Monday, February 15, 2016

சேல் எரிவாயுத் திடடத்தை எதிர்த்து பசுமைத் தீர்ப்பாயத்தில்வைகோ வாதம்!

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில், சேல் எரிவாயு எனப்படும் படிமப் பாறை எரிவாயு எடுக்கும் முயற்சியில் இந்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு இருப்பதை எதிர்த்து,  தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் விவசாயிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி ஜோதிமணி, நிபுணர் நாகேந்திரன் முன்னிலையில் இன்று (15.2.2016) வைகோ முன்வைத்த வாதம்:

இந்திய அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்காகத் தமிழ்நாட்டைப் பலிகடா ஆக்குகின்ற முயற்சியில் முன்னைய காங்கிரஸ் அரசைப் போலவே, இன்றைய நரேந்திர மோடி அரசும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

தஞ்சாவூர், நாகை திருவாரூர் பெரம்பலூர் சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகாரத் திட்டத்திற்கு,  2011 ஜனவரியில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு தமிழக அரசு, ஒப்பந்தம் செய்தது. அதை எதிர்த்து, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களும், விவசாய சங்கங்களும் இடைவிடாது போராட்டம் நடத்தினர். நான் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து மக்களைத் திரட்டினேன். 

தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், ‘மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்; திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று 2015 அக்டோபர் 28 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 

ஆனால்,  ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் குறித்த காலத்தில் திட்டத்தை 
நிறைவேற்றாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக நரேந்திர மோடி அரசு நயவஞ்சகமாக அறிவித்தாலும், திட்டத்தை நிறைவேற்றுகின்ற எண்ணத்தோடுதான் செயல்பட்டு வருகின்றது. மீத்தேன் திட்டத்தைவிட  அபாயகரமான சேல் எரிவாயு எனப்படும் படிமப்பாறை எரிவாயுத் திட்டத்தை, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் 
ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளில் ஈடுபட்டு உள்ளது. 

குறிப்பாக ஜெயங்கொண்டம், கொள்ளிடம், குத்தாலம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் சேல் கேஸ் எடுப்பதற்கான ஆயத்த வேலைகளைச் செய்கிறது. அதற்காக பூமிக்குள் கிணறுகள் அமைக்கப்பட்டு, நச்சு வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதோடு, வெடி மருந்துகளைக் கொண்டு தகர்க்கவும் செய்கிறது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இந்தியாவின் வருமானத்திற்காகத் தமிழகத்தைப் பலிகடாக ஆக்குகின்ற முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’ என்று வைகோ கூறியவுடன், நீதியரசர் ஜோதிமணி, ‘முன் அனுமதி பெறாமல் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுவத சட்டவிரோதம்’ என்றார். மத்திய அரசும், மாநில அரசும், ஓஎன்ஜிசி நிறுவனமும் உரிய விளக்கங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment