Thursday, December 10, 2015

சென்னை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மனிதநேயத்துடன் மருத்துவ உதவிகளை வழங்க முன்வரவேண்டும்! வைகோ வேண்டுகோள்!

மழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன சென்னை மாநகரில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து, வாழ்வாதரங்களைப் பறிகொடுத்துவிட்டு, துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். சென்னை வாழ் மக்களின் துயர் துடைப்பதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் மனிதநேயக் கரங்கள் உதவிக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. தொண்டுள்ளத்தோடு உதவி செய்து வருபவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக விளங்கும் சென்னையில், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அல்லல் படுவது வேதனை தருகிறது. மலைபோல் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரம் சீர்கேடு அடைந்து, தொற்று நோய்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இலட்சக்கணக்கான மக்களுக்கு உடனடித் தேவையான மருத்துவ முதல் உதவிகளை தமிழக அரசின் சார்பில் மட்டுமே முழுவதும் அளித்துவிட முடியாது. எனவே சென்னை மக்களின் நிலைமையைக் கண்டுணர்ந்து தனியார் கார்ப்ரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் மனிதாபிமானத்துடன் மருத்துவ உதவிக்குழுக்களை அனுப்பி நோய் தொற்று தடுப்பூசிகள் போடவும், உயிர் காக்கும் மருந்துகளை வழங்கவும், நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளவும், உதவிட முன்வரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று மருத்துவப்பேருதவிகள் செய்திடும் தனியார் மருத்துவமனைளை சென்னைவாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

மழை வெள்ளம் சூழ்ந்ததால், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் இயங்கிய சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இதே போன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். வறுமையில் வாடும் இத்தொழிலாளர்கள் நிலையை தமிழக அரசு கருத்தில் கொண்டு இவர்கள் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5000 மற்றும் முப்பது கிலோ அரிசி உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment