Friday, December 4, 2015

தமிழ்நாட்டைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து, மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்! வைகோ கோரிக்கை!

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மாநகரமே வங்கக் கடலாக மாறி விட்டது. வீடுகளின் முதல் மாடி அளவுக்கு வெள்ள நீர் புகுந்ததால், இலட்சக்கணக்கான மக்கள் மொட்டை மாடிகளில் சிக்கிக் கொண்டு, உயிர் பிழைக்க வெளியேற வேண்டிய துயரத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னையில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை இரண்டு நாட்களாகச் சென்று பார்த்தபோது, மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். தமிழக அரசு நிர்வாகம் முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது.

வட கிழக்குப் பருவமழையின் தீவிரத்தை, வானிலை ஆய்வு மையம் கடந்த இரு மாதங்களாகவே சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்து இருந்தது. நவம்பர் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் அடைமழையால் சென்னை முழுவதுமே மழைநீர் வடியாமல் தத்தளித்துக் கொண்டு இருந்தது. தமிழக அரசு அப்போதே உரிய திட்டமிடல்களுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இருக்க வேண்டும்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தபோது, ஏரி உடையக்கூடிய அபாயம் இருப்பதை முன்கூட்டியே கணிக்காமல், அலட்சியமாக இருந்ததன் விளைவுதான் இன்று சென்னை நகரம் இத்தகைய கோரமான பேரழிவைச் சந்தித்தற்குக் காரணம் ஆகும்.

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில்ட இருந்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி நீரை பொதுப்பணித்தறை அதிகாரிகள் திறந்து விட்டதால், குறுகலான அடையாறில் நீர் வெளியேற முடியாமல் சென்னையை மூழ்கடித்து விட்டது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரின் அளவும், கனமழையால் ஏற்படும் வெள்ள அபாயமும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பு இல்லை. நிலைமையைக் கண்காணித்து பாதிப்பு ஏற்படாமல் உபரி நீரை வெளியேற்ற முதல்வர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் முதல்வரைத் தவிர, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எவருக்குமே எந்த அதிகாரமும் இல்லை. துறை ரீதியாக விரைந்து தேவையான முடிவுகளை எடுப்பதற்கு வழி இல்லாமல், அரசு நிர்வாக இயந்திரம் போயஸ் தோட்டத்து உத்தரவுக்காக காத்திருக்கும் அவலை நிலை தொடர்வதால், எந்தவிதத் திட்டமிடலோ, துறை வாரியாக ஒருங்கிணைப்போ அறவே இல்லை. இதன் ஒட்டுமொத்த விளைவாக சென்னை மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிராதரவாக நிற்கின்றனர். 

பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஏழை எளிய, நடுத்தர மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற முடியாமல் மழையில் நனைந்தபடியே உணவும், குடிக்கத் தண்ணீரும்கூட இல்லாமல் வெட்ட வெளியில் நிற்கும் கொடுமை சகிக்க முடியவில்லை.

காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, பீகார், குஜராத், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் வரவழைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சென்னையில் மக்களை மீட்பதற்குப் போதிய படகுகள் இல்லை. இருக்கின்ற படகுகளும் குறுகிய பகுதிகளில் சென்று மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. மீனவர்களின் படகுகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மற்றும் நீச்சல் வீரர்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தி இருந்தாலே நிலைமையைச் சமாளித்து இருக்கலாம்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு எங்கே கொண்டுபோய்ச் சேர்ப்பது என்று தெரியாமல் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் தவிக்கின்றன. ஆங்காங்கே உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மக்கள் தஞ்சம் அடைந்து இருக்கின்றார்கள். பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தக்கூட ஜெயலலிதா அரசு முன்வராதது மக்களிடையே பெரும் கோபத்தை மூட்டி இருக்கின்றது.

மழை வெள்ளத்தால், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் புத்தகங்கள், சொத்துப் பத்திரங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள், நீரில் மூழ்கியதால், ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை நடுத்தர மக்கள் எப்படித் தாங்கிக் கொள்வார்கள்?

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் உடைகள் வழங்குவதும், மருந்து மாத்திரைகள் வழங்குவதும்தான் உடனடித் தேவையாகும்.

தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் இருந்து தொண்டுள்ளம் கொண்டோர் உதவிப் பொருட்களைச் சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் உதவிப் பொருட்கள் சென்று சேர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மக்களுக்குத் தேவையான வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிடுமாறு பிற மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். ஏற்கனவே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக உதவ முன்வந்துள்ளார்.

வெள்ளச் சேதத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக வருகை தந்தது வரவேற்கத் தக்கது. இரண்டு கட்டங்களாக 1940 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இது போதுமானதல்ல.

காஷ்மீர் மாநிலத்தில் 2014 செப்டம்பரில் பெரு மழையால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, 1000 கோடி ரூபாயும், 2015 பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் காஷ்மீர் வெள்த்தால் பெரும் பாதிப்புக்கு ஆளானபோது 5030 கோடி ரூபாயும் பிரதமர் மோடி அவர்கள் நிவாரணத் தொகையாக அறிவித்தார்.

இதன்பிறகு, கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, கடுமையாக பாதிப்புகளைச் சந்தித்த காஷ்மீர் மாநிலத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் சார்பில் வளர்ச்சி நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த ஆகஸ்டு மாதம் பீகார் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச் சேதம் மற்றும் தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவசாய நிலங்களில் பயிர்கள் சேதம், குடியிருப்பு வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கும் இலட்சக்கணக்கான மக்கள், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண உதவித் தொகையாக 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரின் இழப்பீடுகளைக் கணக்கெடுத்து நிவாரணங்களைச் சரியாக வழங்கிட, பணிகளை மேற்பார்வையிட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment