கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசின் செயலிழந்த நிர்வாகத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளை ஒருங்கிணைத்து 26.06.2023 இன்று மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கிருஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக்குழுக்கள் இடையே நடைபெறும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்தக் கலவரத்தில் சிறுபான்மை மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் கலவரத்தை கட்டுப்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது. கலவரம் தொடங்கி 26 நாட்கள் கழித்து தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. ஒரு இன அழிப்புக்கு நிகரான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் குறைந்தபட்சம் மனிதநேய உணர்வோடு கூட அந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் தவறியுள்ளது. மணிப்பூர் மாநிலமே பற்றி எரியும் நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசுகளை கண்டித்து விரிவாக உரையாற்றினேன்.
இந்நிகழ்வில், தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ச.பீட்டர் அல்போன்ஸ், இந்திய தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் IAS, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.சின்னதுரை MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா MLA, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணைத் தலைவர் K.நவாஸ்கனி MP, மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், செங்கை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அ.நீதிநாதன், தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜே.ஜார்ஜ் ஸ்டீபன், சிரோ மலபார் திருச்சபைகள் ஆயர் செபாஷ்டின் பொலொளிப்பரம்பில், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத் தலைவர் K.B.எடிசன், சென்னை மயிலை உயர் மறைமாவட்டம் முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, அட்வெண்ட் திருச்சபைகள் பேராயர் M.G.பகத்சிங், சென்னை சேசு சபை மாநிலத் தலைவர் ஜெபமாலை ராஜா, மாண்போர்ட் சபை தேசிய தலைவர் டாக்டர்.இருதயம், அன்னை அடைக்கல சபை நற்செய்தியாளர் ரேன்சம், MMI சென்னை மாகாண தலைவர் ஆண்டனி ஜெரால்டு, DMI அருட்சகோதரிகள் மாகாண தலைவி L.அருள்சீலி, மறுமலர்ச்சி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன் MC, சைதை ப.சுப்பிரமணி MC, கே.கழககுமார், மாவை மகேந்திரன், பூவை பாபு மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றார்கள்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
26.06.2023
No comments:
Post a Comment