தாங்க முடியாத துக்கத்தின் பிடியில் தமிழகத்தையும் உலகு வாழ் தமிழர்களையும் தவிக்க விட்டுவிட்டு இரக்கம் அற்ற காலன் தமிழக முதல்வர் அன்புச் சகோதரி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உயிரைப் பறித்து விட்டான்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிறுவிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, அவரது மறைவுக்குப் பின்னர் புரட்சித் தலைவி எ~குக் கோட்டையெனக் கட்டிக் காத்தார்.
127 திரைப்படங்களில் தாரகையாக மின்னிய ஜெயலலிதா அவர்கள், ஓய்வு அறியாத படிப்பாளி; தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர்.
சிவகங்கை அரசி வேலு நாச்சியாரைப் போன்ற போர்க்குணம் மிக்கவர். எந்த அச்சுறுத்தலுக்கும், எக்காலத்திலும் அஞ்சாதவர்.
மைசூரு படப்பிடிப்பின்போது கன்னட வெறியர்கள் சூழ்ந்துகொண்டு ‘தமிழ் ஒழிக’ என முழக்கம் இடம் சொல்லி அச்சுறுத்தியபோது, ‘நான் ஒரு தமிழச்சி; என் உயிரே போவதானாலும் சரி; தமிழ் வாழ்க என்றுதான் கூறுவேன்’ எனக் கர்ஜித்தவர்.
1997 ஆம் ஆண்டு, டாக்டர் நாவலர் அவர்களோடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தந்தபோது, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என்று வருணித்தார்.
ஆறு முறை முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து நீக்கப்பட்டபோது, தன்னந்தனியாகச் சட்டமன்றத்திற்குள் சென்று, ஆளுங்கட்சியினர் தொடுத்த, அத்தனைக் கேள்விக் கணைகளையும் முறித்துப் பதில் உரைத்து, அரசியல் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.
‘சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழக சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஈழத்தமிழர்களின் மேக்னா கார்ட்டாவாக அதனைப் பதிவு செய்ததால் தமிழர் வரலாறு அவருக்குப் பொன் மகுடம் சூட்டியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியைக் காக்க, 1994 இல் இந்திய அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்குக் காரணம் ஆனார்.
தென் மாவட்டங்களின் உயிர் ஆதாரமான முல்லைப்பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில், துல்லியமாகத் திட்டமிட்டு சட்ட வல்லுநர்களைக் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, தமிழக உரிமையைப் பாதுகாத்துத் தந்த சாதனை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எடுத்துக் கொண்ட இடைவிடாத முயற்சிகளால் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசு இதழில் இடம் பெற்றது.
கோடானுகோடி ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைப்பதில், கண்ணும் கருத்துமாக இருந்து, இலவச அரிசி முதல் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.
டெல்டா மாவட்டங்களை நாசமாக்க முயன்ற மீத்தேன் திட்டத்தைத் தமிழகத்தில் இருந்து விரட்டியடித்தார்.
தற்போது, தமிழ்நாட்டின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் நீதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டது மட்டும் அல்ல, செப்டெம்பர் 22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையிலும், தமிழகத்தின் உயர் அதிகாரிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார்;
ட்ரகாஸ்டமி என்ற குழல் தொண்டையில் பதிக்கப்பட்டு இருந்தபோதும், அவர் சன்னமான குரலில் பேசினார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.
அப்பல்லோ மருத்துவமனையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீல் அவர்களை நான் சந்தித்துப் பேசியபோது, ‘செப்டிசீமியா’ எனும் மிகக் கொடிய நோயின் பிடியில் இருந்து மீண்டு, உடல் நலம் தேறி வருகின்றார் என்பதை அறிந்து நெஞ்சார மகிழ்ந்தேன்.
2006 ஆம் ஆண்டு கலிங்கப்பட்டி கிராமத்தில் என் வீட்டுக்கு வந்து என் தாயார் மாரியம்மாளைப் பார்த்துவிட்டு வெளியேவந்தபோது, ‘மறைந்து விட்ட என்னைப் பெற்ற தாயாரைப் பார்த்ததுபோல் உணர்ந்தேன்’ என்று செய்தியாளர்களிடம் கூறியதை எப்படி மறப்பேன்?
நெருப்பு வெயிலில் மாமல்லபுரத்தை நோக்கி நான் நடந்து கொண்டு இருந்தபோது, காரை நிறுத்தி இறங்குவதற்கான படிக்கட்டுகூட இல்லாத நிலையில், ஜெயலலிதா அவர்கள் கீழே இறங்கியதும், ‘இந்த வெயிலில் இப்படித் துன்பப்படுகின்றீர்களே, உணவு அருந்தினீர்களா?’ என்று சகோதர வாஞ்சையோடு கேட்டு என்னை நெகிழச் செய்ததும்;
2006 விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்ட மேடையில் என்னை ‘அன்பு அண்ணன் வைகோ’ என்று விளித்ததும்;
2011 அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று நான் முடிவு எடுத்தபோது, ‘முதிர்ந்த அரசியல்வாதியான உங்கள் மீது என்றைக்கும் மரியாதையும், அன்பும் வைத்திருக்கின்ற உங்கள் சகோதரி’ என்று 2011 மார்ச் 20 ஆம் தேதி தம் கைப்பட எனக்குக் கடிதம் எழுதியதும் என் நெஞ்சை விட்டு என்றைக்கும் அகலாது.
மகனை இழந்த தாயைப் போல, தாயை இழந்த சேயைப் போல, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கண்ணீர் விட்டுக் கதறும் அவலம் இதயத்தை வாட்டுகின்றது.
கோடானுகோடித் தமிழர்கள் குறிப்பாகத் தாய்மார்கள், தங்கள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்தது போல வேதனையில் வாடித் தவிக்கின்றார்கள்.
பல்வேறு சோதனைகள் அறைகூவல்கள் தமிழகத்தைச் சூழ்ந்துள்ள வேளையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும், முன்னணியினரும் இலட்சோபலட்சம் அடலேறுகளும், தங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, புரட்சித் தலைவர் நிறுவி, புரட்சித்தலைவியால் பாதுகாக்கப்பட்ட அண்ணா தி.மு.கழகத்தை எவராலும் நெருங்க முடியாத இரும்பு அரணாகக் காப்பார்கள்.
தங்கள் உயிர்த் தலைவியை இழந்து அழுது கண்ணீர் பெருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரை உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வீரத் தமிழ் மங்கைக்கு என் வீர வணக்கம்!
அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற வகையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment