Tuesday, January 12, 2016

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்குக் கேரள சிறப்பு காவல் படையை நிறுத்துவதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது! வைகோ கோரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவைச் செயற்படுத்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் உச்சநீதிமன்றப் பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது. அணையின் நிர்வாகத்தைத் தமிழகமும், பாதுகாப்பைக் கேரளமும் கவனித்து வருகின்றன. பாதுகாப்புக்கான செலவுத் தொகையையும் தமிழகம் வழங்கி வருகிறது. 

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்லும் தமிழகப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வந்ததால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎÞஎப்) வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. 

இதற்கு மத்திய அரசு அளித்த பதில் மனுவில், முல்லைப்பெரியாறு அணை கேரள மாநில எல்லைக்குள் அமைந்து இருக்கின்றது. அரசியல் சட்டத்தின்படி, சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எனவே, கேரள அரசு கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்தியப் படை மூலம் பாதுகாப்பு வழங்க முடியும். அப்படி வழங்கினால், அதற்கான செலவுத் தொகையை அந்த மாநில அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அணையின் பாதுகாப்பை முழுமையாகக் கவனித்துக் கொள்வதாக கேரள அரசு உறுதி அளித்து இருக்கின்றது. எனவே, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை இல்லை என்று தெரிவித்து இருந்தது. 

மத்திய அரசின் இந்த பதில் மனுவுக்கு எதிராகத் தமிழக அரசு மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளது. 

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புப் பணிகளில் கேரள அரசின் சிறப்பு காவல் படை யினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று, கேரள மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜனவரி 10 ஆம் தேதி அறிவித்து உள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்னமும் நிலுவையில் இருக்கும்போது, இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, கேரள அரசின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. 

முல்லைப் பெரியாறு பேபி அணையைப் பராமரிக்கும் பொறுப்பு தற்போது தமிழக அரசிடம்தான் இருக்கின்றது. இதனைப் பறிக்க கேரள அரசு சூழ்ச்சி செய்கிறது. 

முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடம், பெரியாறு புலிகள் சரணாலயம் ஆகும். அங்கே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் எந்தவிதமான குடியிருப்பு வீடுகளோ அல்லது வேறு எந்தக் கட்டமைப்பு வசதிகளையோ செய்ய முடியாது. 

வனப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, சரணாலயப் பகுதிக்குள் கேரள மாநில காவல்துறை பாதுகாப்புப் போட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்பதால், கேரள அரசின் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்  என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment