Tuesday, October 6, 2015

சுற்றுச்சூழல் நீராதாரங்களை அழிக்கும் வேலிக் கருவேல மரங்களை தமிழகம் முழுமையும் அகற்ற உயர்நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஆர். சுதாகர், வேலுமணி அம்மையார் அமர்வில் வேலிக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக வைகோ தொடுத்து இருந்த ரிட் மனு இன்று (6.10.2015) விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ முன்வைத்த வாதம் வருமாறு:-

தமிழகம் முழுமையும் சாலை ஓரங்கள் கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வேலிக் கருவேல மரங்கள் பற்றிப் படர்ந்து சுற்றுச் சூழலுக்கும் நீர் ஆதாரங்களுக்கும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளன. இம்மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக் கொண்டு, கரிக்காற்றை வெளியிடுவதால் காற்று மண்டலம் நஞ்சாகிறது. மிக ஆழமாக வேர் ஊன்றுகின்ற இந்த மரங்கள், பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை முற்றாக உறிஞ்சி விடுவதால், நிலத்தடி நீர் அடியோடு வறண்டு போகிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும், இந்த மரங்களை முழுமையாக அகற்றுவதற்கு அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஆபத்தை உணராமல் அறுபதுகளில் தமிழகத்தில் வேலிக்கருவேல விதைகளைத் தூவினர். அவை இன்று பூதாகரமாக வளர்ந்து விட்டன.

செப்டெம்பர் 11 ஆம் தேதி எனது ரிட் மனு மீது நடந்த விசாரணையில் கேரள மாநிலத்தில் இம்மரங்களை அகற்றியது பற்றிக் குறிப்பிட்டேன். அந்த விவரங்களைச் சேகரித்துத் தருமாறு நீதிபதி அவர்கள் கூறியதன்பேரில், நான் கேரள மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு உம்மண் சாண்டி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் மிகுந்த கனிவுடன் எனக்குப் பதில் கூறியதோடு, அம்மாநிலத் திட்டக் குழு அதிகாரிகளையும், பொதுப்பணித் துறை, வனத்துறை அதிகாரிகளையும் இதுகுறித்து எனக்குத் தகவல் அனுப்புமாறு ஏற்பாடு செய்தார்.

அதன்படி, கேரள அரசு எனக்கு அனுப்பி உள்ள மின் அஞ்சல் கடிதத்தில், தற்போது கேரள மாநிலத்தில் வேலிக்கருவேல மரங்கள் இல்லை; தொடர் மழை பெய்வதால் இந்த மரங்கள் அதிகமாக வளர்வது இல்லை; இம்மரங்களால் தமிழ்நாட்டுக்குத்தான் ஆபத்து உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

நீதிபதி சுதாகர்: வேலிக்கருவேல மரங்களை விறகாக விற்பதால் ஏழைகளுக்கு வருமானம் தருகிறது என்று கூறுகிறார்களே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

வைகோ: உண்மைதான். ஆனால், இதனால் ஏற்படுகிற ஆபத்துகள்தான் அதிகம். எதிர்காலத்தில் தமிழகமே வறண்ட நிலமாக ஆகிவிடும். இந்த மரங்களை மண்ணின் ஆழத்தில் உள்ள தூரோடு அகற்றினால்தான் பலன் அளிக்கும். தரைப்பகுதியோடு மரங்களை வெட்டினால் வெகு சீக்கிரத்தில் திரும்ப வளர்ந்து விடும். தற்போது ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள அறிக்கையை அரசு வழக்குரைஞர் சற்று முன்புதான் எனக்குக் கொடுத்தார்.

நீதிபதி சுதாகர்: வேலிக் கருவேல மரங்களை அரசாங்கமே டெண்டர் விடுவதில் பிரச்சினை ஏற்படும் என்று சிலர் கூறுகிறார்களே? திருவைகுண்டம் அணையில் தூர் வாருவது குறித்து நீங்கள் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்காடி, தூர் வார ஆணை பெற்றீர்கள். ஆனால், திருவைகுண்டம் அணையில் ஏராளமாக மணல் அள்ளப்படுகிறது, அதில் ஊழல் நடக்கிறது; எனவே தடை செய்ய வேண்டும் என்று இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கின்றார்களே?

வைகோ: இந்த வழக்குக்குத் தொடர்பு இல்லை என்றாலும், திருவைகுண்டம் அணை குறித்து நீங்கள் கூறியதால் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

144 ஆண்டுகளாக அந்த அணை தூர் வாரப்படாமல் இருக்கின்றது. அதனால், எட்டு அடி தேங்க வேண்டிய தண்ணீர் ஒரு அடி மட்டுமே தேங்குகிறது. எனவே, 25,560 ஏக்கர் நஞ்சை நிலங்கள் முப்போக சாகுபடி செய்து வந்த நிலை மாறி, ஒருபோக சாகுபடிக்கே தண்ணீர் கிடைப்பது இல்லை.

காந்தியவாதி நயினார் குலசேகரன் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் என்னை அணுகி, தூர் வாருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், நான் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்காடினேன். மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்காமல் இருந்தது. எனவே நீதி அரசர் ஜோதிமணி அவர்கள், ஜூலை 10 ஆம் தேதிக்குள் மத்திய அரசு அனுமதிகொடுக்காவிட்டால், ஜூலை 11 ஆம் தேதியில் இருந்து தமிழக அரசே தூர் வார ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். ஆனால் ஜூலை பத்தாம் தேதியன்றே மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்பின்னரும் தமிழக அரசு தூர் வாருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே, நான் ஜூலை 27 ஆம் தேதியன்று திருவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆகÞட் 6 ஆம் தேதிக்குள் தமிழக அரசு வேலையைத் தொடங்காவிட்டால் நானே பத்தாயிரம் விவசாயிகளோடு தூர் வாரும் வேலையைச் செய்வேன் என்று அறிவித்தேன்.

இதற்குப் பின்னர் தமிழக அரசு அவசர அவசரமாக பூமி பூஜை போட்டு வேலையைத் தொடங்குவதாக அறிவித்தது. அணைக்கட்டில் இருந்துதான் வேலையைத் தொடங்க வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் மணல் அள்ளக்கூடாது என்றும் நான் வைத்த கோரிக்கையைத் தீர்ப்பு ஆய நீதிபதி ஏற்றுக் கொண்டு, அவ்விதமே ஆணை பிறப்பித்தார். ஆனால் தமிழக அரசு அணைக்கட்டில் இருந்து வேலையைத் தொடங்காமல் மற்ற இடங்களில் மணல் எடுக்கும் தவறைச் செய்தது.

மணல் கொள்ளையைக் கடுமையாக எதிர்ப்பவன் நான். இன்றைய அரசு ஊக்குவிப்பதால்தான் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஆனால், மணல் அள்ளுவதைத் தடுக்கிறோம் என்று சொல்லி, தூர் வாருவதையே தடை செய்ய சிலர் முயல்கிறார்கள்.

தூர் வாரும் உத்தரவை அறிந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இதில் எனக்குக் கிடைத்த நற்பெயரைக் கண்டு பொறுக்க முடியாத சிலர், இங்கு வழக்குத் தொடுப்பதுடன் மட்டும் அல்லாமல், தூர் வாருவதையே தடுக்க முயல்கின்றனர். மணல் கொள்ளை ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று நான் போராடுவது நாட்டில் அனைவருக்கும் தெரியும். நீதிபதி குறிப்பிட்டதால் இந்த விளக்கத்தை நான் தர நேர்ந்தது.

2004 ஆம் ஆண்டு எனது கலிங்கப்பட்டி கிராமத்து பொதுப்பணித்துறை கண்மாயில் நானே மக்களைத் திரட்டி தூர் வாரும் பணியைச் செய்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அதைப் பாராட்டினார்கள். தற்போது கலிங்கப்பட்டி கண்மாயிலும் ஊரிலும் உள்ள வேலிக்கருவேல மரங்களை அகற்ற ஊர் மக்களோடு சேர்ந்து நான் குடி மராமத்து வேலை செய்ய விரும்புகிறேன். இதற்கு எனக்கு அனுமதி அளிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டார்.

கலிங்கப்பட்டி குறித்து நீங்கள் கேட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறிய நீதிபதி சுதாகர், வழக்கு விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment