Thursday, December 3, 2015

டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம்! நலம்பெற வைகோ வாழ்த்து!

உலகில் பல்வேறு காரணங்களால் ஊனம் ஏற்பட்டு, சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள். உலக அளவில் 70 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அதில் 7 கோடி பேர் இந்தியாவிலும், 25 இலட்சம் பேர் தமிழ் நாட்டிலும் இருக்கின்றார்கள்.

அ.தி.மு.க அரசு 2011 இல் பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் கடந்து ஆட்சி முடியும் இந்தத் தருவாய் வரை மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைக்காமல், வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் பொறுப்பற்ற நிலையில் இருப்பதிலிருந்தே இந்த ஆட்சி மாற்றுத்திறனாளிகள் மீது அக்கரை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. மாற்றுத் திறனாளிகள் நலன்காப்பதில் நாம் மிக மிக பின்தங்கி உள்ளோம் என்பதை வெட்கத்தோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

பெண் முதலமைச்சராக, துறையின் அமைச்சர் பெண்ணாக இருப்பதனால் தாய் உள்ளத்துடன் தங்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசிலித்து நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்தும், மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது அ.தி.மு.க.அரசு. இனி பொறுப்பதற்கில்லை என்று தங்களின் உரிமைகள் வென்றெடுக்க போராட்டக்களத்திற்கு தள்ளப்பட்டனர்.

வேதனையிலே சுழன்று, நெடிய இருண்ட வாழ்வில் விடியலை எதிர்பார்த்தவர்களுக்கு அவமதிப்பு, அவமரியாதை, அலைக்கழிப்பு, பொறுப்பின்மை, அசட்டுத்தன்மையுடன் அதட்டுகிறது அதிகாரவர்க்கம். காக்க வேண்டிய கரங்களே கைவிலங்கிட்டு காலில் போட்டு மிதிக்கிறது. நாகரிக உலகில் மனிதாபிமானமற்ற முறையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்பட்டு வருவது வருத்தத்துக்கு உரியது.

அவர்கள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை. தங்கள் உரிமைகளை தரமறுத்து அரசு பாரா முகத்துடன் இருந்த போது, நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி நீதியின் கதவை தட்டி தீர்ப்பைப் பெற்றனர். தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தூக்கி குப்பைக் கூடையில் வீசிவிட்டது அ.தி.மு.க அரசு. 

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றப் பாதையில் தடைக்கற்களாக இருக்கும் அதிகாரவர்கத்தின் மன ஊனத்தை உடைத்தெரிய மாற்றுத்திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் சொன்னார். என்னால் எல்லாவற்றையும் செய்யா முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும் என்பதை டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் தினத்தில் தாரக மந்திரமாக சூளுரை மேற்கொள்ளுங்கள்.

சபிக்கப்பட்டவர்கள் போன்று காலத்தால் கைவிடப்பட்டவர்களே, அழுதால் நிம்மதி என்று சாய்வதற்கு தோள்களை தேடுபவர்களே, இளைப்பாறுதல் எங்கே கிடைக்கும் என்று ஏங்குபவர்களே, நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பதனை நிருபித்திட 2016 இல் நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள். இன்றிருக்கும் நிலை நாளை இருக்காது நிலைமைகள் நிச்சயம் மாறும்.

செங்காந்த மலர் பூத்துக் குலுங்கும் கார்த்திகை மாதம் 17 ஆம் நாள் 03.12.2015 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு சுயமாகவும் சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை மறுமலர்ச்சி தி.மு.க கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன் என வைகோ தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment