Tuesday, December 20, 2016

ஓமன் இணையதள அணி பங்கேற்ப்பு, அனைத்து நாட்டு வேங்கைகளுக்கும் அழைப்பு!

தமிழினத்தை அதன் வாழ்வாதாரங்களை காக்க தினமும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு தன் வாழ்வையே தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் அற்ப்பணித்து கடந்த 52 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மதிமுக இணையதள அணி வேங்கைகளை சந்திக்க ஆவல் கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.

இணையத்தில் எதிராளிகளை வியூகம் அமைத்து எப்படி பதிலடி கொடுப்பது போன்றவைகளையும் கலந்துரையாடலாம். தலைவர் வைகோ அவர்கள் இணையதள அணி வேங்கைகளுடன் மனம் திறந்து பேச உள்ளார்.

ஓமன் இணையதள அணி சார்பிலும் விடுமுறைக்காக தாயகம் வந்திருக்கிற இணையதள வேங்கைகள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். 

எனவே அனைத்து நாடுகளிலும் வாழும் இணையதள அணி வேங்கைகள் வாய்ப்பிருந்தால் இந்த அதிமுக்கியமான நிகழ்வை சிறப்பிக்க சிரமம் பார்க்காமல்  கலந்துகொள்ளுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் விரும்பி கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் இது பல நாடுகளில் வாழும் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவும் ஒரு வாய்ப்பாகவும் அமையுமென்பதால், உங்களை சந்திக்க ஆவலாய் அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்.

நாள்: 27.12.2016 செவ்வாய்க்கிழமை 
இடம்: சிராஜ் மஹால் - சென்னை எழும்பூர் இரயில் நிலையம் எதிரில்
நேரம்: காலை 10 மணி

மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி

மறுமலர்ச்சி இணையதள செயல்வீரர்கள் சிறப்புக் கூட்டம்! வைகோ அழைப்பு!

பேரன்பிற்குரிய மறுமலர்ச்சி இணையதள கண்மணிகளே! வணக்கம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்களைப் பரப்புவதிலும், பகைவர்கள் நம் மீது ஏவுகின்ற பானங்களை முனைமழுக்கச் செய்வதிலும், வாத வல்லமையால் எதிரிகளை நடுங்க வைப்பதிலும் நிகரற்ற செயல்திறனை இணையப் பெருவெளியில் வெளிப்படுத்தி வருகின்ற மறுமலர்ச்சி இணையதள கண்மணிகளின் தன்னலம் கருதா உழைப்பை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.

எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்களின் பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் கழகத்திற்காகச் செலவிடும் உங்களின் அரிய பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். இயக்கம் என்றைக்கும் உங்களின் அரிய பணிகளை மறவாது.

நமது அரசியல் கடமைகளை முழு வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம். 2017 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக வீறுகொண்டு எழும் ஆண்டாக உதயமாகும்.

அதற்கு ஏற்றவாறு வருகின்ற காலங்களில் இணைய வெளிகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார யுக்திகளை வகுத்திடவும், மறுமலர்ச்சி இணையதள வீரர்களின் பணிகளை நெறிப்படுத்தவும், தங்களிடம் பல்வேறு செய்திகளை மனந்திறந்து பேசிடவும், திட்டமிட்டு, மறுமலர்ச்சி இணையதள தோழர்களின் சிறப்புக் கூட்டத்தை வருகின்ற 27.12.2016 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் எதிரில் உள்ள சிராஜ் மகாலில் கூட்டியுள்ளேன்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் இணையதள கண்மணிகள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள
(வைகோ)


என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அழைப்பு செய்தியில் மதிமுக இணையதள அணி கண்மணிகளை அழைத்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கலைஞரை காணச் சென்றபோது நடந்தது என்ன? வைகோ அறிக்கை!

நவம்பர் திங்களில் திமுக தலைவர் அண்ணன் கலைஞர் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்த மாத்திரத்தில், சகோதரி கனிமொழி அவர்களிடம் தலைவர் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியாகவும், கவலையாகவும் இருக்கிறது. தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன். உடம்பில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டப்படுகிறார்கள். பயப்படும்படியாக இல்லை என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் சகோதரர் மு.க.அழகிரி அவர்களிடம், அப்பா அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன், ஒன்றும் கவலைப்பட வேண்டாம். ஓரிரு நாட்களில் குணமடைந்து வீடு திரும்பிவிடுவார்கள் என்றார். நான் நிம்மதி அடைந்தேன். அவர்கள் இல்லம் திரும்பியபோது, என் மனம் அமைதி அடைந்தது.

டிசம்பர் 15 ஆம் தேதி அன்று தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அறிந்து, மனம் தாங்கமுடியாத வேதனையுற்றது. அன்றுதான் டில்லியில் பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்தித்துவிட்டு, சென்னை வந்து விமானத்தில் திருச்சிக்கு சென்று அங்கிருந்து காரில் பயணித்து விடிற்காலை 3 மணிக்கு ராமேசுவரம் போய் சேர்ந்தேன்.

ஏற்கனவே நான் அறிவித்த மீனவர்களைப் பாதுகாக்கும் அறப்போராட்டம் டிசம்பர் 16 இல் திட்டமிட்டபடி அங்கு நடைபெற்றது. 15 ஆம் தேதி எனக்கு மிக நெருங்கிய உறவினராகிய ஒரு அம்மையார் தேனியில் மறைந்துவிட்டதால், ராமேசுவரத்திலிருந்து நேற்று டிசம்பர் 16ஆம் தேதி இரவு தேனி போய்ச் சேர்ந்தேன், உறவினர் வீட்டில் துக்கம் கேட்டாலும், மனமெல்லாம் காவேரி மருத்துவமனையைச் சுற்றியே வட்டமிட்டது.

காலை செய்தித்தாள்களைப் பார்த்து கலைஞர் அவர்கள் உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி அறிந்து கவலை குறைந்தது.

கலிங்கப்பட்டி கிராமத்தில் நாளை 18 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த நான், அதனை ரத்து செய்துவிட்டு, கலைஞர் அவர்களை மருத்துவமனையில் சந்திக்க வேண்டும் என்பதற்காக மதுரையிலிருந்து மாலை 5. மணிக்குப் புறப்பட்ட ஜெட் விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தேன்.

சென்னைக்கு வந்த உடன், விமான நிலையத்திலிருந்தவாறு சகோதரி கனிமொழியிடம், தலைவரைப் பார்க்க நான் காவேரி மருத்துவமனைக்கு வருகிறேன். தலைவரை பார்க்க முடியுமா? என்று கேட்டேன். அவர் சிசிக்சை பெறும் அறைக்குச் சென்று பார்க்க யாரையும் அனுமதிப்பது இல்லை என்றார். திரு ராகுல்காந்தி அவர்கள் அறைக்குள் சென்று பார்த்திருக்கிறாரே! பரவாயில்லை. நான் பார்க்க முடியாவிட்டாலும், உன்னையும் உன் சகோதரர்களையும், உன் அம்மா அவர்களையும் பார்த்து தலைவரின் நலம் விசாரித்துவிட்டுப் போகிறேன் என்று தகவல் தெரிவித்துவிட்டேன்.

எனவே, நான் அங்கு மருத்துவமனைக்கு கலைஞரை பார்க்க வரப்போவது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். திமுக பொருளாளர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணன் கோ.சி.மணி அவர்கள் படத்திறப்பிற்காக சென்றுள்ளார் என்ற செய்தியும் கிடைத்தது. அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மறைந்தபோது, அண்ணன் மணி அவர்களுக்கு நான் மலர் வளையம் வைக்கச் சென்றபோது, ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் சிலர் கூச்சலிட்டார்கள். ஆனால், அண்ணன் கோ.சி. மணி குடும்பத்தாரும், திமுக பழைய தோழர்களும் அவர்களை கண்டித்தார்கள். அன்று மாலையில் மேக்கிரிமங்கலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், ஆடுதுறைக்கு நான் சென்றபோது, அதற்கு முன்பே அங்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் அனைத்து முன்னணியினரோடும் மயிலாடுதுறைக்குச் சென்றுவிட்டார். நான் சென்றபோது இன்னாள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்கூட அங்கு இல்லை. இரங்கல் கூட்டத்திற்கு சென்றால், அங்கும் ஏதாவது அசம்பாவிதம் நடைபெறலாம். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிறு குறையும் வந்துவிடக்கூடாது என்று கருதி, நான் என் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஊருக்குப்போய்விட்டேன். ஆனால், எங்கே நான் இரங்கல் கூட்டத்துக்கு வந்துவிடுவேனோ என்று கருதி அண்ணன் கோ.சி. மணி அவர்களுக்கு இரங்கல் கூட்டமே நடத்தப்படவில்லை.

மேக்கிரிமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் எதிர்க்கட்சி தலைவர் இரங்கல் கூட்டத்தை நடத்த முற்படவில்லை. படத்திறப்பு நிகழ்ச்சியின்போது பேசிக்கொள்ளலாம் என்றாராம். கழகத்தின் ஒரு கிளைச் செயலாளர் இறந்தாலும் இரங்கல் கூட்டம் நடத்துவது வழக்கம்.

20 ஆம் தேதி நடக்க இருந்த பொதுக்குழுவை ஒத்தி வைத்ததைப் போன்று, படத்திறப்பு நிகழ்ச்சியை மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்துவிடலாம். திமுக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெறிந்து அவரது அருகிலேயே இருந்திருக்கலாம். அதுபற்றி முடிவு எடுப்பது அவர்களது உரிமை.

நான் வருவதை முன்கூட்டி அறிந்துகொண்டு, திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி ஏற்பாட்டின் பேரில்தான் என்னைத் தாக்குவதற்கு திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டு, 10 பெண்கள் உட்பட 70 பேர் மருத்துவமனைக்கு அருகில் திடீரென்று குவிக்கப்பட்டார்கள். நானும் மல்லை சத்யா அவர்களும், முராத் புகாரி அவர்களும், 7 மாவட்டச் செயலாளர்களும் காவேரி மருத்துவமனையை நெருங்கும்போதே அதில் முதல் காரில் முன் இருக்கையில் வந்த என்னை நோக்கி செருப்புகளும், கற்களும் வீசப்பட்டன. கார் மீது மரக்கட்டைகள் வந்து விழுந்தன. என் பின்னால் வந்த வண்டிகளில் வந்த தோழர்கள் நியாயமான ஆத்திரத்தோடு முன்னால் ஓடிவந்தார்கள். நான் காரைவிட்டு இறங்கி, அவர்கள் அனைவரையும் சத்தம்போட்டு, அவர்கள் தாக்கினால் தாக்கட்டும். நாம் திரும்பிச் சென்றுவிடுவோம் என்று கூறியவாறு அங்கிருந்து நாங்கள் சென்றுவிட்டோம்.

நடந்த சம்பவத்தை அறிந்து சகோதரர் மு.க.அழகிரி அவர்களும், சகோதரர் மு.க.தமிழரசு, சகோதரி செல்வி, ராஜாத்தி அம்மாள் அவர்களும் மிக மிக வருத்தப்பட்டார்கள் என்பதை உடனடியாக அறிந்தேன்.

எனது தாயார் மாரியம்மாள் 2015 நவம்பர் 6 ஆம் தேதி மறைந்தபோது, அன்று இரவு கலிங்கப்பட்டி வீட்டுக்கு சகோதரி கனிமொழி துக்கம் கேட்க வந்தார்கள். மறுநாள் காலையில், சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என் வீட்டுக்கு வரும்போது வாசலுக்கு வெளியில் இருந்தே அவரை மிக மரியாதையாக அழைத்துச் சென்று, என் தாயாரின் உடலுக்கு அவர் மலர்வளையம் வைத்தபின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவரை கௌரவமாக நடத்தி, பின்னர் வெளியில் வந்து மிக கவனமாக காருக்கு அனுப்பி வைத்தேன்.

முயலோடும் ஓடுவது, ஓநாயோடும் சேர்ந்து விரட்வது என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்ற தமிழ்ப் பழமொழி ஒன்றும் உண்டு. அது யாருக்குப் பொருந்தும் என்பதை இந்த நேரத்தில் தமிழக மக்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1964 இல் அறிஞர் அண்ணா முன்னிலையில் உரையாற்றி, அந்த இயக்கத்தின் மாணவர் பிரிவில் பணியாற்றி, 1965 ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிந்த பின்பு மாநிலக் கல்லூரி விக்டோரியா விடுதி தமிழ் மன்றத் தலைவராக இருந்த நான், கலைஞர் அவர்களை அழைத்துச் சென்று எனது தலைமையில் புதிய புறநானூறு என்ற தலைப்பில் உரையாற்றச் செய்தேன்.

1969 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சட்டக் கல்லூரியில் அறிஞர் அண்ணா சிலையை திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களை அழைத்துவந்து, ஆங்கிலத்தில் நான் வாசித்துக்கொடுத்த வரவேற்பு மடல்தான் 20 ஆண்டுகள் கோபாலபுரம் வீட்டில், அவர் பார்வையாளர்களை சந்திக்கின்ற இடத்தில் இடம் பெற்ற ஒரே ஒரு வரவேற்பு மடலாக சுவற்றில் இடம்பெற்றது. என் உயிருக்கு மேலாக அவர் மீது பக்தி செலுத்தினேன். அவரது நிழலில் வளர்ந்தேன். மூன்று முறை என்னை மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைத்தார். அவர்மீது துரும்புவிழ அனுமதிக்காதவனாக வாழ்ந்தேன்.

காலச் சுழற்சியில் நான் திமுகவிலிருந்து நீக்கப்பட்டேன். ஆயினும், அவர் படைத்த சங்கத் தமிழும், குறளோவியமும், பொன்னர் சங்கர் உள்ளிட்ட காவியங்களும் காலத்தை வென்று நிற்பவை என்று அரசியல் ரீதியாக மாறுபட்டு நின்ற காலத்திலும் சொல்லி வந்திருக்கிறேன்.

என் உதிர அணுக்களில் நன்றி உணர்ச்சி நீக்க முடியாதது. அவர் உடல்நலம் குறைந்து கஷ்டப்படுகிறாரே என்று நான் எவ்வளவு வேதனை அடைந்திருப்பேன் என்பது என் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

தலைவர் கலைஞர் அவர்கள் முழுமையாக உடல்நலம் பெற்று, வழக்கமான பணிகளை தொடர இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்.

இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு எதிரே நடைபெற்ற சம்பவத்தை கழகக் கண்மணிகள் பொருட்படுத்த வேண்டாம் என்பதோடு, எனக்கு இந்த சம்பவத்தால் எவர் மீதும் ஆத்திரமோ, வெறுப்போ அணு அளவும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வைகோ மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுகவின்ருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி கண்டனம்!

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலமில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மு.கருணாநிதியை அரசியல் நாகரீகம் கருதி 2016 டிசம்பர் 17ஆம் தேதி பார்க்க சென்றார். 

அதற்கு முன்னால் மு.கருணாநிதி அவர்கள் மகள் கனிமொழியிடம் தொடர்புகொண்டு கலைஞரை பார்க்க விரும்புகிறேன் என்றூ கேட்டு அவர்கள் வாருங்கள் என்பதற்கு பின்னரே சென்றிருக்கிறார் வைகோ.

இந்த விடயம் அனைத்து திமுகவினருக்கும் 1 மணி நேரத்திற்கு முன்னரே தெரிந்திருக்கிறது. இதனால் முக ஸ்டாலினின் திமுக வரலாறு தெரியாத கூலியாட்கள் வைகோ அவர்கள் வரும் போது கற்களை வீடியும், செருப்பை காட்டியும், கூச்சலிட்டும் வழி மறித்தனர்.

இதை பார்த்த வைகோ அவர்கள், தன்னால் எந்த விதமான கலவரமும் வந்துவிட கூடாது என மு.கருணாநிதியை பார்க்காமல் திரும்பி சென்று விட்டார்.

இது திட்டமிடப்பட்ட தாக்குதலாகும். ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் கூலியாட்கள் அனைத்து தாக்குதலுக்கான தளவாடங்களுடன் இருந்தனர். இது முக ஸ்டாலிலின் ஏவப்பட்ட கூலியாட்களாகவே இருக்க முடியும். ஏற்கனவே தன் இடத்தை வைகோ பிடித்து விட கூடாதென கட்டம் கட்டி வைகோவை நீக்கியதை போல இப்போது வைகோவின் மீதானை தாக்குதலை நிறைவேற்ற ஸ்டாலின் துடிப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

மேலும் இது போன்ற வன்மஙள் தொடருமாயின் மறுமலர்ச்சி திமு கழக கண்மணிகள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள் எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் எச்சரிக்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, December 12, 2016

இன்குலாப் அவர்களின் நினைவேந்தல் ஒத்தி வைப்பு!

மதிமுக முன்னெடுத்து நாளை 13-12-16 மாலை 5 மணி அளவில், எழும்பூரில் உள்ள சிரால் மஹாலில், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில், நடைபெறவிருந்த மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்வு மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரும் கழக கண்மணிகளுக்கு தகவலை பகிர அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீலாது வாழ்த்து!

அரபு மொழியில் ‘மீலாது’ எனும் சொல் ‘பிறந்தநாள்’ எனும் பொருளைத் தருவதாகும்.

ஹீரா மலைக் குகையில் திருவருளால் கிடைக்கப் பெற்ற இறைச் செய்தியை, மனிதகுலத்துக்கு வழிகாட்டும் ஒரு மார்க்கமாக நிறுவி, தன் உயிருக்கே உலை வைக்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு மக்கமா நகரிலே இருந்து மதினாவுக்குப் பயணமாகி, ‘பத்ரு போர்க்களம்’, ‘உகது போர்க்களம்’ என பல போர்க்களங்களில் தமது சகபாக்களான முஸ்லீம்களின் படை எண்ணிக்கையை விடப் பன்மடங்கு அதிகமான எண்ணிக்கையும், ஆயுத பலமும் கொண்ட எதிரிகளின் தாக்குதல்களைச் சந்தித்து, தானே ஆயுதமும் ஏந்தி சமர்க்களங்களில் வெற்றிகளை ஈட்டி மக்கமா நகரை அடைந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரான அண்ணலார் (ஸல்) முகமது நபிகள் நாயகம் பெருமானாரின் பிறந்த நாளைத்தான் மீலாது நபி விழாவாகக் கொண்டாடுகின்றார்கள்.

மனிதகுலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை வரிசைப்படுத்தி, ‘மாமனிதர்கள் நூறு பேர்’ என்ற அரிய நூலை எழுதிய அமெரிக்க நாட்டு எழுத்தாளரான மைக்கேல் ஹார்ட் அந்த நூலில் அண்ணலாரின் நபிகள் நாயகம் அவர்களுக்குத்தான் முதல் இடம் கொடுத்துள்ளார்.

எளிமையான வாழ்க்கை, அநியாயத்திற்கு அஞ்சாமை, கொண்ட கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதி, போர்க்களத்தில் அசாத்தியமான வீரம், உழைத்து உண்ணுதல், எளியவரிடம் அன்பு காட்டுதல், பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல் எனும் அனைத்துப் பண்புகளிலும் சிறந்து விளங்கிய அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்நாள் முழுமையும் பெரும்பாலான நாட்கள் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டது கிடையாது. பெரும்பாலான நாட்கள் அவரது எளிய விட்டில் அடுப்பு எரியவில்லை. வெறும் தண்ணீரும், சில நேரங்களில் அன்பர்கள் கொடுத்த பேரிச்சம் பழங்கள்தான் உணவாயிற்று.

செல்வ வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, அழகான இல்லத்தை மக்காவில் விட்டுவிட்டு, தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தைக் கொண்டு மதினாவில் மிக எளிமையான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆடுகள் வாங்கி ஆட்டுப் பண்ணை அமைத்து, ஆட்டுப் பாலையும் விற்று தமது வாழ்க்கைச் செலவுக்கு பயன்படுத்தினார்.

போர்களில் அவர் வென்ற ‘அரேபியா’ என்ற பரந்த வெளி, மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் மணல் பரப்பாலும் சூழப்பட்டது; ஐரோப்பாக் கண்டத்தின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி; அமெரிக்க ஐக்கிய நாட்டு நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ஆகும்.

இத்தகைய பேரரசின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவர் நேர்மையின் சிகரமாக வாழ்ந்ததால், அவருக்குப் பிரியமான பேரப்பிள்ளைகள் ஹசனும், உசேனும் பேரிச்சம் பழக் குவியலில் இருந்து பழங்களை எடுத்த போது அதைத் தடுத்து, இவை உன் பாட்டனின் சொத்து அல்ல; அரசாங்கத்தின் சொத்து, அதைத் தொடக்கூடாது என்று உரைத்த உத்தமராகத் திகழ்ந்தார்.

வீட்டில் உணவு சமைப்பதற்குத் தானியம் இல்லாததால், ஒரு யூதனிடம் தன் போர்க் கவச ஆடையை அடமானம் வைத்து முப்பது படி கோதுமையை வாங்கினார் என்பது உலகெங்கும் உள்ள ஆட்சியாளர்களுக்கு நேர்மைக்கான படிப்பினை ஆகும்.

அண்ணலார் உபதேசித்த பொன் மொழிகளுள் முக்கியமானதாக, ஒருபோதும் மது அருந்தாதீர்கள்; ஏனென்றால் தீமைகளுக்கெல்லாம் மூல ஆதாரமாக அமைந்துள்ளது; எல்லா இழிவான செயல்களுக்கும் முதன்மையாக உள்ள மது, எல்லாப் பாவங்களின் மொத்தத் தொகுப்பு ஆகும் என்பதால் மதுவை ஒழித்துக் கட்டுங்கள் என்ற அவரது ஆணையை ஏற்று, சகபாக்கள் சாராய பீப்பாய்களை உடைத்துத் தெருக்களில் ஓட விட்டார்கள்.

இன்று தமிழ்நாட்டின் சமூகச் சீர்கேட்டுக்கு மதுவே காரணமாக இருக்கின்றது. மதுவைத் தவிர்ப்போம்; முற்றாக அகற்றுவோம் என்று உறுதிகொள்ள வேண்டிய நாள் மீலாது விழா நாளாகும்.

அகிலம் போற்றும்அண்ணலார் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நன்னாளில் அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கும், இஸ்லாமியப் பெருமக்களின் தனித்துவமான மார்க்க நெறிகளை மதிப்பதற்கும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, December 11, 2016

திருவைகுண்டம் ஒகசெ சு.இராசகோபால் இல்ல மண விழாவில் வைகோ!

திருவைகுண்டம் ஒன்றிய கழகத்தின் செயலாளர் சு.இராசகோபால் அவர்களின் அருமைப் புதல்வன் சுப்பையா கமலவேணி ஆகியோர் திருமணம் இன்று(11.12.2016) காலை தூத்துக்குடி கருங்குளத்தில் 10:40 மணியளவில் நடந்தது.

இந்த திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

இனியவளே உனக்காக நூலை பெற்றுக்கொண்டார் வைகோ!

சென்னை காமராஜர் அரங்கில் நேற்று 10.12.2016 மாலை இனியவளே உனக்காக என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் போதகர் சகோ.மோகன் சி.லாசர் அவர்கள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். அந்த நூலை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், சீமான்வேலுசாமி, திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, December 10, 2016

"இனியவளே உனக்காக" நூல் வெளியீட்டு விழாவில் வைகோ!

"இனியவளே உனக்காக" பெண்களுக்கான சிறப்பு புத்தக வெளியீட்டு விழா இன்று 10.12.2016 மாலை 6 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள, காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த பெண்களுக்கான நூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், சகாயம் ஆகியோர் பங்கேற்க்கிறார்கள். 


கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தலைவரின் உரையை உலகிற்கு எடுத்து சென்றிட அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் - வைகோ அறிக்கை!

காவிரி நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007 இல் இறுதித் தீர்ப்பை வழங்கியுடன், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. உச்சநீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்புடைய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என்பது குறித்து முதலில் முடிவெடுப்பதாகக் கூறியது. 

மேலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.

மத்திய அரசு சார்பில் அக்டோபர் 27, 2016 இல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அல்லாத அதற்கென தனி அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுகிறார்.

எனவே, நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பையே இறுதியானதாகக் கருத வேண்டும். அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய அரசியலமைப்பு விதிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யும் மனுக்களை மீண்டும் உச்சநீதிமன்றத்திமே விசாரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளில் இடம் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262(2) ன் படி, நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த பிறகு அதில் உச்சநீதிமன்றமோ, வேறு நீதிமன்றமோ தலையிட முடியாது; நாடாளுமன்றம் மட்டுமே தலையிட முடியும். எனவே இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அபிதவராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழகத்தின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுகளுக்கு முழு உரிமை உள்ளது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 6 (2)ன் கீழ் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என்று எடுத்துரைத்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்று டிசம்பர் 9 ஆம் தேதி வரவேற்கத்தக்க தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மாநில அரசுகள் தொடுத்த மேல்முறையீட்டு மனுக்களை அரசியல் சாசனம் 136 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று அறிவித்ததோடு, கர்நாடக மாநில அரசு, வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் நடந்துகொள்வதுடன், இதற்கு முன்னர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசனப் பகுதியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிவிட்டதால் நடப்பு ஆண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி முற்றாக அழிந்துவிட்டது. பருவமழை பொய்த்து, நீரின்றி பயிர்கள் காய்ந்து போனதால் 12 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட துயரம் நிகழ்ந்தது.

இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் முதலில் பிறப்பித்த உத்தரவை ஏற்று, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்திடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, December 9, 2016

புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்தார் வைகோ!

உடல்நலக்குறைவாக உள்ள புலவர் புலமைப்பித்தன் அவர்களை அவரது இல்லத்தில் மனித நேய தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்கள்.

படம் உதவி: இணையதள நேரலை அம்மாபேட்டையார்

ஓமன் மதிமுக இணையதள அணி

தொண்டனை மகிழ்வித்த தலைவன்!

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கழக தோழர் வைகோ ராஜ் அவர்கள் ஆட்டோவில் அமர்ந்து தொண்டனின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள். 

பட உதவி திரு.ஜி.ஆர்.பி.ஞானம் அவர்கள் 

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, December 8, 2016

தமிழக மீனவர்கள் வாழ்வை சூறையாடத் துடிக்கும் சிங்கள அரசின் ஆழிப் பேரலை! வைகோ கண்டனம்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கடலில் நீந்தி விளையாடி, படகுகளைச் செலுத்தி மீன்கள் செல்வத்தை வலைகளில் அள்ளியும், கடலின் ஆழ்மடியில் சிப்பிகளில் உறங்கும் முத்துக்களை எடுத்தும் தமிழகத்துக்கு வளத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கிய பரதவர்களாகிய மீனவ மக்களின் வாழ்வு 40 ஆண்டு காலமாக சிங்கள அரசின் கொடுமையால் சிதைந்து சின்னாபின்னமாகிறது.

தமிழகத்தின் உரிமை பூமியான கச்சத் தீவினை 1974 இல் இந்திய அரசு சட்ட விரோதமாக சிங்கள அரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்து, தமிழக மீனவர்களின் வாழ்வை பலி பீடத்தில் நிறுத்தியது.

ஒரு நாட்டின் குடிமகன், மற்றொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உயிரைப் பறிகொடுத்த நாடு வெகுண்டு வெளியுறவைத் துண்டிக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான முறை சிங்களக் கடற்படை தமிழர் கடலில் நுழைந்து, நமது கடல் பகுதியிலும், சர்வதேச கடல் பகுதியிலும் தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுப் படுகொலை செய்வதும், படகுகளை உடைப்பதும், வலைகளைக் கிழித்து எறிவதும், மீன்கள் செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், பல நேரங்களில் தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து அம்மணமாக்கி அடித்துக் கடலில் வீசுவதும், மேலும் பல வேளைகளில் நமது மீனவர்களைக் கொண்டுபோய் இலங்கைச் சிறைகளில் வதைப்பதும், தமிழர்களின் படகுகளை அங்கே சிறை வைப்பதும் பெரும்பாலும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தமிழக மீனவர்களை தன்னாட்டுப் பிரஜைகளாக இந்திய அரசு கருதுகிறதா? என்று கேட்டால், இல்லை என்ற பதில்தான் எழுகிறது.

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசால் இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி மடிந்தனர். இத்தனைக்குப் பிறகும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்குவது வாடிக்கையாகிப்போன நிலையில், சிங்கள அரசோடு இந்திய அரசு கூடிக் குலாவுகிறது. தமிழர்களின் வரிப்பணமும் சேர்ந்துதான் இந்தியக் கடற்படையினர் மாத ஊதியம் பெறுகின்றார்கள் என்ற உணர்வுகூட இல்லாமல், இந்தியக் கடற்படை அதிகாரிகள் சிங்களக் கடற்படையினரோடு கும்மாளமிடுகிறார்களே தவிர, தமிழக மீனவர்களைக் காக்க எந்தக் காலத்திலும் எள்ளளவும் செயல்பட்டது இல்லை.

இந்தப் பின்னணியில், இன்னும் ஒரு பெரும் கொடூரமான அபாயம் தமிழக மீனவர்களின் தலைக்குமேல் பேரிடியாக விழக் காத்திருக்கிறது. ஆழிப் பேரலை உயிர்களை வாரிச் சுருட்டியதைப் போல தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக நரகப் படுகுழியில் தள்ள சிங்கள அரசு திட்டம் போட்டுவிட்டது. 1979 சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றுவதோடு, ஒரு படகுக்கு 7 இலட்சம் முதல் 7 கோடி வரை அபராதம் விதிக்கும் அக்கிரமமான சட்டத்தை 2017 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் அரங்கேற்ற ஆயத்தமாகிவிட்டது.
தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் சிங்கள அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும், கடமையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், சிங்கள அரசின் அராஜகமான சட்டத்தை நிறைவேறவிடாமல் தடுக்கவும் மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில், இராமேஸ்வரத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகக் கண்மணிகளும், மீனவச் சகோதர சகோதரிகளும் அலைகடல் ஓரத்தில் வெள்ளமாய்த் திரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, December 7, 2016

மதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அறிவிப்பு!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் உயர்நிலைகுழு உறுப்பினராக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் அவர்களும், ஆய்வு மய்ய உறுப்பினராக ஆர்.மைக்கேல் ராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து செயலாற்ற தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

ஓமன் இணையதள அணி உறுப்பினர் நவநீதனுக்கு திருமண வாழ்த்து!

அன்பு சகோதரர் நவநீதன் அவர்கள், திருமண வாழ்க்கையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் அடியெடுத்து வைத்துள்ளார். அவர்களது திருமணம் புதூர் கம்மவர் திருமணம் மண்டபத்தில் வைத்து இனிமையாக நடந்துள்ளது. 

சகோதரர் அவர்கள் தனது வாழ்க்கை துணையாக ஜானகி என்பவரை கரம் பற்றியுள்ளார். அவரது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைந்து பல செல்வங்களையும் பெற்று ஒரு நல்ல தம்பதியாக புகழ் சேர்க்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திருமண நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, December 6, 2016

ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!

நேற்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி பவனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று 06-12-2016 மதியம் 3 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது துணைவியாருடன் சென்று ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா செய்த நற்பணிகளை எடுத்து கூறினார்.

உடன் கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கழக குமார், முராத் புஹாரி மற்றும் முன்னணி மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி மூலமாகவும் அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

வீரத் தமிழ் மங்கைக்கு வீர வணக்கம்-வைகோ இரங்கல்!

தாங்க முடியாத துக்கத்தின் பிடியில் தமிழகத்தையும் உலகு வாழ் தமிழர்களையும் தவிக்க விட்டுவிட்டு இரக்கம் அற்ற காலன் தமிழக முதல்வர் அன்புச் சகோதரி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உயிரைப் பறித்து விட்டான்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, அவரது மறைவுக்குப் பின்னர் புரட்சித் தலைவி எ~குக் கோட்டையெனக் கட்டிக் காத்தார்.

127 திரைப்படங்களில் தாரகையாக மின்னிய ஜெயலலிதா அவர்கள், ஓய்வு அறியாத படிப்பாளி; தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்.

சிவகங்கை அரசி வேலு நாச்சியாரைப் போன்ற போர்க்குணம் மிக்கவர். எந்த அச்சுறுத்தலுக்கும், எக்காலத்திலும் அஞ்சாதவர்.

மைசூரு படப்பிடிப்பின்போது கன்னட வெறியர்கள் சூழ்ந்துகொண்டு ‘தமிழ் ஒழிக’ என முழக்கம் இடம் சொல்லி அச்சுறுத்தியபோது, ‘நான் ஒரு தமிழச்சி; என் உயிரே போவதானாலும் சரி; தமிழ் வாழ்க என்றுதான் கூறுவேன்’ எனக் கர்ஜித்தவர்.

1997 ஆம் ஆண்டு, டாக்டர் நாவலர் அவர்களோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தந்தபோது, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என்று வருணித்தார்.

ஆறு முறை முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.

2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து நீக்கப்பட்டபோது, தன்னந்தனியாகச் சட்டமன்றத்திற்குள் சென்று, ஆளுங்கட்சியினர் தொடுத்த, அத்தனைக் கேள்விக் கணைகளையும் முறித்துப் பதில் உரைத்து, அரசியல் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

‘சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழக சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஈழத்தமிழர்களின் மேக்னா கார்ட்டாவாக அதனைப் பதிவு செய்ததால் தமிழர் வரலாறு அவருக்குப் பொன் மகுடம் சூட்டியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைக் காக்க, 1994 இல் இந்திய அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்குக் காரணம் ஆனார்.

தென் மாவட்டங்களின் உயிர் ஆதாரமான முல்லைப்பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில், துல்லியமாகத் திட்டமிட்டு சட்ட வல்லுநர்களைக் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, தமிழக உரிமையைப் பாதுகாத்துத் தந்த சாதனை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எடுத்துக் கொண்ட இடைவிடாத முயற்சிகளால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசு இதழில் இடம் பெற்றது.

கோடானுகோடி ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்து, இலவச அரிசி முதல் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.

டெல்டா மாவட்டங்களை நாசமாக்க முயன்ற மீத்தேன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து விரட்டியடித்தார்.

தற்போது, தமிழ்நாட்டின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் நீதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது மட்டும் அல்ல, செப்டெம்பர் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையிலும், தமிழகத்தின் உயர் அதிகாரிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார்;

ட்ரகாஸ்டமி என்ற குழல் தொண்டையில் பதிக்கப்பட்டு இருந்தபோதும், அவர் சன்னமான குரலில் பேசினார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அப்பல்லோ மருத்துவமனையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீல் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது, ‘செப்டிசீமியா’ எனும் மிகக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு, உடல் நலம் தேறி வருகின்றார் என்பதை அறிந்து நெஞ்சார மகிழ்ந்தேன்.

2006 ஆம் ஆண்டு கலிங்கப்பட்டி கிராமத்தில் என் வீட்டுக்கு வந்து என் தாயார் மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வெளியேவந்தபோது, ‘மறைந்து விட்ட என்னைப் பெற்ற தாயாரைப் பார்த்ததுபோல் உணர்ந்தேன்’ என்று செய்தியாளர்களிடம் கூறியதை எப்படி மறப்பேன்?

நெருப்பு வெயிலில் மாமல்லபுரத்தை நோக்கி நான் நடந்து கொண்டு இருந்தபோது, காரை நிறுத்தி இறங்குவதற்கான படிக்கட்டுகூட இல்லாத நிலையில், ஜெயலலிதா அவர்கள் கீழே இறங்கியதும், ‘இந்த வெயிலில் இப்படித் துன்பப்படுகின்றீர்களே, உணவு அருந்தினீர்களா?’ என்று சகோதர வாஞ்சையோடு கேட்டு என்னை நெகிழச் செய்ததும்;

2006 விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்ட மேடையில் என்னை ‘அன்பு அண்ணன் வைகோ’ என்று விளித்ததும்;

2011 அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று நான் முடிவு எடுத்தபோது, ‘முதிர்ந்த அரசியல்வாதியான உங்கள் மீது என்றைக்கும் மரியாதையும், அன்பும் வைத்திருக்கின்ற உங்கள் சகோதரி’ என்று 2011 மார்ச் 20 ஆம் தேதி தம் கைப்பட எனக்குக் கடிதம் எழுதியதும் என் நெஞ்சை விட்டு என்றைக்கும் அகலாது.

மகனை இழந்த தாயைப் போல, தாயை இழந்த சேயைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கண்ணீர் விட்டுக் கதறும் அவலம் இதயத்தை வாட்டுகின்றது.

கோடானுகோடித் தமிழர்கள் குறிப்பாகத் தாய்மார்கள், தங்கள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல வேதனையில் வாடித் தவிக்கின்றார்கள்.

பல்வேறு சோதனைகள் அறைகூவல்கள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள வேளையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், முன்னணியினரும் இலட்சோபலட்சம் அடலேறுகளும், தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, புரட்சித் தலைவர் நிறுவி, புரட்சித்தலைவியால் பாதுகாக்கப்பட்ட அண்ணா தி.மு.கழகத்தை எவராலும் நெருங்க முடியாத இரும்பு அரணாகக் காப்பார்கள்.

தங்கள் உயிர்த் தலைவியை இழந்து அழுது கண்ணீர் பெருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரை உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வீரத் தமிழ் மங்கைக்கு என் வீர வணக்கம்!

அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, December 5, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி இரங்கல்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 68 வயதான அவர் தன்னுடைய அதீத தைரியத்தால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர். இலங்கை தமிழர்களுக்கு இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக மக்களுக்கு ஒரு சாதனை பெண்மணியாகவே திகழ்கிறார். எவ்வளவு விமர்சனம் அவர் மீது வைத்தாலும், ஒரு பெண்மணியாக திறமையான நிர்வாகியாக அவர் மீது மதிப்பு உண்டு. 

மறைந்த ஜெயலலிதா அவர்கள் உடலுக்கு தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த இருக்கின்ற வேளையில் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் வைகோ!

அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, நாளை 06-12-2016 காலை 9 மணிக்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

கழக கண்மணிகள் ஏராளமாக கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, December 4, 2016

ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர் விஜயராகவனுக்கு திருமண வாழ்த்து!

ஓமன் திருநாட்டில் TMTECH நிறுவனத்தில் பணிபுரியும், ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர் விஜயராகவன் அவர்கள் தாய்நாட்டிற்கு தனது திருமணத்திற்காக சென்றிருந்தார்.

அவருடைய திருமணம் இன்று 04-12-2016 காலை கழுகுமலையில் நடைபெற்றது. ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர் ரமேஷ் கண்ணன் அவர்களும் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

விஜயராகவன் அவர்கள் திருமண வாழ்வில் இன்பங்களை சிறப்பாக பெற்று, பல செல்வங்களும் கிடைத்து வாழ்வாங்கு வாழ திருமண நல் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சிவானந்தம் இல்ல திருமண வரவேற்வில் வைகோ வாழ்த்துரை!


நெல்லை கல்லிடைக்குறிச்சி சிவானந்தம் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 04-122016 மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழின முதல்வர், வைகோ அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

உடன் கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி