Tuesday, December 20, 2016

மறுமலர்ச்சி இணையதள செயல்வீரர்கள் சிறப்புக் கூட்டம்! வைகோ அழைப்பு!

பேரன்பிற்குரிய மறுமலர்ச்சி இணையதள கண்மணிகளே! வணக்கம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியங்களைப் பரப்புவதிலும், பகைவர்கள் நம் மீது ஏவுகின்ற பானங்களை முனைமழுக்கச் செய்வதிலும், வாத வல்லமையால் எதிரிகளை நடுங்க வைப்பதிலும் நிகரற்ற செயல்திறனை இணையப் பெருவெளியில் வெளிப்படுத்தி வருகின்ற மறுமலர்ச்சி இணையதள கண்மணிகளின் தன்னலம் கருதா உழைப்பை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன்.

எந்தப் பிரதிபலனும் பாராமல் தங்களின் பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் கழகத்திற்காகச் செலவிடும் உங்களின் அரிய பங்களிப்பை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். இயக்கம் என்றைக்கும் உங்களின் அரிய பணிகளை மறவாது.

நமது அரசியல் கடமைகளை முழு வேகத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம். 2017 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக வீறுகொண்டு எழும் ஆண்டாக உதயமாகும்.

அதற்கு ஏற்றவாறு வருகின்ற காலங்களில் இணைய வெளிகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார யுக்திகளை வகுத்திடவும், மறுமலர்ச்சி இணையதள வீரர்களின் பணிகளை நெறிப்படுத்தவும், தங்களிடம் பல்வேறு செய்திகளை மனந்திறந்து பேசிடவும், திட்டமிட்டு, மறுமலர்ச்சி இணையதள தோழர்களின் சிறப்புக் கூட்டத்தை வருகின்ற 27.12.2016 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையம் எதிரில் உள்ள சிராஜ் மகாலில் கூட்டியுள்ளேன்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் இணையதள கண்மணிகள் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள
(வைகோ)


என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அழைப்பு செய்தியில் மதிமுக இணையதள அணி கண்மணிகளை அழைத்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment