Thursday, December 1, 2016

இலட்சியக் கவிஞர் இன்குலாப் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்!

இலட்சியக் கவிஞர் இன்குலாப் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

கீழக்கரையில் பிறந்த இன்குலாப், மதுரை தியாகராயர் கல்லூரியில் பயின்றபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். சாகுல் அமீது என்ற தனது இயற்பெயரை புரட்சியின் அடையாளமாக ‘இன்குலாப்’ என்று மாற்றிக்கொண்டார். கல்லூரியில் அவருக்கு மூத்த மாணவராகப் பயின்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

சென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றிய இன்குலாப் அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக் கவிஞராகத் திகழ்ந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைச் சங்கநாதமாக விளங்கிய அவருக்குத் தமிழ் ஈழ விடுதலை தாகமே மூச்சாக இருந்தது.

புரட்சிகரமான கவிஞர், பேராசிரியர், சீரிய சிந்தனையாளர், நாடக ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் படைப்புகள் கhலத்தை வென்று நிற்கக் கூடியவை.

2009 இல் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, 
தனக்கு தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை அரசுக்குத் திருப்பி அனுப்பி, ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறியதற்கு நீதி கேட்டார்.


“முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்”


என்று இன்குலாப் அவர்கள் எழுதிய கவிதை வரிகளில் அவர் நெஞ்சில் கனன்றுகொண்டிருந்த இலட்சிய நெருப்பைக் கhணலாம். ஈழத் தமிழ் இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு நான் தொகுத்து அளித்த “குற்றம் சாட்டுகிறேன்” என்ற நூலை வெளியிட்டவர் கவிஞர் இன்குலாப். ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கழகம் நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

கடந்த ஆகÞடு 17 அன்று தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் அவர் தனது உடல் நலம் குன்றிய நிலையில் பங்கேற்க வந்தபோது அருகருகே அமர்ந்து நெடுநேரம் உரையாடினோம். என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, கhல் ஒன்று அகற்றப்பட்டபோதும் அவரது தமிழ் இனத்தின் உரிமைக்கான போராட்டக் குரல் மங்கியது இல்லை.

திராவிட இயக்க உணர்வும், மார்க்சிய சிந்தனையும் இணைந்த புரட்சிகர இலட்சியவாதியான மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும், சமூக நீதிப் போராட்ட இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

தன்னுடைய உடலைக் கொடையாகக் கொடுத்துள்ள மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment