நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், நெடுவாசல் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதியரசர் நம்பியார், சுற்றுச் சூழல் நிபுணர் ராவ் ஆகியோர் அமர்வில் இன்று (8.11.2017) விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜர் ஆனார்.
இந்த வழக்கில் தனது பதிலை, ஓஎன்ஜிசி நிறுவனம் இன்று தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்தது. ஆனால், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், சுற்றுச் சூழல் வனப் பாதுகாப்பு செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
‘தலைமைச் செயலாளர் இதற்குப் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.
நீதியரசர் நம்பியார் அவர்கள் வைகோவிடம், நீங்கள் தலைமைச் செயலாளரையும் ஒரு தரப்பாகச் சேர்த்து, சுற்றுச்சூழல் வனத்துறைச் செயலாளரையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இவர்களுள் ஒருவர் பதில் அளித்தால் போதுமானது என்று கூறினார்.
அதற்கு வைகோ, ‘தலைமைச் செயலாளர் அவசியம் பதில் அளிக்க வேண்டுகிறேன். சுற்றுச்சூழல் செயலாளர் இதில் இருந்து நீக்குவதற்கு நான் மனு தாக்கல் செய்கிறேன்’ என்று கூறினார்.
அத்துடன் வைகோ குறிப்பிடுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம், இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்குத் தேர்ந்து எடுத்த இடங்களுள் நெடுவாசலும் ஒன்று ஆகும்.
ஆனால், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால், சுற்றுச்சூழல் துறையில் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டிய தேவை இல்லை; இந்தப் பிரச்சினைக்கும் ஓஎன்ஜிசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; இந்திய அரசாங்கமும், ஜெம் லேபரட்டரி நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தம் என்று, தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
ஆனால், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு, 2017 மார்ச் 27 ஆம் தேதியன்றே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரி நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கி விட்டது.
2017 ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று, இந்தத் தீர்ப்பு ஆயத்தில், ஜெம் லேபரட்டரி தாக்கல் செய்த மனுவில், ‘இந்தியாவின் ஓஎன்ஜிசி நிறுவனம் செய்த ஆய்வு தந்த அறிக்கையின் அடிப்படையில்தான், இந்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இருப்பதை உறுதி செய்து இருக்கின்றது. உரிமம் வழங்கி இருக்கின்றது’ என்று தெரிவித்துள்ளது.
எவ்வளவு பெரிய உண்மையை ஓஎன்ஜிசி நிறுவனம் தற்போது மறைக்க முயல்கின்றது?
ஹைட்ரோ கார்பன் எரிவாயு என்பது, மீத்தேன் எரிவாயு, பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) உள்ளிட்ட அனைத்து எரிவாயுக்களையும் உள்ளடக்கியது ஆகும். இதனால், இந்திய அரசுக்குக் கோடானுகோடிப் பணம் குவியும். ஆனால், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதி, படுநாசமாகி பாலைவனம் ஆகும். இது தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய கடுமையான பிரச்சினை. எனவே, இதனை எதிர்த்து விவசாயிகள் காவிரி டெல்டா பகுதிகளில் பல மாதங்களாகப் போராடி வருகின்றார்கள்’ என்றார்.
‘உங்கள் வாதத்தில் அதை எல்லாம் தெரிவிக்கலாம் என்று கூறிய நீதியரசர் நம்பியார் அவர்கள், வழக்கு விசாரணையை, டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் வைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் நன்மாறன், வழக்கறிஞர்கள் பிரியகுமார், சுப்பிரமணி, செந்தில்செல்வன், பாஸ்கர், வினோத்குமார், குமார் ஆகியோர் ஆஜரானார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment