Tuesday, January 12, 2016

வைகோவின் பொதுவாழ்வு, 50 வருடங்களை கடந்து வெற்றி நடை!

தமிழகத்தின் கடைகோடியில் கலிங்கப்பட்டி என்ற கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்த வைகோ, தமது 8 ஆம் வயதில் பூமிதான இயக்கத்திற்காக நிலக்கொடை வேண்டி கலிங்கப்பட்டி கிராமத்திற்கு வருகை தந்த மகாத்மா காந்தி அடிகளின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தி அவர்கள் முன்னிலையில், பள்ளி ஆசிரியர்கள் அளித்த பயிற்சியால் ‘கடையெழு வள்ளல்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றி பாராட்டுப் பெற்றார். பள்ளி, கல்லூரியில் முதல் மாணாக்கராகத் திகழ்ந்தார். மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுக் கோப்பைகளை வென்றார். கைப்பந்து, கூடைப்பந்து ஆட்டங்களில் கல்லூரி அணியில் ஆடி வெற்றிகளைக் குவித்தார். கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்.

மாணவப் பருவத்திலேயே பேரறிஞர் அண்ணா அவர்களின் எழுத்தாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்டார். சென்னை சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது,1964 ஆகஸ்ட் திங்களில் நாள், சென்னை கோகலே அரங்கில் அண்ணா அவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.

1965 ஆம் ஆண்டு, கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழகத்தில் மாணவர்கள் புரட்சி வெடித்தபோது களப்பணி ஆற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் ஆனார். தமிழகம் முழுவதும் சுற்றிச்சுழன்று வந்தார். பட்டிதொட்டிகளில் எல்லாம் அவரது கொள்கை முழக்கம் ஒலித்தது. தமது பேச்சாலும், அயராத உழைப்பாலும் தொண்டர்களின் அன்பைப் பெற்றார்; அரசியல் படிக்கட்டுகளில் உயர்ந்தார்.

நெருக்கடி நிலையின் போது ஓராண்டுக் கால (1975-76) சிறைவாசம் ஏற்றார். 1978 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். நாள் தவறாமல் வாதங்களில் பங்கேற்றுக் கடமை ஆற்றினார். அவையில் அவர் எடுத்து உரைத்த கருத்துகள், அனைத்துத் தரப்பினரின் வரவேற்பைப் பெற்றது. இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய் உள்ளிட்ட பிரதமர்களின் தனிப்பட்ட அன்பைப் பெற்றார்.

1984, 1990 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுத் தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் பணி ஆற்றினார். 1998, 99 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், சிவகாசி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் பணி ஆற்றினார். ஒட்டுமொத்தமாக 24 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றி உள்ளார். இரண்டு முறை வாஜ்பாய் அழைத்தபோதும் கேபினெட் அமைச்சர் ஆகும் வாய்ப்பை மறுதலித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் இந்திய அரசின் சார்பில் பங்கேற்றார். ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்தது.

‘விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்’ என இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் பேசியதைத் திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் எடுத்துக் கூறியதற்காக, பயங்கரவாதத் தடுப்பு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் (577 நாள்கள்) சிறைவாசம் ஏற்றார். நாடு முழுமையும் பொடா சட்டம் குறித்த கண்டனக் கணைகள் எழுந்தன. கடைசியில் பொடா சட்டம் தவிடுபொடியானது. வரலாற்றுச் சாதனை படைத்தார் வைகோ.

மக்கள் பிரச்சினைகளுக்காகப் பல்வேறு போராட்டக் களங்களில் பங்கேற்று, சுமார் 30 முறை கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தமது அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் ஏற்று இருக்கின்றார். தடா சட்டத்தின் கீழ் வைகோவின் தம்பி வை. ரவிச்சந்திரன் ஓராண்டு சிறைவாசம் ஏற்றார். விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட மிசா, தடா, பொடா ஆகிய மூன்று அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் சிறைவாசம் ஏற்ற பெருமை வைகோவின் குடும்பத்தைச் சாரும்.

ஊழலை வேரறுக்கவும், மது ஒழிப்பு, நதிகள் இணைப்பு, தமிழக வாழ்வாதாரங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டார் வைகோ.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 51 நாள்கள்-1500 கிலோமீட்டர் இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் எழுச்சி நடைபயணம்;

மது ஒழிப்பு, நதிநீர் இணைப்பை வலியுறுத்தி, திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை, சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாள்கள் 1200 கிலோமீட்டர் மறுமலர்ச்சி நடைபயணம்;

பூம்புகாரில் இருந்து கல்லணை வரை காவிரி பாதுகாப்பு நடைபயணம் - 7 நாள்கள்
மதுரையில் இருந்து கம்பம் வரை முல்லைப்பெரியாறு பாதுகாப்பு நடைபயணம் - 7 நாள்கள்

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க திருவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு நடைபயணம் - 3 நாள்கள்

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் திருடு போன நகைகளை மீட்டுத் தரக் கோரி திருநெல்வேலி வரை நடைபயணம் - 3 நாள்கள்.

மது ஒழிப்புக்காக, உவரியில் இருந்து மதுரை வரை - 13 நாள்கள்

காஞ்சி மாவட்டம் கோவளத்தில் இருந்து மறைமலை நகர் வரை - 13 நாள்கள்

பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை - 13 நாள்கள் என மூன்று நடைபயணங்கள்.

ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் 5000 கிலோமீட்டர்கள் நடந்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அது தவிர தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் சைக்கிள் பிரச்சாரப் பயணம் நடத்தி உள்ளார். ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் சுமார் 50,000 கிராமங்களுக்குள் சென்று மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்துள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பதற்காகப் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வாதாடி வருகின்றார்.

சொற்பொழிவாளராக மட்டும் அன்றி எழுத்தாளராகவும் பரிணமித்து இருக்கின்றார். அவரது நூல்கள் வாசகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று இருக்கின்றன.

உலகில் தமிழர்களுக்கு எங்கே இடர் நேர்ந்தாலும் வைகோவின் குரல் ஒலிக்கின்றது. ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காக, தமிழ் ஈழத்திற்காக 30 ஆண்டுகளாக உலக அரங்குகளில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

சுமார் நான்கு ஆண்டுக்காலம் தமிழகத்தில் தங்கி, அனைத்துச் சொற்பொழிவாளர்களின் உரைகளையும் கேட்டுக் கள ஆய்வு நடத்திய அமெரிக்க ஆராய்ச்சி மாணவர் பெர்னார்டு பெய்ட், ‘தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர் வைகோ’ எனத் தம் ஆராய்ச்சி முடிவுகளைப் பல்கலைக்கழகத்திற்கு அளித்தார்.

அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், தன்னலம் இன்றித் தமிழ்நாட்டுக்குத் தொண்டு ஆற்றி வருகின்ற வைகோவின் பொதுவாழ்க்கை 51 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.

இதனையொட்டி, 2016 பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரையிலும் ஒருநாள் நிகழ்வாக, சென்னை காமராசர் அரங்கில் வைகோ பொதுவாழ்க்கைப் பொன்விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கின்றது. தமிழக, அனைத்திந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பொன்விழா நிகழ்வுகளில் கழக கண்மணிகள் குடும்பத்தோடும், பொதுமக்களோடும் பங்கேற்றுச் சிறப்பித்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா:
2016 பிப்ரவரி 9 செவ்வாய்கிழமை
சென்னை - காமராசர் அரங்கம்
காலை 10.00 மணி முதல் இரவு 10 மணி வரை

எழுத்தாக்கம்: அருணகிரி

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment