Saturday, July 18, 2015

திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியத்தில் ஓ என் ஜி சி கிணறு தோண்டத் தடை விதிக்க வேண்டும்; விவசாயிகள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்! வைகோ கோரிக்கை!

காவிரி டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிகாற்று எடுக்கும் பணியினை ஓஎன்ஜிசி நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொண்டு வருகிறது. மீத்தேன் எடுப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், கிரேட் ஈÞடர்ன் எனர்ஜி நிறுவனத்திற்குத் தமிழக அரசு தடை விதித்தது. தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, விளைநிலங்களைப் பாதிக்கின்ற வகையில் எரிகாற்று எடுக்கும் துரப்பணப் பணியில் ஈடுபட்டு உள்ளது.

2013 ஜூன் 5 ஆம் தேதி மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சி பெரியகுடி காரியமங்கலம் அருகே போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மிக அடர்த்தியான எரிகாற்று எதிர்பாராதவிதமாக குழாயை உடைத்துக்கொண்டு வெளியேறியது. உடைப்பை அடைக்க முடியாத நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர் மக்களின் உதவியோடு உடைப்பை அடைத்தனர். இதனால் சுற்றியுள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த எந்த நேரத்திலும் தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

27.06.2014 ஆம் நாள் அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் மேற்கொண்டு துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; குறிப்பாக விக்கிரபாண்டியம் பகுதியில் எந்த ஒரு இடத்திலும் அனுமதி பெறாமல் துரப்பணப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, மேற்கண்ட ஒப்பந்தத்தை மீறி, மறைமுகமாக பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி, கிணறு தோண்டுவதற்கான நிலத்தைக் கையகப்படுத்தி, முள்வேலி அமைத்து, இரும்புக் குழாய்களைக் கொண்டு குடியிருப்பு அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்தப் பணிகளை உள்ளூர் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் ஓஎன்ஜிசி நிறுவனம், விவசாயிகளை அச்சுறுத்தும் நோக்கத்தோடு, பொதுச் சொத்துகளைச் சேதம் விளைவித்ததாக பொய்ப் புகார் கொடுத்து, பிணையில் வர முடியாத பிரிவுகளின்படி ஊராட்சிமன்றத் தலைவர் செல்வராஜ் உட்பட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் பணிகளைத் தொடரத் தமிழக அரசு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும்; ஒரு சிறப்புக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்; பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment