சீமைகருவேல மரம் அகற்றும் வழக்கில் இன்று 22-11-2017 மாலை 3 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வுக்கு வருகை தந்தார் வைகோ. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது வைகோ கூறியதாவது,
சீமை கருவேல மரங்களை அகற்ற 2014 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலே நான் தொடுத்த பொது நல வழக்கு நடைபெற்று அதற்கு பின்னர் கடந்த ஆண்டில், நீதியரசர் தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்காக, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
சீமை கருவேலம் மரங்களை அகற்றுவதை கண்காணிக்க அரசு அலுவலர்களும், நீதிபதிகளும் ஈடுபட்டார்கள். இதற்கிடையில் சென்னை IIT அதை எதிர்த்து தடைகேட்டு ஒரு ரிட் மனு தாக்கல் செய்து அந்த தடை இடைக்காலத்திலும் விதிக்கப்பட்டாலும் கூட ஜூலை 28 ஆம் தேதியன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தரேசன், நீதிபதி சுந்தர் அமர்வில் ஆங்காங்கு நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு ஒரு நிபுணர் குழு வனத்துறையினுடைய தலைமை அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்டு சீமைகருவேல மரங்களால் ஏற்படுகின்ற தீய விளைவுகள், அதனால் எதாவது நன்மைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து, உயர்நீதிமன்றம் தெரிவித்த ஆணையின் படி நீர்நிலையிலுள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுகின்ற வேலைகளில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் மீண்டும் அக்டோபர் 13 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்விலே இந்த வழக்கு வந்தது. அப்பொழுது அமைக்கப்பட்ட குழு சீமைகருவேல மரங்களால் பாதிப்பு அதிகம் இல்லை, அதனால் கிராமபுற மக்களுக்கு நன்மைதான் இருக்கிறது என்ற விதத்திலே அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையை மறுத்து, பல நாடுகளிலே சீமை கருவேல மரங்களை அடியோடு நீக்குவதற்கு ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை நீதிமன்றத்திலே சுட்டிகாட்டினேன். அப்போது அதை உங்கள் வாதத்திலே தெரிவித்துக்கொள்ளலாம் என்றார்கள்.
இன்றைக்கு வாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்று புதுவை மாநில நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இன்று 22-11-2017 எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் முதல் வாரத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இன்று வழக்கு நடக்கவில்லை என தெரிவித்தார்.
No comments:
Post a Comment