Sunday, January 3, 2016

சமையல் எரிவாயு விலை உயர்வு; மண்எண்ணெய் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம். மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்! வைகோ அறிக்கை!

பத்து இலட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை இரத்து செய்வதாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள மத்திய பா.ஜ.க அரசு, அதன் தொடர்ச்சியாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை விலையை ரூ 621 லிருந்து ரூ 671.50 ஆக  50 ரூபாய் உயர்த்தி இருக்கின்றது. சமையல் எரிவாயு மானியத்தை முற்றாக ஒழிப்பதுதான் மோடி அரசின் திட்டம் ஆகும். அதற்கு முன்னோட்டமாகவே இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 37 டாலர் அளவுக்குப் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளபோதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்க முன்வராமல், மேலும் மேலும் விலையை உயர்த்திக் கொண்டே போவதை ஏற்க முடியாது. 

உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனமும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பதால் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசைப் போலவே,பா.ஜ.க. அரசும் அடித்தட்டு மக்கள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மேலும், சமையல் எரிவாயு போன்று மண் எண்ணெய் மானியத்தையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. 2013 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்று அரசு மானியங்களை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், மோடி அரசு பொறுப்பு ஏற்ற பின்னர், காங்கிரஸ் அரசு காட்டிய வழியைத்தான் பின்பற்றுகிறது.

இனி பொதுப் பங்கீட்டுக் கடைகளில் மண் எண்ணெய் பெற்று வந்தவர்கள் அனைவரும், வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். 

நாட்டின் பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தையும், சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment