Sunday, December 13, 2015

வெள்ள நீரால் மண் மேடிட்ட விளை நிலங்களை செப்பனிட்டு சீர்திருத்தும் பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அறிக்கை!

கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டம் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. விவசாய சாகுபடி நிலங்கள் சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் முற்றாக அழிந்துவிட்டது. நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி மற்றும் சவுக்கு உள்ளிட்ட விளைபொருட்கள் சேதமடைந்து விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டாரங்களில் வெள்ள நீர் பாய்ந்ததால் மூன்று அடி வரையில் மண் மேடாகி, பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாழாகிவிட்டன. இந்நிலையில், மண் மூடி சிதைந்துபோன விவசாய நிலங்களில் மண்ணை அகற்றி செப்பனிடுவதற்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா எந்த அறிவிப்பும் வெளியிடாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வர் அறிவித்துள்ள வெள்ள நிவாரண உதவிகள் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வெள்ள நீரால் மண்மேடாகிப்போன விளை நிலங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் இயந்திரங்களைக் கொண்டு தமிழக அரசே செப்பனிட்டுத் தந்தால்தான் மறு பயிர் சாகுபடி செய்ய உகந்ததாக இருக்கும். எனவே தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் இதுபோன்று வெள்ள நீரால் மண் மேடாகிப்போன விளை நிலங்களை செப்பனிட்டு, சீர்திருத்தம் செய்ய ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், காஞ்சி, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கூட்டுறவு விவசாயக் கடன்களை தமிழக அரசு முற்றாக இரத்து செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்க் கடனாக விவசாயிகளின் சிட்டா அடங்கலை வைத்துக்கொண்டு வழங்கப்பட்டுள்ள நகை கடன்களுக்கான அசல், வட்டி, அபராத வட்டித் தொகையை இரத்து செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்  என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக)
மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்

ஜி.இராமகிருஷ்ணன் (சிபிஐ-எம்), இரா.முத்தரசன் (சிபிஐ ) தொல்.திருமாவளவன் (விசிக)

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment