அரபு மொழியில் ‘மீலாது’ எனும் சொல் ‘பிறந்தநாள்’ எனும் பொருளைத் தருவதாகும்.
ஹீரா மலைக் குகையில் திருவருளால் கிடைக்கப் பெற்ற இறைச் செய்தியை, மனிதகுலத்துக்கு வழிகாட்டும் ஒரு மார்க்கமாக நிறுவி, தன் உயிருக்கே உலை வைக்கும் ஆபத்துகளை எதிர்கொண்டு மக்கமா நகரிலே இருந்து மதினாவுக்குப் பயணமாகி, ‘பத்ரு போர்க்களம்’, ‘உகது போர்க்களம்’ என பல போர்க்களங்களில் தமது சகபாக்களான முஸ்லீம்களின் படை எண்ணிக்கையை விடப் பன்மடங்கு அதிகமான எண்ணிக்கையும், ஆயுத பலமும் கொண்ட எதிரிகளின் தாக்குதல்களைச் சந்தித்து, தானே ஆயுதமும் ஏந்தி சமர்க்களங்களில் வெற்றிகளை ஈட்டி மக்கமா நகரை அடைந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மகுடம் சூட்டிய பெருமகனாரான அண்ணலார் (ஸல்) முகமது நபிகள் நாயகம் பெருமானாரின் பிறந்த நாளைத்தான் மீலாது நபி விழாவாகக் கொண்டாடுகின்றார்கள்.
மனிதகுலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை வரிசைப்படுத்தி, ‘மாமனிதர்கள் நூறு பேர்’ என்ற அரிய நூலை எழுதிய அமெரிக்க நாட்டு எழுத்தாளரான மைக்கேல் ஹார்ட் அந்த நூலில் அண்ணலாரின் நபிகள் நாயகம் அவர்களுக்குத்தான் முதல் இடம் கொடுத்துள்ளார்.
எளிமையான வாழ்க்கை, அநியாயத்திற்கு அஞ்சாமை, கொண்ட கொள்கைகளில் அசைக்க முடியாத உறுதி, போர்க்களத்தில் அசாத்தியமான வீரம், உழைத்து உண்ணுதல், எளியவரிடம் அன்பு காட்டுதல், பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடத்தல் எனும் அனைத்துப் பண்புகளிலும் சிறந்து விளங்கிய அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்நாள் முழுமையும் பெரும்பாலான நாட்கள் மூன்று வேளையும் வயிறார உணவு சாப்பிட்டது கிடையாது. பெரும்பாலான நாட்கள் அவரது எளிய விட்டில் அடுப்பு எரியவில்லை. வெறும் தண்ணீரும், சில நேரங்களில் அன்பர்கள் கொடுத்த பேரிச்சம் பழங்கள்தான் உணவாயிற்று.
செல்வ வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து, அழகான இல்லத்தை மக்காவில் விட்டுவிட்டு, தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தைக் கொண்டு மதினாவில் மிக எளிமையான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆடுகள் வாங்கி ஆட்டுப் பண்ணை அமைத்து, ஆட்டுப் பாலையும் விற்று தமது வாழ்க்கைச் செலவுக்கு பயன்படுத்தினார்.
போர்களில் அவர் வென்ற ‘அரேபியா’ என்ற பரந்த வெளி, மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் மணல் பரப்பாலும் சூழப்பட்டது; ஐரோப்பாக் கண்டத்தின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி; அமெரிக்க ஐக்கிய நாட்டு நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி ஆகும்.
இத்தகைய பேரரசின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவர் நேர்மையின் சிகரமாக வாழ்ந்ததால், அவருக்குப் பிரியமான பேரப்பிள்ளைகள் ஹசனும், உசேனும் பேரிச்சம் பழக் குவியலில் இருந்து பழங்களை எடுத்த போது அதைத் தடுத்து, இவை உன் பாட்டனின் சொத்து அல்ல; அரசாங்கத்தின் சொத்து, அதைத் தொடக்கூடாது என்று உரைத்த உத்தமராகத் திகழ்ந்தார்.
வீட்டில் உணவு சமைப்பதற்குத் தானியம் இல்லாததால், ஒரு யூதனிடம் தன் போர்க் கவச ஆடையை அடமானம் வைத்து முப்பது படி கோதுமையை வாங்கினார் என்பது உலகெங்கும் உள்ள ஆட்சியாளர்களுக்கு நேர்மைக்கான படிப்பினை ஆகும்.
அண்ணலார் உபதேசித்த பொன் மொழிகளுள் முக்கியமானதாக, ஒருபோதும் மது அருந்தாதீர்கள்; ஏனென்றால் தீமைகளுக்கெல்லாம் மூல ஆதாரமாக அமைந்துள்ளது; எல்லா இழிவான செயல்களுக்கும் முதன்மையாக உள்ள மது, எல்லாப் பாவங்களின் மொத்தத் தொகுப்பு ஆகும் என்பதால் மதுவை ஒழித்துக் கட்டுங்கள் என்ற அவரது ஆணையை ஏற்று, சகபாக்கள் சாராய பீப்பாய்களை உடைத்துத் தெருக்களில் ஓட விட்டார்கள்.
இன்று தமிழ்நாட்டின் சமூகச் சீர்கேட்டுக்கு மதுவே காரணமாக இருக்கின்றது. மதுவைத் தவிர்ப்போம்; முற்றாக அகற்றுவோம் என்று உறுதிகொள்ள வேண்டிய நாள் மீலாது விழா நாளாகும்.
அகிலம் போற்றும்அண்ணலார் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நன்னாளில் அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கும், இஸ்லாமியப் பெருமக்களின் தனித்துவமான மார்க்க நெறிகளை மதிப்பதற்கும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment