Wednesday, January 13, 2016

படிமப் பாறை (சேல் கேஸ்) வாயு எடுக்கத் தடை கோரிய ம.தி.மு.க. வழக்கில் வைகோ வாதம்!

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் படிமப் பாறை (சேல் கேஸ்) வாயு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் இன்று (12.1.2016) வைகோ எடுத்து உரைத்த வாதம்:

தமிழ்நாட்டின் காவிரி தீரத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்திலும் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. 

விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையான போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறைவேற்றாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று கூறியதே தவிர, அந்தத் திட்டத்தை ரத்துச் செய்யவில்லை. அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இந்தப் பின்னணியில் படிமப் பாறை எரிவாயு (சேல் கேஸ்) எடுப்பதற்கும் மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சித்து வருகின்றது. அண்மையில் ஜெயங்கொண்டம் அருகில் புதுக்குடி என்ற கிராமத்தில் சேல் கேஸ் எடுப்பதற்கான ஆய்வுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டதால், பொதுமக்கள் திரண்டு அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். கொள்ளிடத்திற்கு அருகில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இங்கிருந்துதான் தண்ணீர் வீராணம் ஏரிக்குச் செல்கிறது; சென்னை மாநகரக் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது.

காவிரிப்படுகையில் நீண்ட காலமாக குரூட் ஆயில் எடுக்கப்பட்டு வருவதால், குறிப்பாகக் கீழத்தஞ்சை பகுதியில் குழாய்க் கிணற்றுத் தண்ணீரைக் கூடப் பருக முடியவில்லை.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதியன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மீத்தேன் எரிவாயுக் கசிவினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு பலர் இரத்த வாந்தி எடுத்துள்ளனர். இதைச் சரி செய்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்று கலிபோர்னியா எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் படிமப் பாறை வாயு (சேல் கேஸ்) எடுக்கின்ற எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டுகிறேன்’ இவ்வாறு வைகோ கோரினார்.

ஓஎன்ஜிசி நிறுவனமும், மத்திய அரசும் பதில் அளிப்பதற்கு வாய்ப்பு அளித்து, வழக்கு விசாரணை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் தேவதாஸ், நன்மாறன், செந்தில்செல்வன், சுப்பிரமணி ஆகியோர் உடன் ஆஜரானார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment