மீனவப் பெருங்குடி மக்கள் தங்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி, தங்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குன்றி, வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாவதற்கு உலக அளவில் உரிமைக்குரல் கொடுத்துப் போராடித் தீர்வு காண முடிவு எடுத்த நாளே, நவம்பர் 21, உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியத் துணைக்கண்டம், 6086 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது. அதில் தமிழகம் 1000 கிலோமீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டுள்ளது.
கடலும் கடல் சார்ந்த வளங்களும், அதைச் சார்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரமே நெய்தல் நில நாகரிகம் ஆனது. கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்கக் கொந்தளிக்கும் கடலில் இரத்தமும் கண்ணீரும் சிந்திப் போராடுவதே கடலோடிகள் அன்றாட வாழ்க்கை. கடலுக்குள் சென்றால், திரும்பி வர உயிருக்கு உறுதி இல்லை. விவசாயிகளைப் போலவே, மீனவர்களும் வாழ்நாள் முழுமையும் கடனில் வாடுகின்றார்கள்.
கடல் இயற்கையின் மூலாதாரமாக, பல்லுயிர் பெருக்கத்தின் கருவறையாக விளங்குகின்றது. எனவே, அது உலகத்தின் பொது உடைமை. ஆனால், ஆங்கிலேயர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்களுக்கு இடையே நாடு பிடிக்கும் பேராசையால் கடல் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், கடல் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டுதான், டச்சு நாட்டைச் சேர்ந்த சட்ட நிபுணர் பிங்கர்ஷா பதினாறாம் நூற்றாண்டில், கடல் பயன்பாட்டைக் கையாளும் நாடுகளுக்குச் சட்ட விதிகளை உருவாக்கிக் கொடுத்தார்.
அதன்படி, ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது, மூன்று கடல் மைல் (ஒரு பீரங்கி குண்டு செல்லும் தொலைவு) ஒரு கடல் மைல் தூரம் என்பது 6080 அடி. இந்தக் கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட கடல்வெளி 12 கடல் மைல் பாதுகாப்பு வளையம் என்று வரையறுக்கப்பட்டது.
இதுவே உலகத்தின் முதல் கடல் சட்டம் ஆனது.
இதற்குப் பின்னும் கடல் எல்லைப் பிரச்சனையால் போர்கள் ஏற்பட்டன. எனவே, ஐ.நா. மன்றம், உலக கடல் நாடுகளின் மாநாட்டை நியூ யார்க் நகரில் 1973 டிசம்பரில் கூட்டி, உலக பொதுக் கடல் சட்டம் இயற்ற ஒப்புதல் பெறப்பட்டு, பரிந்துரைகளையும் சட்டமுன் வரைவுகளையும் பெற்று, பரிசீலனை செய்து வைத்து இருந்த நிலையில், மூன்றாவது மாநாடு 1982 டிசம்பரில் ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவின் மோன்டிகோ பேயில் கூடி, உலக கடல் நாடுகளின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, பன்னாட்டுக் கடல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, கடல் எல்லையைத் தாண்டி, கடல் அடிப்பகுதி அடியாழம் வரை கடல் பகுதி மனித குலத்தின் பொதுச்சொத்து எனவும், அதன் மீது எந்த அரசும் உரிமை கொண்டாடி பேரழிவு ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டது.
இந்நிலையில்தான், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையே கடல் மீன்பிடி எல்லைக்கோடு பிரச்சனை ஏற்பட்டு, 1961 இல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி எல்லைக்கோட்டைத் தாண்டி, 12 கடல் மைல் வரை இரு நாடுகளும் மீன்பிடித்துக் கொள்ளலாம், ஆனால், ஐஸ்லாந்து நாடு, கடற் பஞ்சத்தின் காரணமாக 50 கடல் மைல் கடந்து இங்கிலாந்து கடல்பரப்பில் மீன்பிடித்ததை, சர்வதேச நீதிமன்றத்திற்கு இங்கிலாந்து அரசு கொண்டு சென்றது.
இதனை விசாரித்த நீதிமன்றம், ‘1961 ஆம் வருட ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மதித்து நடக்க வேண்டும்; கடல் பஞ்சம் ஏற்படுகின்றபோது வாழ்வுரிமைக்காக மீன்வளம் உள்ள அண்டை நாட்டின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று மீன் பிடிக்க உரிமை உண்டு. இங்கிலாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடிக்கப் பொதுவான உரிமை உள்ளது என்று 1974 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவை, சட்டமன்ற, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்தது. கச்சத்தீவு இராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து 18 கி.மீ. மட்டுமே, யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு 70 கி.மீ., தலைமன்னாரில் இருந்து கச்சத்தீவு 25 கி.மீ.,
இதையும் கடந்து 1974, 76 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி நமது கடல் பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் காக்கைக் குருவிகளை சுடுவதைப் போன்று சுடுவதும், அடித்துச் சித்ரவதைச் செய்து மனிதாபிமானம் அற்ற முறையில் ஒப்பந்தத்தை மதியாமல் நடக்கும் சிங்கள அரசின் கொட்டத்தை அடக்க வேண்டிய மத்திய அரசு, மௌனப் பார்வையாளனாக இருந்து கடந்த வாரம் (13.11.2017) இந்தியக் கடலோரக் காவல்படை தமிழக மீனவர்களைச் சுட்டுத் தாக்கியுள்ளது கண்டனத்திற்கு உரியது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஒப்புதல் பெறாமல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு, மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பலமுறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதித்துள்ளேன்.
ஆக ஊதியம் பெறாமல் பரந்துபட்ட கடல் எல்லையை பாதுகாத்து வரும் மீனவர்களை கடல் பழங்குடி இனத்தவர்களாக (Sea Tribes - ST) அறிவித்து, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவித்திட, இயற்கை முகத்துவாரங்கள் அருகில் மீன்பிடித் துறைமுகங்களையும், தேவைப்படும் இடங்களில் தூண்டில் வளைவுகளும் அமைத்துக் கொடுத்து, நைந்து போயிருக்கும் நெய்தல் நில மீனவர்களைப் பாதுகாத்திட மத்திய மாநில அரசுகள் கடமையாற்றிட வேண்டும்.
கடலில் இரத்தமும், கண்ணீரும் சிந்தாத நாளே மீனவருக்கு நன்னாள் ஆகும். அந்த நாளுக்கு, நவம்பர் 21 இல் நுழைவு வாயில் அமைப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில் 20-11-2017 தெரிவித்துள்ளார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment