மூத்த தமிழ் அறிஞர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு இளைய தலைமுறையினர், பிழையின்றித் தமிழை எழுதுவதற்காகத் தொலைக்காட்சிகளில் அவர் ஆற்றிய விளக்க உரைகள், அன்னைத் தமிழுக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு ஆகும். தமிழகத்தில் மட்டும் அன்றி, உலகின் பல நாடுகளில் அவரது உரைகள் ஒளிபரப்பாயின. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். இவரது தமிழ் வகுப்புகள், இலக்கண விளக்கங்கள், எளிய முறையில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அமைந்து இருந்தன.
தந்தை பெரியார் வழியில், முழுமையான பகுத்தறிவாளர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவராகவும், திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்திலும் பொறுப்பு வகித்தவர்.
ஏராளமான நூல்களை எழுதிக் கடமை ஆற்றி இருக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையினர் பேராசிரியர் நன்னன் நூல்களைக் கட்டாயம் வாசித்துத் தெளிவு பெற வேண்டும். காணொளிகளைப் பார்த்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவரது விளக்க உரைகளைத் தமிழக அரசு பள்ளிகளில் பாடமாக ஆக்க வேண்டும். அது, அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டும் அன்றி, அன்னைத் தமிழுக்குச் சூட்டுகின்ற மணி ஆரம் ஆகும்.
நான் பயின்றி மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். ஒரு காலத்தில் அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்று இருந்தேன். அதன்பிறகு, எத்தனையோ நிகழ்ச்சிகளில் உரையாடி மகிழ்ந்து இருக்கின்றேன். அவரது மறைவு, அன்னைத் தமிழுக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், தமிழ் அன்பர்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment