Saturday, October 31, 2015

மதுவிலக்கு பிரச்சாரப் பாடகர் கோவன் கைது; தமிழகத்தில் நெருக்கடி நிலை! வைகோ கண்டனம்!

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  மக்கள் சக்தியைத் திரட்டி போராட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை இயற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகிறார் பாடகர் கோவன். 

திருச்சி உறையூர் அரவனூரில் இருந்த கோவன் வீட்டுக்கதவை, அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு யாரோ சிலர் தட்டியுள்ளனர். கோவன் கதவைத் திறந்தவுடன்,  சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி இருக்கின்றனர். கோவன் மனைவி கேட்டதற்கு எந்த பதிலும் கூறவில்லை; கோவன் தனது காலணியை அணிவதற்குக்கூடக் காவலர்கள் அனுமதிக்கவில்லை. 

காவல்துறை வாகனத்தின் பின்னாலேயே ஓடிச் சென்ற கோவன் மனைவியிடம், ‘உறையூர் காவல் நிலையத்துக்கு வா’ என்று ஒரு காவலர் கூறி இருக்கிறார். கோவன் மனைவியும் மகனும் அங்கே சென்றபோது, அங்கே கோவன் இல்லை. 

காலை 8 மணிக்குக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசி மூலம் தனது மகன் வழக்கறிஞர் சாருவாகனிடம் தொடர்புகொண்ட கோவன், சென்னையில் இருந்து வந்துள்ள காவலர்கள் தன்னைக் கைது செய்து, சென்னைக்குக் கொண்டு செல்வதாகக் கூறி உள்ளார். ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்’ என்று காவல்துறை ஆய்வாளர் சாருவாகனிடம் கூறி இருக்கிறார். 

இத்தகைய நள்ளிரவுக் கைது, தமிழகத்தில் நெருக்கடி நிலைக் காலத்தை நினைவூட்டுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கி உள்ள கருத்து உரிமை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. 

தமிழ்நாட்டின் வீதியெங்கும் மதுக்கடைகளைத் திறந்து, மக்கள் நல்வாழ்வைச் சீரழித்து வரும் ஜெயலலிதா அரசு, மக்கள் குரலுக்குச் செவி சாய்க்காமல், அதிகார மமதையுடன் செயல்பட்டு வருவது கண்டு பொறுக்க முடியாமல்தான் ம.க.இ.க. பாடகர் கோவன் மக்களைத் தட்டி எழுப்பிட விழிப்புணர்வுப் பாடலை இயற்றிப் பாடி வந்துள்ளார். மதுவின் தீமை பற்றி நாட்டுப்புறப் பாடல் மூலம் எடுத்துக் கூறியதற்காக  அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி தேசத் துரோகம், சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்படுத்துதல், அவதூறு செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கைகளால் மது ஒழிப்புப் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. 

பாடகர் கோவன் கைது, மதுவிலக்குப் போராட்டத்தை இன்னும் பன் மடங்கு வீரியத்துடன் மக்கள் முன்னெடுத்துச் செல்லவே வழி வகுத்து இருக்கின்றது. 

பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment