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஒப்புதல் பெறாமல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதித்துள்ளேன்.

ஆக ஊதியம் பெறாமல் பரந்துபட்ட கடல் எல்லையை பாதுகாத்து வரும் மீனவர்களை கடல் பழங்குடி இனத்தவர்களாக (Sea Tribes - ST) அறிவித்து, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவித்திட, இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களையும், தேவைப்படும் இடங்களில் தூண்டில் வளைவுகளும் அமைத்துக் கொடுத்து, நைந்து போயிருக்கும் நெய்தல் நில மீனவர்களைப் பாதுகாத்திட மத்திய மாநில அரசுகள் கடமையாற்றிட வேண்டும்.

கடலில் இரத்தமும், கண்ணீரும் சிந்தாத நாளே மீனவருக்கு நன்னாள் ஆகும். அந்த நாளுக்கு, நவம்பர் 21 இல் நுழைவு வாயில் அமைப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில் 20-11-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

திராவிட இயக்கக் கொள்கை சுடர் ஏந்தி வருங்கால தலைமுறையை வார்ப்பிப்போம்! வைகோ அறிக்கை!

நவம்பர் 20, தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய விடியல் தோன்றிய நாள்; அமைப்பு ரீதியாக ‘திராவிட இயக்கம்’ உருப்பெற்ற திருநாள். ஆம்! 1916 நவம்பர் 20 ஆம் நாளில்தான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ தொடங்கப்பெற்றது. பின்னர் ‘நீதிக்கட்சி’யாக அறியப்பட்ட ‘திராவிட இயக்கம்’ நூற்றாண்டு கடந்து 101 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய முப்பெரும் திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்துகிறோம். சமூக சமத்துவத்திற்கான விதையை இந்த மண்ணில் ஊன்றியது நீதிக்கட்சி. நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டு, சமூக நீதிக்கான வாசல் முதன் முதலில் திறக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் தமது உரிமைகளைப் பெறவும், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முற்போக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்ணுரிமைகளைப் பேணிய மகத்தான ஆட்சியாக நீதிக்கட்சி அரசு திகழ்ந்தது. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மருத்துவக் கல்வி பயில்வதற்கு சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி தேவை என்ற விதிமுறைகளைத் தகர்த்து, அனைத்துத் தரப்பினரும் மருத்துவக் கல்வி பெற வழி வகுத்தது.

திராவிட இயக்கத்தின் ஈடில்லா தலைவர் சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயர் பொறுப்பு வகித்தபோதுதான், ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளிகளில் இலவச மதிய உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதுதான் பின்னர் மதிய உணவுத் திட்டமாக, சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.

கல்வி, வேலைவாய்ப்பில் மட்டுமின்றி, பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை, இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது. அரசுப் பணிகளை முறைப்படுத்திட முதன் முதலில் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அமைத்ததும் நீதிக்கட்சி அரசுதான்.

சிறுபான்மை மக்களுக்கு உரிய பங்கை வழங்க ஆணையிட்டதும், இந்து சமய அறநிலையச் சட்டத்தை அறிமுகம் செய்ததும் நீதிக்கட்சி அரசுதான்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியது சமூக நீதிக் கொள்கை இலட்சியத்துக்காகத்தான் என்பது வரலாறு. அவர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியபோது, சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு வேறுபாடு காட்டப்பட்டதை எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்டோர் சமூக சம உரிமையை நிலைநாட்ட புகழ்பெற்ற வைக்கம் போராட்டத்தை நடத்தினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் கொண்டுவர முயன்றார். 1919 இல் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 25 ஆவது மாநாடு, 1920இல் நெல்லை மாநாடு, 1921 இல் தஞ்சை, 1923 இல் திருப்பூர், மதுரை, இராமநாதபுரம், சேலம் மாநாடுகள், 1924 இல் திருவண்ணாமலை, 1925 இல் காஞ்சிபுரம் ஆகிய மாநாடுகளில் வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததால்தான் தந்தை பெரியார், காஞ்சி மாநாட்டிலிருந்து வெளியேறினார்.

தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தது. தமிழ் சமூகத்தை அறிவும் மானமும் உள்ள சமூகமாக மாற்ற அருந்தொண்டாற்றியது. அதனால்தான் “தந்தை பெரியார் ஒரு சகாப்தம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் போற்றினார்கள்.

சமூக நீதித் தத்துவத்தைச் சட்டபூர்வமாக்கிய நீதிக்கட்சி அரசுக்கு ஆதரவு அளித்த தந்தை பெரியார், பின்னாளில் நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பேரறிஞர் அண்ணா நீதிக்கட்சி பொதுச்செயலாளர் ஆனார். ஆரிய பண்பாட்டு படையெடுப்பான வடமொழி இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டம் தலைவர் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.

1938 லேயே “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியவர் பெரியார். திராவிடர்களின் மொழி, இன, பண்பாடு, கலாச்சாரத்தைப் பேணிக் காக்க ‘திராவிட நாடு கோரிக்கை’யை முன் வைத்தது நீதிக்கட்சி.

பின்னர் 1944 இல் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் கண்டது.

1949 செப்டம்பர் 17 இல் பேரறிஞர் ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்கினார். செப்டம்பர் 18 இல் இராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் உரைமுழக்கமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், “சமுதாயத்துறையிலே சீர்திருத்தம், அரசியல் துறையிலே வடநாட்டு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை, பொருளாதாரத் துறையிலே சமதர்மம்” இவைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம் என்று குறிப்பிட்டார்.

1951 இல் சமூக நீதியைப் பாதுகாக்க இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவர தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டனர்.

1957 சட்டமன்றத் தேர்தலில் 15 உறுப்பினர்களுடன் தமிழக சட்டமன்றத்தில் நுழைந்த தி.மு.க., 1962 இல் 50 உறுப்பினர்களாக வளர்ச்சி அடைந்தது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா நாட்டுப் பிரிவினை முழக்கத்தை எழுப்பியபோது, திடுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு பிரிவினைவாத தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டாலும், “பிரிவினைக் கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன” என்று பிரகடனம் செய்தார் பேரறிஞர் அண்ணா.

50 களில் திராவிட இயக்கம் நடத்திய மொழி உரிமைக் கிளர்ச்சியால், “இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்று பிரதமர் நேரு வாக்குறுதி வழங்கும் நிலை உருவானது.

1965 ஜனவரி 26 முதல் இந்தியாவில் ஆட்சி மொழியாக இந்தி அரியணை ஏறும் என்று டெல்லி அரசு அறிவித்ததை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டம் அதுவரையில் கண்டிராத மொழி உரிமைப் போராட்டத்தை தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் நடத்தினார்கள். திராவிட இயக்கம்தான் மொழி உணர்வுக் கனலை ஏற்றியது.

1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் செல்வாக்குடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். நம் மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். “இந்திக்கு இங்கு இடம் இல்லை; தமிழ்நாட்டில் இருமொழித் திட்டம்தான் நடைமுறையில் இருக்கும்” என்று சட்டம் இயற்றினார். தந்தை பெரியார் அறிமுகம் செய்த “சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்” வழங்கினார்.

1967 இல் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் ஆட்சிதான் கோலோச்சுகிறது. இதை மாற்ற இனியும் எந்த சக்தியாலும் முடியாது. அறிஞர் அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்ற அண்ணன் டாக்டர் கலைஞர் ஆட்சியில்தான் கல்வி, வேலைவாய்ப்பில் 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு 49 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் 69 விழுக்காடாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, பின்னர் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பெறுப்பேற்க வகை செய்து சமூக நீதியை நிலைநாட்டியவர் கலைஞர். பேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சி கோரிக்கைக்காக வலுவாகக் குரல் எழுப்பிய கலைஞர், சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். எண்ணற்ற சமூக நலத் திட்டங்களைக் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. இவையெல்லாம் திராவிட இயக்கத்தின் புகழ்மிக்க அத்தியாயங்கள்.

ஏழ்மையும், வறுமையும் ஒழிந்த தமிழ்நாடு உருவாவதற்கு 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சிதான் அடித்தளமிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இன்றி கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துத் தரப்பினரும் உரிய பங்கைப் பெறுவதற்கு வழிவகைகளை சட்டமாக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை. பெண்ணுக்கு சொத்து உரிமை, உள்ளாட்சியில் 50 விழுக்காடு ஒதுக்கீடு என்று புரட்சிகர திட்டங்களும் திராவிட இயக்க ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் மாபெரும் சிறப்புமிக்க திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால ஆட்சியில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தினாலும், இன்று சிலர் திராவிட இயக்கத்தின் மீது கல்லெறிகின்ற நிலைமையும் உருவாகி இருக்கிறது என்பதும் வேதனை. பொதுநலம் மாய்ந்து, தன்னலம் ஓங்கியதாலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தோர் அனுமதித்த ஊழல்களாலும் திராவிட இயக்கம் சிறுமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மீது வீசப்படும் பழித்தூற்றைத் துடைத்து எறியவும், திராவிட இயக்க இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும்தான் 1994 இல் உருவான எமது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றுக் கடமையை ஆற்றி வருகிறது.

திராவிட இயக்கம் வழங்கிய வெளிச்சத்தில் சமூக நீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு உள்ளிட்ட அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாக்கவும், தமிழ், தமிழர் நலன், தமிழக வாழ்வாதரங்கள் பாதுகாப்பு, மாநில சுயாட்சி மற்றும் தமிழ்த் தேசிய இனத்திற்கு என்று தமிழ் ஈழ நாடு உருவாக்கம் போன்ற தொலைநோக்குப் பார்வையுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தும்.

திராவிட இயக்கத்தின் கொள்கைச் சுடரை ஏந்திச் செல்ல வருங்காலத் தலைமுறையை வார்ப்பிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற திராவிட இயக்கத்தைச் சார்ந்த அனைவரும் திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு நாளில் உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-11-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.

Sunday, November 19, 2017

போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவரை அனுமதித்து தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் டி.என்.பி.எஸ்.சி. வைகோ கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ.தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018 பிப்ரவரி 11 இல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இப்போட்டித் தேர்வில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் 80 இலட்சம் பேர் படித்து வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். விவசாயம் உள்ளிட்ட கூலித் தொழில்கள் புரிந்து படிக்க வைத்த பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கிறோமே? என்று மனம் வெதும்பி இருக்கின்றனர். வேலை பெற்று தம் பெற்றோர் படும் துன்பத்தைக் குறைக்காலம் என்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் பெரும் கனவுகளுடனும். எதிர்பார்ப்புகளுடனும் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று தற்போது டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க விதிகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நியாயமற்றது. கடும் கண்டனத்துக்கு உரியது.

8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற 140 துப்புரவாளர் பணி இடங்களுக்கு மூன்றாயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 பேரில் பெரும்பாலானவர்கள் பி.இ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.பில் படித்த பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி பெற்றவர்கள் துப்பரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வேலையின்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். “சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்; வேலையற்றோர் உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்” என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்க வேண்டாம் என்று எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் அரசுத் துறை மற்றும் தனியார் துறைகளில் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது அசாம் மாநிலத்தில் எழுந்த பிரச்சினைபோல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் வெடிக்கும் நிலைமை ஏற்படும்.

எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 19-11-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை