Tuesday, December 22, 2015

பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவிற்கு வைகோ இரங்கல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்புத்தாயார் செல்வநாயகி நடராஜா அவர்கள், கடந்த 19 ஆம் தேதியன்று இரவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். 

ஆருயிர்ச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழத்து உணர்வாளர்கள் அனைவருமே நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டியும் அணிந்து கொண்டு, எளிமையின் வடிவமாக, அல்லும் பகலும் ஈழத்தமிழர்களின் விடியலுக்காகத் தமிழகத்தில் சுற்றிச் சுழன்று பணி ஆற்றினார். அவரோடு பழகிய காலங்களை மறக்கவே முடியாது. சென்னையில் நான் இருக்கும் நாட்களில் எல்லாம் பெரும்பாலும் காலையிலோ அல்லது இரவிலே என்னைச் சந்திக்காமல் அவர் இருந்தது இல்லை.

தமிழீழத்திற்குச் சென்ற பின்னர் சீருடை அணிந்து ஆயுதமும் ஏந்தி, தலைவர் தந்த முக்கியப் பொறுப்பையும் செயல்படுத்தி வந்தார். 2009 முள்ளிவாய்க்கால் துயரம் நிகழ்ந்த சூழலில் சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பேபி சுப்பிரமணியம், பாலகுமார், கவிஞர் புதுவை இரத்தினதுரை, யோகி போன்றோர் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கக்கூடும்  என்ற அதிர்ச்சி கலந்த அச்சமும் அவ்வப்போது நெஞ்சில் எழுகிறது. அவர் உயிருடன் இருக்கின்றாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  அவரது அண்ணன் ஏற்கனவே சிங்கள இராணுவ பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது தங்கைதான் அவர்களது தாயாரைப் பராமரித்து வந்ததாக அறிந்தேன். 

அவர்களது வயது முதிர்ந்த தாயின் உள்ளம், ஈழத்தின் கொடுந்துயர் குறித்தும், தன் தவப்புதல்வர்கள்  குறித்தும் எப்படியெல்லாம் கலங்கிக் கதறி இருக்கும் என்பதை நினைக்கும்போதே மனம் பாறையாகக் கனக்கிறது.

இருள் மூழ்கிக் கிடக்கும் ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் உதிக்காதா என்று ஈழத்தமிழரெல்லாம் ஏங்கித் தவிக்கும் இந்த வேளையில், பேபி சுப்பிரமணியம் அவர்களைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும், வீர வணக்கத்தையும் தெரிவிக்கின்றேன் என தனது இரங்கல் உரையில் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment