Tuesday, June 27, 2023

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ MP வரவேற்பு!

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சிபெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகரை நியமித்துக்கொள்ளலாம் என்றும், பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இன்றி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், இதற்காக ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி கோரிக்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செயல் வடிவம் கொடுத்தது. நீதிமன்ற குறுக்கீடுகள் காரணமாக அந்த முயற்சிக்கு இடையூறு வந்தது. அதன்பின்னர் திராவிட மாடல் அரசு நடத்தும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் அர்ச்சகர் சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்துள்ளது.
இந்தச் சூழலில், தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டத்தக்க இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது. அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.06.2023

No comments:

Post a Comment