“உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று அப்பால் நால் கூற்றே மருந்து”
மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவம், மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்கிறார் உலகப் பொதுமறை தந்த அய்யன் வள்ளுவர்.
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல. தொண்டு ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண வைத்திய சேவைகளில் இருந்து போர்க்காலச் சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு, தாய்க்கு நிகரான பரிவும் சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் ஆற்றும் மகத்தான தொண்டு ஆகும்.
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதுமான மருத்துவர்கள், செவலியர்கள் மருத்துவ உதவியாளர்களை நியமித்து மக்களைப் பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை. உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) மற்றும் இந்திய செவிலியர் ஆணையம் (INC) வழிகாட்டுதலின் அடிப்படையில், அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், சாதாரண ஐந்து நோயளிகளுக்கு ஒரு செவிலியர் என்று நியமிக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் 50,000 செவிலியர்கள் பாற்றாக்குறை உள்ளது.
செவிலியர்களின் நீண்ட நெடிய உறுதியான போராட்டத்தின் காரணமாக 2015ம் ஆண்டு தமிழக அரசு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களைத் தேர்வு செய்து, செவிலிய காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் (MRP) உருவாக்கி, 7,700 செவிலியர் பணிகளுக்கு தேர்வு நடத்தியது. 45,000 பேர் பங்கேற்று, 19,000 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 7,700 பேருக்கு பணி ஆணை வழங்கி, நாள் ஒன்றுக்கு 256 ரூபாய் குறைந்த அளவு ஊதியம், 2 ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதற்குப் பின் 3,300 செவிலியர்களைப் பணியில் அமர்த்தி 11,000 பேராக ஆன நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும், பணி கால நேரமும் வரையறுக்கப்படாமல் செவிலியர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றார்கள்.
காரணம், 12 மணி நேரம் கட்டாய பணியாற்ற வேண்டும்; விடுமுறை கிடையாது என்று அடாவடித்தனமான நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டு அரசின் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர். இது மனிதாபிமானம் அற்ற செயல்.
செவிலியர் கேட்பது பிச்சை அல்ல அவர்களின் உரிமை. செவிலியர்களுகடைய பிரச்சினையைக் கனிவோடு பரிசிலனை செய்து தீர்வு காண வேண்டும்.
மருத்துவரின் பணி என்பது நோயைக் கண்டறிதல், எந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைப்பது மட்டுமே. ஆனால் செவிலியர்கள் மருந்துகளை நோயாளிகளுக்கு முறையாக வழங்கி, நேரம் காலம் பார்காமல் நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்துபவராக உள்ளனர்.
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சிக் கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொலுடனிவர் வலி கொடாத பேரை
ஏதேது செய்வானே
குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவச்சி (செவிலியர்) ஊதியத்தையும், தீர்க்க முடியாத பெரிய நோயைக் குணப்படுத்திய மருத்துவர் ஊதியத்தையும் இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி.
பெருகி வரும் விலைவாசி உயர்வு, குடும்பத்தில் வறுமை என்று பெரும்பான்மையான செவிலியர்கள் பாதி வயது கடந்தவர்களாக வாழ்வோடு போராடி கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வை முறையாக வழங்க ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 18-11-2017 அன்று தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment