Wednesday, October 7, 2015

திருவைகுண்டம் அணையில் தூர் வார வேண்டுமே தவிர, மணல் அள்ளக்கூடாது! வைகோ, நல்லகண்ணு கோரிக்கையை ஏற்று தீர்ப்பு ஆயம் ஆணை!

திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் இன்று (7.10.2015) நடைபெற்ற விசாரணையின்போது வைகோ எடுத்துரைத்த வாதம்:

வைகோ: திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீது நான் வாதாடினேன். அணையில் தூர் வாருவதற்குத் தீர்ப்பு ஆயம் ஆணை பிறப்பித்தது.

ஆனால், தூர் வாருகிறோம் என்ற போர்வையில் மணல் அள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்காக ஆதாரப் புகைப்படங்களை இந்தத் தீர்ப்பு ஆயத்தில் தருகிறேன்.

திருவைகுண்டம் அணையில் மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே ஆணை பிறப்பித்து உள்ளது.

தூர் வாரும் பணியை அணைக்கட்டில் இருந்துதான் அகல வாக்கில் தொடங்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியதைத் தீர்ப்பு ஆயம் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்தும் கூட, அங்கே வேலை தொடங்காமல் தொலைவில் உள்ள பகுதிகளில் மணல் அள்ளும் வேலையைத்தான் பொதுப்பணித் துறையினர் செய்து வந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று தீர்ப்பு ஆய விசாரணைக்கு வந்து இருக்கின்றார். பகிரங்கமான மணல் கொள்ளைக்குத்தான் ஏற்பாடுகள் நடந்து இருக்கின்றன. எனவே இனி அணைக்கட்டுப் பகுதியில் இருந்து தொடங்கி ஏற்கனவே பிரிக்கப்பட்டு உள்ள ஏழு பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகளில் மட்டும்தான் தூர் வார வேண்டும். மற்ற பகுதிகளில் எந்த வேலையும் நடைபெறக் கூடாது. 18 மணல் வாரிகளும் பழுதுபார்க்கப்படாமல் உள்ளன.

அரசு வழக்குரைஞர்: அவை பழுதுபார்க்கப்பட்டு விட்டன.

வைகோ: அப்படியானால் கடந்த ஒரு வாரத்திற்குள்தான் பழுது பார்த்திருக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு அவர்கள், மணல் அள்ளுவதை எதிர்த்து ஆகஸ்ட் 31, செப்டெம்பர் 23 ஆகிய நாள்களில் போராட்டம் நடத்தியபோது, வருவாய்த் துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் அள்ள மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. நேற்று கூட ஏராளமான லாரிகளில் மணல் கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றது.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று ஒருவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணன் நல்லகண்ணு அவர்களும் அரசியல் கட்சிகளும் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் வாதாடுகிறார்கள் என்று கூறி இருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.

வாழ்நாள் எல்லாம் மக்கள் நலனுக்காகவே போராடித் தியாகம் செய்துள்ள பொது உடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணு அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வாசகங்களை மனுதாரர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

நீதியரசர் ஜோதிமணி: இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆட்சேபணைக்குரிய வாசகங்களை நீக்காவிட்டால் அந்த மனுவைத் தள்ளுபடி செய்வோம்.
இதன்பின் அந்த வாசகங்கள் நீக்கப்பட்டன.

திரு நல்லகண்ணு அவர்கள் வாதிடுகையில், ‘திருவைகுண்டம் அணையால் பாசனம் பெறும் பகுதிகளைக் குறிப்பிட்டதோடு, பெருமளவில் மணல் அள்ளப்படும் ஊழலையும் கண்டித்தார். அணைக்கட்டுப் பகுதியில் தூர் வாரினாலே போதுமானது. 25560 ஏக்கர் நிலம் இந்த அணையால் பாசனம் பெறுகிறது. எக்காரணத்தை முன்னிட்டும் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாதுஎன்றார்.

தீர்ப்பு ஆய நீதிபதி ஜோதிமணி அவர்கள் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ‘அணைக்கட்டில் இருந்து தொடங்கி, இரண்டு கட்டங்களில் மட்டுமே தற்போது தூர் வார வேண்டும்; தூர் மண்ணோடு சேர்ந்து வரும் மணலைப் பத்திரமாக ஒரு இடத்தில் குவித்து வைக்க வேண்டும்; அதனை விற்கவும் கூடாது, ஏலம் விடவும் கூடாது; எக்காரணத்தை முன்னிட்டும் மற்ற இடங்களில் மணல் அள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை அக்டோபர் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment