Saturday, July 25, 2015

விவசாயிகள் தற்கொலைகளை இழிவுபடுத்திய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் கருத்துக்கு வைகோ கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், 2014 ஆம் ஆண்டு 5,650 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அவர்களில் 5,178 பேர் ஆண்கள் என்றும், 472 பேர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் சிறுவிவசாயிகள் 44.5 சதவிகிதம் பேரும், குறுவிவசாயிகள் 27.9 சதவிகிதம் பேரும் அடங்குவர்.

வங்கிக் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளே இதில் அதிகம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம் என்ன? என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதாமோகன், தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அளித்துள்ள தகவலின்படி விவசாயிகளின் குடும்பப் பிரச்சினை, மதுப்பழக்கம், காதல் விவகாரம், ஆண்மைக்குறைவு உள்ளிட்டவையே தற்கொலைக்குக் காரணம் என்று அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதில் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நான்காவது முறையாக அவசரச் சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தியே தீருவது என்று பா.ஜ.க. அரசு விடாப்பிடியாக இருக்கிறது. கரும்பு, நெல், கோதுமை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை நிர்ணயம் செய்வதற்கு மத்திய-மாநில அரசுகள் முன்வராததால் விவசாயிகள் விவசாயத் தொழிலையே கைவிட வேண்டிய நிலைமை உருவாகி வருகிறது.

விவசாயத்திற்கு 4 சதவிகித குறைந்த வட்டியில் வழங்கி வந்த கடன் தொகையை, 11 சதவிகிதம் என்று வங்கிகள் உயர்த்தியது, தீராக் கடன் பிரச்சினை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

இந்திய விவசாயிகள் மோடி அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல விவசாயிகள் தற்கொலை பற்றி தாறுமாறாகக் கருத்துக்கூறி இருக்கிறார். கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது என்று தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மறைத்து, விவசாயிகளை மிகவும் இழிவாகச் சித்தரித்து ஆணவமான முறையில் பதில் கூறியுள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகனுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலங்கள் அவையில் அவர் தெரிவித்துள்ள எழுத்துப்ñர்வமான பதிலை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment