Sunday, January 24, 2016

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலைக்கு ஜெயா அரசே பொறுப்பு! வைகோ கண்டனம்!

சித்தமருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

விழுப்புரம் மாவட்டம்- சின்னசேலம் அருகில் பங்காரத்தில் இயங்கி வந்த இயற்கை மற்றும் சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் மூவர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது.

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் விதிமுறைகள் பின்பற்றப்படாததாலும் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டது. திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எர்ணாñரைச் சேர்ந்த மோனிஷா, காஞ்சிபுரம் செய்யூரைச் சேர்ந்த சரண்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தலா 2 இலட்சம் ரூபாய் அளித்துவிட்டு, இந்தக் கல்லூரியில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் பயின்று வந்தனர். இரண்டாம் ஆண்டில் பயின்ற மாணவிகள் அடிப்படை வசதிகள் இன்றி, சரிவர செயல்படாத இக்கல்லூரி நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையிடமும புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து மாணவிகளிடம் பெற்ற கட்டணத் தொகை மற்றும் சான்றிதழ்களை திருப்பி அளிக்குமாறு எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால், ஆட்சியரின் உத்தரவை ஏற்காமல், கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்தது.

பல்வேறு சிரமங்கள், குடும்பப் பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா மூவரும் ஒன்றாக கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி கண்ட கனவுகள் ஒரு நொடியில் சிதைந்துவிட்டன. இந்தக் குடும்பங்களுக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்?

அடிப்படை வசதிகள் இல்லாமல் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு அரசு அனுமதி வழங்கியது ஏன்?

கல்வித்துறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுவதால், மூன்று மாணவிகளின் உயிர் பறிபோய் இருக்கிறது. ஜெயலலிதா அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.


சின்னசேலம் பங்காரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகளின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment