நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து மடிந்த சோகம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தை மனக்கொதிப்புடன் கார்டூனாக வரைந்து இணையத்தில் வெளியிட்ட கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்து சிறையில் பூட்டி, ஜனநாயக அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
நாட்டில் நடைபெறும் சமூக அவலங்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதிகாரத்தில் இருப்போர் தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உரிமை உண்டு. நெல்லையில் நடந்த கொடூரத்தைச் சித்தரித்த விதத்தில் கார்டூனிஸ்ட் பாலா அவருக்கே உரிய பாணியைக் கடைபிடித்திருக்கிறார்.
அந்தக் கார்டூனின் தன்மையை ஏற்றுக்கொண்டு, தவறுகளைச் சரிசெய்ய வேண்டிய அரசு நிர்வாகம், ஒரு பத்திரிகையாளரை இரவோடு இரவாகக் கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல.
பத்திரிகையில் வரும் கேலிச் சித்திரங்களைக் கண்டு பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்கள் மனதிற்குள் சிரித்துக்கொண்டார்களே தவிர, அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குமுறையை ஏவிவிடவில்லை.
தமிழக அரசின்ஆட்சியாளர்கள் எல்லா வகையிலும் மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளதால், தாங்கள் விரும்பியபடி எல்லாம் ஆட்டிப்படைக்க நினைக்கிறார்கள். இதுபோன்ற ஜனநாயக விரோத தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு.
கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment