Monday, February 22, 2016

இடதுசாரி தலைவர்களுக்கு எதிரான கொலைவெறி கருத்து; ஜனநாயகத்துக்கு ஆபத்து என வைகோ கண்டனம்!

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இந்துத்துவா கும்பல், ஏபிவிபி மாணவர் அமைப்பை தூண்டிவிட்டு நடத்துகின்ற வெறியாட்டங்கள் முடிவின்றி தொடருகின்றன. ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார், தேசத் துரோக சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முற்போக்கு சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட மாணவர்கள், மதசார்பின்மை, சமூகநீதி, உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், கருத்துரிமை போன்றவற்றில் உறுதியாக இருப்பதுடன், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் கருத்துப்பட்டறை நடத்தி வருகின்றனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மதவெறிக் கும்பல், ஜே.என்.யூ மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டார்கள் என்று அவதூறு செய்து சிறையில் தள்ளி உள்ளனர்.

இங்கு, ஆராய்ச்சி மாணவியாக பயின்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் து.இராஜா அவர்களின் மகள் அபராஜிதா உள்ளிட்ட 20 மாணவர்கள் மீதும், பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. மத அடிப்படைவாதத்தையும் இந்துத்துவா கொள்கைகளையும் சமரசமின்றி எதிர்க்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை தேசத்துரோகிகள்என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டம், அடையாளப்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது.

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் புகழ்பெற்று விளங்கும் சான்றோர் பலரை உருவாக்கிய கீர்த்தி மிக்கதாகும். இந்தியாவின் தலைசிறந்த இப்பல்கலைக் கழகத்தை சீர்குலைக்க முயன்றுவரும் இந்துத்துவா கும்பலின் முயற்சிகளை முறியடிப்பதில் இடதுசாரி தலைவர்கள் முன்னணியில் உள்ளனர். ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவரை விடுதலை செய்ய வேண்டும். மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசியச் செயலர் து.இராஜா மற்றும் ஆர்.எஸ்.பி. உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குச் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதால் சிபிஎம் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி. பவன் மீது தாக்குதல் நடத்திய, இந்துத்துவா கூட்டம், இடதுசாரி தலைவர்கள் மீது புழுதிவாரி தூற்றி வருகிறது. நாட்டு விடுதலைப் போராட்டத்தில் களம் கண்டு சிறைவாசம், அடக்குமுறை, சித்ரவதைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட பொது உடைமை இயக்கத் தலைவர்களை தேச விரோதிகள் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டம் முத்திரை குத்துவது மன்னிக்க முடியாத மாபாதகமாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் எள் முனை அளவு கூட பங்கேற்காத இந்துத்துவா கும்பல், மதத்தின் பெயரால் நாட்டை பிளவுபடுத்தியதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து அழிக்க முடியாது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்து மதவெறி கூட்டத்தின் கொட்டம் அதிகரித்து வருகிறது. மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும், இந்துத்துவாவை எதிர்க்கும் முற்போக்கு சிந்தனையாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்தான் பாஜக தேசிய செயலாளர் எச்.இராஜா வாய்கொழுப்புடன், இடதுசாரித் தலைவர்களுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, து.இராஜா மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஜே.என்.யூ மாணவர் போராட்டத்தில் முன் நிற்கும் தனது மகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் து.இராஜா சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ள கொலைவெறி கருத்துகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜனநாயக நாட்டில் இத்தகைய பாசிசப் போக்குகளை அனுமதிப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும், நாவடக்கமின்றி இதுபோன்று தொடர்ந்து பேசிவரும் எச்.இராஜா மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment