தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது.
கல்லூரி இறுதி ஆண்டை முடித்துவிட்டு பட்டப்படிப்பு சான்றிதழை பெறவேண்டிய மாணவர்களின் எதிர்காலத்தையும், வேலை வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு நேரம் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடும், கண்ணீரோடும் 9.25 இலட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கிடைத்த வேலைக்கும் செல்ல முடியாமல், பிடித்த வேலைக்கும் செல்ல முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருகின்றார்கள்.
இதுகுறித்து கேட்டபோது, ஆளுநருக்கு நேரம் இல்லை என ஆளுநர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்துவதும், திராவிட மாடல் அரசை குறை சொல்வதுமே ஆளுநரின் அன்றாடப் பணிகளாக இருக்கின்றது.
தனக்கு கிடைத்த மேடைகளை பயன்படுத்தி இந்துத்துவா கருத்துக்களையும், ஆர்.எஸ்.எஸ் மதவாத சித்தாந்தங்களையும் ஆளுநர் பரப்பி வருகின்றார். மதவாத சக்திகளின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை அப்பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கேட்டுக் கொள்ளும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க 20.06.2023 அன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை விளக்கி அவர்களிடமிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெறும் பணியை மறுமலர்ச்சி தி.மு.க முழு வீச்சில் செய்து வருகின்றது.
பொதுவுடைமை இயக்கத்தின் மிக மூத்த தலைவரும், கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரும், தமிழ்நாட்டின் நலனுக்காக அதிக நாட்கள் சிறையில் வாடிய தலைவருமான ஐயா ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் ஆகியோர் ம.தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தார்கள். நான் நேரில் சென்று அவர்களிடம் கையெழுத்துக்களை பெற்றேன்.
இந்நிகழ்வின்போது, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், கழகப் பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டு ஊடகங்களும், நாளிதழ்களும், வார ஏடுகளும் ம.தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும். மக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
21.06.2023